4.3 தஞ்சை நாயக்கர்கள்

தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்தவர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். இவரைத் தொடர்ந்து அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராமபத்திர நாயக்கர், விசயராகவ நாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர். இவர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை 140 ஆண்டுகள் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை நடத்தி வந்தனர். இவர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காண்போம்.

4.3.1 செவ்வப்ப நாயக்கர் (கி.பி.1535-1590)

பல்லவர்களின் தொண்டை மண்டலம், பிற்காலச் சோழ மன்னர்களால் கைப்பற்றப்பட்டு, அவர்கள் காலத்தில் செயங்கொண்ட சோழ மண்டலம் என்று வழங்கப்பட்டது. இம்மண்டலத்தில் உள்ள நெடுங்குன்றம் என்ற ஊரில் செவ்வப்ப நாயக்கர் பிறந்தார். செவ்வப்ப நாயக்கர் விசயநகரப் பேரரசர் அச்சுததேவராயரின் மனைவி திருமாலம்பா தேவியின் தங்கையாகிய மூர்த்திமாம்பா என்பவரை மணந்தார். இந்த நெருங்கிய மணஉறவு முறையில் அச்சுததேவராயருடன் இணைந்த பிறகு, செவ்வப்ப நாயக்கர் தஞ்சையின் நாயக்கராகப் பொறுப்பேற்றார். இவர் தஞ்சையின் நாயக்கராகப் பொறுப்பேற்றதும், சோழமண்டலத்தின் பெரும்பகுதி இவரது ஆளுகையின்கீழ் வந்தது. மேலும் தொண்டை மண்டலமான செயங்கொண்ட சோழ மண்டலத்துப் பகுதிகள் சிலவும் இவரது ஆட்சிக்காலம் முழுவதும் இவரது ஆளுகையின்கீழ் இருந்தன.

செவ்வப்ப நாயக்கர் விசநகரப் பேரரசுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார். விசயநகரப் பேரரசர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளின்போது தஞ்சை நாயக்கரின் பெரும்படையும் இணைந்து பணியாற்றியது. பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிதார் என்னும் நான்கு பகுதிகளின் சுல்தான்களும் ஒன்று சேர்ந்து, விசயநகரப் பேரரசின் மீது படையெடுத்தனர். தலைக்கோட்டை என்னும் இடத்தில் கி.பி.1565 இல் பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் விசயநகரப் படைக்கு, விசயநகரப் பேரரசர் இராமராயர் தலைமை தாங்கி நடத்தினார். இப்படையில் செவ்வப்ப நாயக்கரின் தஞ்சைப் படையும் பங்கேற்றது. இருப்பினும் இப்போரில் விசயநகரப் படைகள் தோல்வியுற்றன. பேரரசர் இராமராயரும் கொல்லப்பட்டார். இப்பெரும்போரால் விசயநகரம் பேரரசு உதயமானதிலிருந்து சந்தித்திராத பெருந்தோல்வியையும் பேரழிவையும் சந்தித்தது.

செவ்வப்ப நாயக்கர் எல்லா மதத்தினரோடும் நட்புறவு கொண்டிருந்தார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் கோபுரங்களில் மிகப் பெரியதும், கிழக்கு வாயிலாக திகழ்வதுமாகிய 11 நிலைகளை உடைய

இராஜகோபுரத்தைக் கட்டிய பெருமை உடையவர் செவ்வப்ப நாயக்கர். மேலும் இவர் திருப்பதி, ஸ்ரீசைலம் ஆகிய கோயில் கோபுரங்களின் விமானங்களுக்குப் பொன் வேய்ந்தார்; தஞ்சையில் உள்ள இசுலாமியர் மசூதி ஒன்றுக்கு ஏழுவேலி நிலம் வழங்கினார்; கிறித்தவர்களுக்கும் பல உதவிகள் செய்தார். இவர் காலத்தில் இவருக்கும் மதுரை நாயக்கருக்கும் இடையிலான உறவு குறித்து அறிய இயலவில்லை.

4.3.2 அச்சுதப்ப நாயக்கர் (கி.பி.1564-1617)

இவர் செவ்வப்ப நாயக்கரின் ஒரே மகன் ஆவார். மேலும் இவர் கி.பி.1564 முதல் 1590 வரை 26 ஆண்டுகள் தந்தையுடன் இணைந்து தஞ்சை ஆட்சிப் பொறுப்பைக் கவனித்து வந்தார். செவ்வப்ப நாயக்கர் கி.பி.1590இல் மறைந்தார். அதே ஆண்டில் அச்சுதப்ப நாயக்கர் தஞ்சை நாயக்கராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விசயநகரப் பேரரசை ஆண்டு வந்தவர் வேங்கடபதிராயர் என்பவர் ஆவார். இவரிடம் அச்சுதப்ப நாயர் அரசு விசுவாசத்தோடும், நன்றி உடையவராகவும் திகழ்ந்தார். வேங்கடபதிராயர் விசயநகரப் பேரரரசரானதும், கோல்கொண்டா சுல்தான் பெரும்படையுன் வந்து, வேங்கடபதிராயரின் பெணுகொண்டா கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் வெகுண்ட வேங்கடபதிராயர் அச்சுதப்ப நாயக்கருக்குத் தகவல் அனுப்பினார். உடனே அச்சுதப்ப நாயக்கர் தன் மகன் இரகுநாத நாயக்கர் தலைமையில் பெரும்படை ஒன்றைத் தஞ்சையிலிருந்து அனுப்பி வைத்தார். அப்படை கோல்கொண்டா சுல்தானின் படையை வெற்றி கண்டு, பெணுகொண்டா கோட்டையை மீட்டுக் கொடுத்தது.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கும் தஞ்சைக்கும் பகையுணர்வு வளர்ந்தது. விசயநகரப் பேரரசர்களுக்கு எதிராக மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் செயல்பட்டபோது அச்சுதப்ப நாயக்கர் விசயநகரப் பேரரசர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இதுவே பகைக்கு அடிப்படை. தலைக்கோட்டைப் போருக்குப் பின் மதுரை நாயக்கர் தனியாட்சி நடத்த விரும்பினர். தஞ்சை நாயக்கராகிய இவரோ விசயநகரப் பேரரசுக்குப் பணிந்து வாழவே விரும்பினார்.

அச்சுதப்ப நாயக்கர் தன் தந்தையாரைப் போலவே எல்லாச் சமயங்களையும் மதித்து நடந்தார். திருவண்ணாமலைக் கோபுரங்களின் மேல் தங்கக் குடம் அளித்தார். திருவிடை மருதூர்க் கோயில் தேர்த்திருவிழா நடைபெற ஊர் அளித்தார். திருவரங்க நாதர் கோயிலில் திருவரங்கனுடைய விமானத்தைப் பொன் தகடுகளால் போர்த்தார். மூவலூர் மார்க்கசகாயர் ஆலயத்திற்கு நிலக்கொடை, சத்திரம் நிருவகிக்கக் கொடை ஆகியன வழங்கினார்.

இவர் தம்முடைய ஆட்சிக் காலத்திலேயே (கி.பி.1610இல்) தன் மகன் இரகுநாத நாயக்கருக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, அரசியல் பயிற்சி பெற வழி செய்தார்.

4.3.3 இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645)

தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர் இரகுநாத நாயக்கர். இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

இவர் தமது ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டார். ஈழத்தில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சையை நோக்கித் திரும்பும் வழியில் தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் என்பவனோடு போரிட்டார். ஜக்கராயன் விசயநகரப் பேரரசுக்கு உட்பட்ட கோலார் பகுதியை ஆண்டு வந்தவன் ஆவான். இவன் விசயநகரப் பேரரசைக் கவரச் சதி செய்தான். இதனை யாசம நாயக்கர் என்ற குறுநில அரசர் அறிந்தார். இவர் விசயநகரப் பேரரசின் விசுவாசி ஆவார். யாசம நாயக்கர் ஒரு பெரும்படை திரட்டிச் சென்று ஜக்கராயனோடு போரிட்டார். போர் கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் என்னும் இடத்தில் கி.பி.1616இல் நடைபெற்றது. இப்போரில் ஜக்கராயனுக்கு மதுரை, செஞ்சி நாயக்கர்கள் துணைநின்றனர். ஜக்கராயன் செஞ்சி, மதுரை நாயக்கர்களோடு சேர்ந்து கொண்டு தஞ்சைக்கு மேற்கே உள்ள கல்லணையை இடிக்க முற்பட்டான். இதனை அறிந்த இரகுநாத நாயக்கர் பெரும்படையுடன் சென்று தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் படைகளோடு பெரும்போர் செய்தார். ஜக்கராயனுக்குத் துணைநின்ற மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் தோல்வியுற்றுப் போர்க்களம் விட்டோடினர். ஆனால் ஜக்கராயன் போரில் கொல்லப்பட்டான். இரகுநாத நாயக்கர் மாபெரும் வெற்றி பெற்றார். தோப்பூர்ப் போர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராகக் கருதப்படுகிறது. இரகுநாத நாயக்கர் தம் முன்னோர் போல, விசயநகரப் பேரரசிற்கு ஆதரவாளராகவே இருந்தார்.

இரகுநாத நாயக்கர் காலத்தில் டச்சு, டென்மார்க், இங்கிலாந்து, போர்த்துகீசு வாணிகர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்து வாணிபத்திற்காகப் போட்டியிட்டனர். டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடி என்னும் சிறு துறைமுகப்பட்டினத்தில் தங்கி வாணிபம் செய்ய இரகுநாத நாயக்கர் அனுமதி வழங்கினார். டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியில் சிறுகோட்டை ஒன்றும் அமைத்தனர். இரகுநாத நாயக்கர், டென்மார்க் நாட்டவரின் கப்பலைத் தாக்கி மூழ்கடித்த போர்த்துகீசியரைக் கண்டித்து, அவர்கள் செய்த குற்றத்திற்காகப் பன்னீராயிரம் பொன்னைத் தண்டமாக வசூலித்தார். மேலும் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்த நான்காம் கிறிஸ்தியன் என்பவருக்குத் தங்கத் தகட்டில் நட்புறவுக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். எனவே இரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டவரோடு கொண்ட வாணிப உறவும் நட்புறவும் புலனாகின்றன.

4.3.4 விசயராகவ நாயக்கர் (கி.பி. 1631-1675)

இவர் இரகுநாத நாயக்கரின் மகன் ஆவார். இவர் தம் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே கி.பி.1631இல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்று, அரசு பொறுப்புகளைத் தந்தையாருடன் இணைந்து கவனித்து வந்தார். இரகுநாத நாயக்கர் கி.பி. 1645இல் மறைந்ததும் அதே ஆண்டில் விசயராகவ நாயக்கர் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

மதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது. இவருடைய மகளைப் பெண்கேட்டு, மதுரை நாயக்கர் சொக்கநாத நாயக்கர் தூது விடுத்தார். ஆனால் இவர் மகளைக் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என்னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விசயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார்.

விசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.