4.4 செஞ்சி - வேலூர் நாயக்கர்கள்

தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து நேரிட்ட பெருங்குழப்பத்தின்போது தமிழகத்தில் மதுரையிலும், தஞ்சையிலும், செஞ்சியிலும் விசயநகரப் பேரரசின் சார்பில் அரசு புரிந்துவந்த நாயக்கர்கள் தனித்தனியே தத்தம் நாட்டு மன்னர்களாக முடிசூட்டிக் கொண்டார்கள். ஆயினும், வேலூர் நாயக்கர்களும், மைசூர் உடையார்களும் தொடர்ந்து விசயநகரத்து மன்னரின் தலைமையை ஏற்று வந்தனர்.

4.4.1 செஞ்சி நாயக்கர்கள்

விசயநகரப் பேரரசின் கீழ் செஞ்சியானது படை பலத்திலும், அரசு ஆதிக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையைப் பெற்றிருந்தது. சிதம்பரத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லைக் கோயிலில் உள்ள கோவிந்தராசப் பெருமாளின் சிலையை அகற்றிவிட்ட பிறகு முதன்முதல் அங்கு மீண்டும் ஒரு சிலையை அப்பெருமாளுக்கு அமைத்துக் கொடுத்த பெருமை செஞ்சியின் தலைவன் கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவரையே சாரும். மேலும் சிதம்பரம் திருச்சித்திரக் கூடத்துக்கு இவர் பல பெரும் திருப்பணிகள் செய்தார். இவரது திருப்பணிகளைச் சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். எனினும் கிருஷ்ணப்ப நாயக்கரின் திருப்பணிகள் ஓயவில்லை. பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேலேறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனாலும் கிருஷ்ணப்ப நாயக்கரின் உள்ளம் நெகிழவில்லை. அவர் வெகுண்டு தீட்சிதர்களின் மேல் துப்பாக்கியால் சுட்டார். இதில் பல தீட்சிதர்கள் குண்டடிபட்டு இறந்தனர். இதனால் இவர் துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்று அழைக்கப்பட்டார்.

வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் கிருஷ்ண பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து அதில் ஜெசூட் பாதிரியார்கள் என்று கூறப்படும் ஏசு சபையினர்களுக்கு மாதா கோயில்கள் கட்டிக்கொள்ள உரிமை வழங்கினார். அவ்வூர் இப்போது பறங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.

4.4.2 வேலூர் நாயக்கர்கள்

வேலூரில் சின்ன பொம்ம நாயக்கர் என்பவர் விசயநகர பேரரசின்கீழ் கி.பி.1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு வந்தார் என்பர். வேலூர்க் கோட்டையையும் அதனுள் இருக்கும் சலகண்டேசுவரர் கோயிலையும் கட்டியவர் இந்நாயக்கர்தான்.

மேலும் இவர் அப்பைய தீட்சிதர் என்ற புலவரின் புலமையைப் பாராட்டிக் கனகாபிடேகம் செய்தார்.