6.2 மராட்டிய மன்னர்கள் 
       ஏகோஜி கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அங்கு 
        முதன்முதலில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். அவர் உட்பட மொத்தம் பதின்மூன்று 
        மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். இவர்களைத்தான் தஞ்சை 
        மராட்டியர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் கி.பி.1676 
        முதல் 1855 வரை 180 ஆண்டுகள் தஞ்சையில் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் ஏகோஜி, 
        ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, பிரதாப் சிங், துல்ஜாஜி, இரண்டாம் சரபோஜி 
        ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் 
        காண்போம். 
6.2.1 ஏகோஜி 
(கி.பி.1676-1684) 
இவருக்கு வெங்காஜி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் மராட்டிய போன்ஸ்லே 
மரபிலே தோன்றிய ஷாஜி போன்ஸ்லே என்பவரின் மகன் ஆவார். ஷாஜி போன்ஸ்லே 
பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராகப் பணியாற்றினார். அக்காலத்தில் இசுலாமிய 
மன்னர்கள் தங்களுக்கு வெற்றி தேடித் தந்த படைத்தலைவர்களுக்கு,
தங்கள் 
ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உள்ள ஒரு சிறு நிலப்பகுதியை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை 
ஆட்சி செய்வதற்கு உரிமையாக வழங்கினர். அந்த நிலப்பகுதி ஜாகீர் எனப்பட்டது. 
ஷாஜி போன்ஸ்லே தென்னிந்தியாவில் படையெடுத்துப் பெற்ற வெற்றிக்கு மகிழ்ந்த பீஜப்பூர் 
சுல்தான் அவருக்குப் பெங்களூரு பகுதியை ஜாகீராக வழங்கினான். 
       ஷாஜி போன்ஸ்லேவுக்கு இரு மனைவியர் இருந்தனர். 
        முதல் மனைவி துர்க்காபாய்  ஆவார். இவருக்குக் கி.பி.1630இல் ஏகோஜி 
        பிறந்தார். இரண்டாம் மனைவி ஜிஜாபாய்  ஆவார். இவருக்குக் கி.பி. 1629இல் 
        சத்திரபதி சிவாஜி பிறந்தார். சத்திரபதி சிவாஜி தக்காணத்தில் 
        மாபெரும் மராட்டியப் பேரரசை நிறுவி, அதனைக் கி.பி.1674 முதல் 1680 வரை அரசாண்டவர் 
        ஆவார்.  
ஏகோஜி தன் தந்தையைப் போலவே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராக இருந்தார். 
கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார். தன் தந்தை ஷாஜியின் 
கட்டளைப்படி ரகுநாத் பந்த் என்பவரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டார். 
இருப்பினும் சில நாட்களில் ஏகோஜியிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுநாத் 
பந்த் சிவாஜியிடம் சென்று அவர்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினார். 
ஏகோஜி அரச தந்திரமும், ஆட்சித் திறனும் மிக்கவர். மாபெரும் வீரராகவும் திகழ்ந்தார். 
இருந்தபோதிலும் அவர் தனது ஆட்சியின் முற்பகுதியில் தன்னுடைய தமையனார் சிவாஜியின் 
தொல்லைக்கு உட்பட வேண்டியவராகவே இருந்தார். 
ஏகோஜியும் 
சிவாஜியும் 
        சத்திரபதி சிவாஜி தக்காணப் 
        பீடபூமியில் ஆங்காங்கு நடந்துவரும்   
        இசுலாமியர் ஆட்சியை ஒழித்து, இந்துப் பேரரசு ஒன்றை நிறுவப் பெரிதும் பாடுபட்டவர் 
        ஆவார். இவர் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்த மராட்டிய நாட்டை மீட்டு, கி.பி. 
        1674இல் அந்நாட்டின் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். இவர் மொகலாய மன்னர்களை 
        எதிர்த்துப் போர் செய்வதற்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது. எனவே பெரும்பொருளைத் 
        திரட்டுவதற்காகவும், தக்காண பீடபூமியில் இசுலாமியர் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் 
        சிவாஜி கி.பி. 1676இல் தென்னிந்தியாவின் மீது படையெடுத்தார். அவருடைய படை 
        30,000 குதிரை வீரர்களையும், 20,000 காலாட்படை வீரர்களையும் கொண்டிருந்தது. 
       பெரும்படையுடன் தமிழகத்தினுள் புகுந்த சிவாஜி 
        பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்தில் இருந்த செஞ்சிக்கோட்டையையும், 
        வேலூர்க் கோட்டையையும் கைப்பற்றினார்.  
      
      பின்பு கடலூருக்கு 20கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகை 
        என்னும் ஊரில் இருந்து அரசாண்டு வந்த ஷெர்கான் லோடி என்பவனைத் 
        தோற்கடித்தார். அதன்பின்னர்க் கடலூரை விட்டுப் புறப்பட்டு, வெள்ளாற்றைக் 
        கடந்து கொள்ளிட ஆற்றின் கரையில் உள்ள  திருமழபாடி என்னும் ஊரில் வந்து 
        தங்கினார். (திருமழபாடி – தஞ்சைக்கு வடக்கே 16கி.மீ. தொலைவில் உள்ளது.) 
        அவ்வூரில் வந்து தன்னைக் காணும்படி ஏகோஜிக்குக் கடிதம் எழுதினார். ஏகோஜியும் 
        சிவாஜியைச் சென்று கண்டார். அப்போது சிவாஜி ஏகோஜியிடம் தந்தையார் சொத்தில் 
        (ஜாகிரில்) பாதியையும், ஏகோஜிக்கு உரிய நாட்டில் சரிபாதியையும் கொடுக்கும்படி 
        வற்புறுத்தினார். ஏகோஜி சிவாஜியிடம் ஒன்றும் பேசாமல் வெறுமனே தலையசைத்துக் 
        கொண்டிருந்தார். பின்பு சிவாஜிக்கு அஞ்சி இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 
        ஒரு கட்டுமரத்தில் ஏறிக் கொள்ளிடத்தைக் கடந்து தஞ்சைக்குப் போய்விட்டார். 
        சிவாஜி தன் தம்பியின் செய்கை குறித்துப் பெரிதும் வருந்தினார். பின்பு கொள்ளிடத்திற்கு 
        வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். ரகுநாத் பந்திடம் 
        தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்து வருமாறு ஒப்படைத்துவிட்டு, சிவாஜி மராட்டிய 
        தலைநகருக்குத் திரும்பினார். 
சிவாஜி திரும்பியதும் ஏகோஜிக்கு அதுவரை இருந்துவந்த அச்சம் நீங்கிவிட்டது. உடனே 
அவர் சிவாஜியிடம் தான் இழந்த பகுதிகளை மீட்க எண்ணி மதுரைச் சொக்கநாதர், மைசூர்ச் 
சிக்கதேவராயன், பீஜப்பூர் சுல்தான் ஆகியோரிடம் படையுதவி வேண்டினார். ஆனால் 
அவர்கள் சிவாஜியின் பெருவெற்றியை நினைத்து, ஏகோஜிக்குப் படையுதவி செய்ய 
மறுத்துவிட்டார்கள். பின்பு ஏகோஜி பெரும்படை ஒன்றைத் திரட்டிச் சென்று, 
கொள்ளிடத்தின் வடக்கே வாலிகொண்டாபுரம் என்னும் இடத்தில் இருந்த சிவாஜியின் 
படைகளைத் தாக்கிப் போர் புரிந்தார். தொடக்கத்தில் ஏகோஜி வென்றார். எனினும் 
இறுதியில் சிவாஜியின் படை ஏகோஜியின் படையைத் தோற்கடித்தது. 
       இச்செய்திகளை எல்லாம் ரகுநாத் பந்த் சிவாஜிக்கு 
        ஒரு கடிதத்தில் எழுதினார். அதற்குப் பதிலாக சிவாஜி ஒரு நீண்ட கடிதத்தை ஏகோஜிக்கு 
        எழுதினார். அதில் ரகுநாத் பந்தோடு கலந்து பேசி ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு 
        ஏகோஜிக்கு அறிவுறுத்தினார். ஏகோஜியின் மனைவி தீபாபாய் என்பவளும் அவரைத் 
        தன் தமையனார் சிவாஜியோடு ஒத்துப்போகுமாறு வற்புறுத்தினாள். அதற்கு இணங்கிய 
        ஏகோஜி ரகுநாத் பந்தைத் தஞ்சைக்கு வரச்செய்தார். அவர் முன்னிலையில் நிரந்தரமான 
        உடன்படிக்கை ஆவணம் எழுதப்பட்டது. அந்த ஆவணம் பத்தொன்பது விதிகளைக் கொண்டிருந்தது. 
        பதினாறாவது விதியில் சிவாஜி, தான் தஞ்சையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் 
        வெற்றி கொண்டதாகவும், அவற்றை மனப்பூர்வமாக ஏகோஜிக்குக் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
       கி.பி.1680இல் சிவாஜி இறந்தார். அதன்பின்பு ஏகோஜி யாருடைய 
        தலையீடும் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்பட்டுக் கி.பி.1684 வரை தஞ்சையைத் 
        திறம்பட ஆட்சி செய்துவந்தார். 
ஏகோஜிக்கு ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்காஜி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். 
இவர்கள் மூவரும் ஏகோஜிக்குப் பின்னர் ஒருவருக்குப்பின் ஒருவராகத் தஞ்சை மராட்டிய 
அரியணை ஏறி ஆட்சி செய்தவர்கள் ஆவர். 
ஏகோஜி செய்த 
சீர்திருத்தங்கள் 
ஏகோஜி தஞ்சை நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறவேண்டி, நாட்டில் உள்ள பல காடுகளைத் 
திருத்தி அவற்றை விளைநிலங்களாக்கினார். குளம், வாய்க்கால், ஏரிகளை வெட்டிச் 
செப்பனிட்டுப் பாசன வசதிகளை உண்டாக்கி நாட்டில் வளம் பெருக்கினார். பல போர்களினால் 
நெடுங்காலம் பாசன வசதி இன்றிக் கிடந்த தஞ்சை நாடு ஏகோஜி செய்த சீர்திருத்தங்களால் 
விளைச்சல் மிகவே வளம் கொழிக்கலாயிற்று. இதனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி 
அடைந்தார்கள். 
ஏகோஜியின் நிருவாக 
முறை 
        ஏகோஜியின் ஆட்சியில் தஞ்சை நாடு பல நிருவாகப் 
        பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஆங்காங்குத் தேவையான இடங்களில் பாளையக்காரர்கள் 
        நியமிக்கப்பட்டனர். இவருடைய ஆளுகைப் பகுதியின் தென்புறம் கள்ளர் பாளையக்காரர்களும், 
        வடபுறம் வன்னியப் பாளையக்காரர்களும் காவல் காக்கும் பொறுப்பையும், இறை (வரி) 
        வசூலிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தனர். சிற்றூர்களில் காவல்காரர் முதல் 
        சுபேதார் (இராணுவ அதிகாரி) வரை அரசியல் அலுவலர் நியமிக்கப்பட்டனர். 
6.2.2 ஷாஜி (கி.பி. 
1684-1712) 
ஏகோஜிக்குப் பின்னர் அவருடைய மூத்த மகன் ஷாஜி என்பவர் தஞ்சை மராட்டிய 
அரசரானார். இவரது ஆட்சிக் காலத்தில் திருச்சியை உள்ளடக்கிய மதுரை நாட்டை 
மங்கம்மாளும் (கி.பி. 1689-1706), மறவர் சீமை எனப்படும் சேதுநாட்டைச் 
சேதுபதியும் (கி.பி. 1674-1710) ஆண்டு வந்தனர். 
       இவர்களது காலத்தில் மொகலாய மன்னன் ஔரங்கசீபு 
        (கி.பி. 1658-1707) இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டுவந்தான். தென்னகத்தில் 
        அவனை எதிர்த்து வந்த சத்திரபதி சிவாஜியும் கி.பி.1680இல் மறைந்துவிட்டார். 
        எனவே தென்னகத்தில் ஔரங்கசீபுவின் ஆட்சி ஏற்படலாம் என எண்ணிய பல அரசர்கள் 
        அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். ஷாஜியும் ஔரங்கசீபுவுக்குத் தலைவணங்கித் 
        திறைசெலுத்தி ஆண்டு வரலானார். இதனால் மனத்திட்பம் அடைந்த ஷாஜி மங்கம்மாளின் 
        மதுரை நாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டில் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்றிக் 
        கொண்டார். ஷாஜி மன்னர் ஔரங்கசீபுவுக்குத் திறை செலுத்தி வந்த காரணத்தால் 
        மங்கம்மாளால் அவரோடு போர் புரிந்து அப்பகுதிகளை மீட்க முடியவில்லை. கி.பி.1697இல் 
        ஔரங்கசீபுவின் படைத்தலைவன் சுல்பிர்கான் தெற்கே வந்தபோது, 
        அவனுக்கு விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவனுடைய உதவியால் 
        ஷாஜி கைப்பற்றியிருந்த தன் மதுரை நாட்டுப் பகுதிகளை மங்கம்மாள் எளிதாக மீட்டுக் 
        கொண்டாள். இருப்பினும் ஷாஜிக்கும் மங்கம்மாளுக்கும் இடையே போர் நடைபெற்றுக் 
        கொண்டே இருந்தது. 
கி.பி. 1700இல் ஷாஜி தன் படைத்தலைவனை மதுரை நாட்டில் அடங்கியிருந்த திருச்சிப் 
பகுதிக்கு அனுப்பினார். அவனும் தன் படைவீரர்களுடன் திருச்சிப் பகுதியில் நுழைந்து 
கொள்ளையடித்தான். இதனை அறிந்த மங்கம்மாள் அக்கொள்ளையைத் தடுக்கத் தன் படைத்தலைவன்
நரசப்பய்யா என்பவனை அனுப்பினாள். அவன் தஞ்சை நாட்டிற்குள் தன் 
படைவீரர்களுடன் புகுந்து அங்குள்ள நகரங்களைக் கொள்ளையடித்தான். மதுரைப் படைவீரர்களை 
வென்று அடக்கமுடியாத நிலையில் ஷாஜி தன் முதல் அமைச்சர் பாலோஜி என்பவரை 
அனுப்பினார். பாலோஜி பெரும் பொருள்களைக் கொடுத்து நரசப்பய்யாவுடன் ஓர் ஒப்பந்தம் 
செய்து கொண்டார். இதன் வாயிலாக ஷாஜிக்கும் மங்கம்மாளுக்கும் இடையே நட்புறவு 
ஏற்பட்டது. 
கி.பி. 1702இல் மங்கம்மாளுக்கும் சேதுபதிக்கும் இடையே போர் மூண்டது. அப்போது ஷாஜி 
மங்கம்மாளுடன் கொண்டிருந்த நட்புறவைக் கைவிட்டுச் சேதுபதியோடு சேர்ந்து கொண்டு 
மங்கம்மாள் படையுடன் போர் புரிந்தார். இப்போரில் மங்கம்மாளின் படை தோல்வியுற்றது. 
அப்படைக்குத் தலைமை தாங்கி வந்த நரசப்பய்யாவும் கொல்லப்பட்டான். தனக்கு உதவி 
செய்ததற்காக, சேதுபதி ஷாஜிக்கு அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் சில ஊர்களை 
இனாமாக வழங்கினார். 
ஆனால் எக்காரணத்தாலோ ஷாஜிக்கும் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
கி.பி.1709இல் சேதுபதியின் மறவர் சீமை பஞ்சத்தாலும், புயலாலும், வெள்ளத்தாலும் 
பெருந்துயர் உற்றது. அந்நேரத்தில் ஷாஜி சேதுபதியின் மீது போர் தொடுக்க எண்ணினார். 
ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிவைத்தார். அப்போது நடந்த போரில் சேதுபதி ஷாஜியின் படையை 
வென்றதோடு, அறந்தாங்கிக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டார். இத்தோல்விக்குப் 
பின்னர் ஷாஜி சேதுபதியுடன் மீண்டும் உடன்பாடு செய்து கொண்டார். 
       ஷாஜி தஞ்சை நாட்டில் மானாம்புச் சாவடி என்னும் 
        ஊரில் விஜயமண்டபம் அமைத்து அதில் தியாகராசப் பெருமானை எழுந்தருளச் செய்தார். 
        அவர் காலத்துச் செப்பேட்டில் அவர் கொடுத்த நன்கொடையைப் பற்றிக் காணலாம். 
        அவரது ஆட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை என்னும் ஊரில் குடியிருந்த குடியானவர்களும், 
        அக்கிரகாரத்தில் இருந்த பெருமக்களும் ஒன்றாகக் கூடி, அகதிகளாக வந்த பிராமணர்களுக்கும் 
        பரதேசிகளுக்கும் அன்னதானம் செய்வதற்காகவும், திருவாரூர்க் கோயிலில் உள்ள 
        தியாகராசர், வன்மீகேசுவரர், கமலாலயம்மன், அல்லியங்கோதையம்மன் சன்னிதிகளில் 
        திருப்பணி செய்வதற்காகவும், அச்சன்னிதிகளில் அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்காகவும் 
        கொடை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக நன்செய், புன்செய் விளைச்சலில் 100 
        கலத்துக்கு ஒரு குறுணி வீதம் சந்திரசூரியர் உள்ளமட்டும் பரம்பரை பரம்பரையாகத் 
        திருவாரூர்க் கோயிலுக்குச் செலுத்தவேண்டும் என்று செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 
        (பண்டாரவாடை – தஞ்சாவூருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 
        22 கி.மீ. தொலைவில் உள்ளது.) 
6.2.3 முதலாம் 
சரபோஜி (கி.பி. 1712-1728) 
ஷாஜி மன்னர் கி.பி.1712இல் வாரிசின்றி மறைந்தார். எனவே அவர் மறைந்ததும் அவரது தம்பி
முதலாம் சரபோஜி தஞ்சை அரியணை ஏறினார். இவரது ஆட்சிக் காலத்தில் மறவர் 
நாட்டில் (இராமநாதபுரச் சீமையில்) அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மறவர் நாட்டில் 
சேதுபதி மன்னர் கி.பி.1710இல் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் மறவர் 
வழக்கப்படி விஜயரகுநாதத் தேவர் பதவியேற்றார். அவர் கி.பி.1720இல் வாரிசு 
இன்றி இறந்துபட்டார். எனவே மறவர் நாட்டின் ஆட்சியைப் பெற, சேதுபதிக்குக் 
காமக்கிழத்தியர் மூலம் பிறந்த பவானி சங்கரன், தொண்டத் தேவர் ஆகிய இருவரும் 
தம்முள் போரிட்டனர். மதுரை, புதுக்கோட்டை மன்னர்கள் தொண்டத்தேவர் பக்கம் நின்றனர். 
பவானிசங்கரன் முதலாம் சரபோஜியின் உதவியை நாடினான். தனக்கு உதவிசெய்து தன்னை மறவர் 
நாட்டு அரியணை ஏற்றினால், பாம்பனுக்கு வடக்கில் உள்ள பகுதிகளை அவருக்கு அளிப்பதாகப் 
பவானிசங்கரன் உறுதி கூறினான். முதலாம் சரபோஜி பவானிசங்கரனுக்கு உதவியாக நின்று, 
அவனை அரியணை ஏற்றினார். ஆனால் பவானிசங்கர் தான் வாக்குறுதி அளித்தபடி அப்பகுதிகளை 
முதலாம் சரபோஜிக்குத் தரவில்லை. எனவே சரபோஜி மறவர் படையோடு போரிட்டு வென்று 
பவானிசங்கரனைச் சிறைசெய்து தஞ்சைக்குக் கொண்டு சென்றார். அதன்பின்பு சரபோஜியால் 
மறவர் நாடு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி தஞ்சையுடன் சேர்த்துக் 
கொள்ளப்பட்டது. மற்ற இருபகுதிகளாகச் சிவகங்கையும், இராமநாதபுரமும் உருவாக்கப்பட்டன. 
இவரது காலத்தில் வாணிகர்களுக்கு வணிக இடங்கள் ஒதுக்கப்பட்டன. உயர் அலுவலர்கள் நாடு 
முழுவதும் சுற்றி வந்தனர். கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய வரிகள் நிர்ணயம் 
செய்யப்பட்டன. சிதைந்து அழிந்துபோன திருவாரூர்க் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பல 
கோயில்களுக்கு முதலாம் சரபோஜியே நேரில் சென்று கொடைகள் கொடுத்தார். தஞ்சைப் பெரிய 
கோயில் குடமுழுக்கு விழா இவர் காலத்தில் நடைபெற்றது. 
6.2.4 துக்கோஜி 
(கி.பி. 1728-1736) 
முதலாம் சரபோஜிக்கு முறையான ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் மறைந்ததும் அவரது தம்பி 
துக்கோஜி என்பவர் கி.பி.1628இல் தஞ்சை மராட்டிய அரியணை ஏறினார். இவரது ஆட்சிக் 
காலத்தில் மதுரையை மீனாட்சி அரசி (கி.பி. 1732-1736) ஆண்டுவந்தாள். அவள் 
திருச்சிக் கோட்டையிலிருந்து மதுரையை ஆண்டு வந்தபோது, அவளுக்குப் பாளையக்காரர்கள் 
தொல்லை தந்தனர். துக்கோஜி மீனாட்சி அரசிக்கு ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பி உதவினார். 
இதனால் மீனாட்சி அரசி மகிழ்ந்து துக்கோஜிக்குத் திருக்காட்டுப்பள்ளி என்னும் 
ஊரின் வருவாயை அனுபவிக்குமாறு அளித்தாள். 
துக்கோஜி இசைமேதையாகவும், மருத்துவ வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்துஸ்தானி இசையை 
அறிமுகப்படுத்தியவர் இவரே. இவர் சங்கீதசாகரம் என்ற இசைநூலை இயற்றியுள்ளார். 
இவர் முதலாம் துளசா என்றும் அழைக்கப் பெற்றார். 
துக்கோஜிக்குப் 
பின் 
துக்கோஜி கி.பி.1736இல் மறைந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களில் முதல் இருவர் 
இறந்தனர். மூன்றாவது மகன் பாவாசாகிப் என்ற இரண்டாம் ஏகோஜி 
கி.பி.1736இல் பதவியேற்று ஓராண்டு மட்டுமே ஆட்சி புரிந்து மறைந்தார். அவருக்குப் 
பின் அவருடைய மனைவி சுஜன்பாய் என்பவர் இரண்டு ஆண்டுகள் ஆண்டார். அதன் பின்பு 
துக்கோஜியின் நான்காம் மகன் சாகுஜி என்பவர் தஞ்சை மராட்டிய அரசர் ஆனார். 
இவர் ஓராண்டு மட்டுமே ஆட்சி புரிந்தார், இவர் தனது ஆட்சிக்காலத்தில் 
பிரெஞ்சுக்காரர்கள் காரைக்காலில் புகுவதைத் தடுத்தார். இதனால் பிரெஞ்சுக்காரர்களின் 
ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் 
சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் 
என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். 
6.2.5 பிரதாப் சிங் 
(கி.பி. 1739-1763) 
சந்தாசாகிபு உதவியால் பிரதாப் சிங் கி.பி.1739இல் தஞ்சை அரியணை ஏறினார். 
இவர் ஆட்சிக்கு வந்ததும் சந்தாசாகிபுவால் கைது செய்யப்பட்ட சாகுஜி தப்பி 
ஓடி, மீண்டும் தஞ்சை அரியணை ஏற ஆங்கிலேயர் உதவியை நாடினார். இந்த உதவியைச் செய்தால் 
ஆங்கிலேயருக்குத் தேவிகோட்டை என்னும் கோட்டையைத் தருவதாக சாகுஜி கூறினார். (தேவிகோட்டை
– 
கொள்ளிடம் ஆறு வங்காள விரிகுடா கடலில் கலக்கும் இடத்தில் உள்ள பறங்கிப் பேட்டைக்கு 
அருகில் இருந்த கோட்டையாகும்.) 
ஆங்கிலேயர் சாகுஜிக்கு உதவ, கி.பி.1740இல் கேப்டன் காப் 
(Captain Cope) 
என்பவர் தலைமையில் 
படை ஒன்றைத் தஞ்சைக்கு அனுப்பினர். இதை அறிந்த பிரதாப் சிங் அப்படையை எதிர்கொண்டு 
முறியடிக்க, தன் படைத்தலைவர் மனோஜிராவ் என்பவரை ஒரு படையுடன் 
அனுப்பிவைத்தார். மனோஜிராவ் தலைமையில் சென்ற அப்படை, ஆங்கிலேயப் படையைக் கடலூரை 
நோக்கித் திரும்பி ஓடுமாறு விரட்டியத்தது. 
எனினும் ஆங்கிலேயர் கி.பி. 1749இல் ஒரு பெரும்படையெடுப்பைத் தேவிகோட்டையின் மீது 
நடத்தினர். அப்போது நடந்த போரில் ஆங்கிலேயரை வெற்றி கொள்ள முடியாத நிலையில், 
மனோஜிராவ் அவர்களுடன் ஓர் அமைதி உடன்பாட்டினைச் செய்துகொண்டார். அதன்படி பிரதாப் 
சிங் ஆங்கிலேயர்க்குத் தேவிகோட்டையைத் தரவும், சாகுஜிக்கு ஆண்டுதோறும் 4000 ரூபாய் 
வாழ்நாள் ஊதியமாக வழங்கவும் ஒப்புக்கொண்டார். 
       
       இவரது ஆட்சிக் காலத்தில் வலங்கை – இடங்கைச் சாதிப் 
          
        பூசல்கள் பல ஏற்பட்டன. ஆனால் அவை இவரால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. 
        இவர் நாகூர் தர்காவில் 131 அடி உயரமுடைய கோபுரம் ஒன்றைக் கட்டினார். இது 
        பெரிய மினார் என்று அழைக்கப்படுகிறது. (மினார் – கோபுரம்) 
        இவரது காலத்தில் கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் உள்ள இடங்களுக்கு 
        எல்லாம் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் சேர்ந்து சென்று, அந்நிலங்களை அளந்து 
        சரிபார்த்தனர். 
6.2.6 துல்ஜாஜி 
(கி.பி. 1763-1787) 
பிரதாப்சிங் மறைந்தபின்பு, அவருடைய மூத்த மகன் துல்ஜாஜி என்பவர் 
கி.பி.1763இல் ஆட்சிக்கு வந்தார். தஞ்சை மராட்டிய மன்னர்களில் மிகவும் வலிமை 
குன்றியவராக இவர் விளங்கினார். கி.பி.1773இல் ஆர்க்காட்டு நவாபு முகமது அலிகான் 
என்பவன் படையெடுத்து வந்து தஞ்சையைக் கைப்பற்றி, துல்ஜாஜியைக் கைது செய்தான். 
கி.பி.1773 முதல் 1776 வரை மூன்று ஆண்டுகள் தஞ்சை ஆர்க்காடு நவாபு முகமது 
அலிகான் ஆட்சியின் கீழ் இருந்தது. 
நவாப் முகமது அலிகானின் செயல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர்களுக்கு 
வெறுப்பை ஊட்டியது. அவர்கள் துல்ஜாஜியைச் சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் 
அவரைத் தஞ்சை அரியணையில் ஏற்ற முடிவு செய்தனர். ஜார்ஜ் பிகட் 
(George Pigot) 
என்பவரைத் 
தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தஞ்சைக்கு வந்து துக்காஜியை விடுவித்து, அவரை 
கி.பி. 1776இல் தஞ்சை அரியணையில் அமர்த்தினார். அதன்பின்பு துல்ஜாஜி பெயரளவில் 
மட்டுமே தஞ்சை மன்னராக இருந்தார். துல்ஜாஜியின் படைகள் கலைக்கப்பட்டன. 
அப்படைகளுக்குப் பதிலாக ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் 
நியமிக்கப்பட்டன. மேலும் துல்ஜாஜி ஆங்கிலேயருக்கத் தஞ்சை நாட்டில் உள்ள நாகூரையும் 
அதனை அடுத்துள்ள 277 ஊர்களையும் அளித்தார். 
6.2.7 இரண்டாம் 
சரபோஜி (கி.பி. 1798-1832) 
       துல்ஜாஜி கி.பி.1787இல் வாரிசு இன்றி மறைந்தார். 
        இவர் தாம் இறக்கும் முன்பு  சரபோஜி என்பவரைத் தத்து எடுத்துக் கொண்டார். 
        சரபோஜி இளம்வயதினராக இருந்ததால், துல்ஜாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் அமர்சிங் 
        என்பவர் அவருக்குக் காப்பாளராக இருந்து கி.பி.1787 முதல் 1798 வரை தஞ்சையை 
        அரசாண்டு வந்தார். அமர்சிங் சுதந்திரத் தன்னாட்சி வேட்கை கொண்டவர். எனவே 
        இவர் ஆங்கிலேயர்களைத் தஞ்சைப் பகுதியிலிருந்து விரட்ட விரும்பினார். அதனால் 
        இவர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் இவருக்குத் தொல்லைகள் பல கொடுத்தனர். 
        இறுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் இவர் மீது குற்றங்கள் பல 
        சாட்டி இவரைப் பதவிநீக்கம் செய்து, தஞ்சை அரியணையில் துல்ஜாஜியால் தத்து 
        எடுக்கப்பட்ட சரபோஜியைக் கி.பி.1798இல் அமர்த்தினர். இவரே இரண்டாம் சரபோஜி 
        என்று அழைக்கப்படுகிறார். 
        
இரண்டாம் சரபோஜி ஸ்வார்ட்ஸ் பாதிரியார் என்பவரால் வளர்க்கப்பட்டு அவர் மூலம் 
ஆங்கிலத்தை நன்கு கற்றறிந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, உருது, வடமொழி, 
பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ், கிரேக்கம், லத்தீன், டச்சு ஆகிய மொழிகளிலும் புலமை 
பெற்றிருந்தார். 
இரண்டாம் சரபோஜி கி.பி.1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆட்சி புரிந்தார். 
ஆங்கிலேயருடன் நல்லுறவு வைத்திருந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அப்போது 
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு (கி.பி.1798-1805) 
என்பவருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி தான் வாழ்ந்து வந்த தஞ்சைக் 
கோட்டையையும், அதைச்சூழ்ந்த சில பகுதிகளையும் மட்டும் தான் வைத்துக் கொண்டு ஏனைய 
தஞ்சை மராட்டிய நாடு முழுவதையும் ஆங்கிலேயர்க்கு அளித்துவிட்டார். 
இரண்டாம் சரபோஜி தஞ்சை மராட்டிய மரபின் பழைய வரலாற்றையும், கி.பி. 1803ஆம் ஆண்டுவரை 
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் ஆண்டு, தேதி வாரியாக எழுதி அவற்றைத் தஞ்சைப் 
பிரகதீசுவரர் கோயிலின் தெற்கில் உள்ள மீக நீளமான கல்சுவர் முழுவதிலும் வெட்டச் 
செய்தார். இதுவே உலகில் உள்ள மீக நீளமான கல்வெட்டு என்று கருதப்படுகிறது. 
       உலகின் தலைசிறந்த சிற்பி பிளாக்ஸ்மேன்  
        (Flaksman) என்பவரைக் கொண்டு தம் உருவச் சிலையையும், சுவார்ட்ஸ் பாதிரியாருக்கு 
        நினைவுச் சின்னத்தையும் வெண்பளிங்குக் கற்களில் செதுக்குமாறு செய்தார். சிற்ப 
        உலகில் சிறந்து விளங்கும் அச்சிற்பங்கள் தஞ்சையில் இன்றும் நின்று நிலவிக் 
        காண்போர் கருத்துக்கும் கண்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்துள்ளன. 
        
       தஞ்சாவூரில் மராட்டிய மன்னர்களால் தொடங்கப்பட்ட 
        சரசுவதிமகால்  
        நூலகத்தில் இரண்டாம் சரபோஜியும், ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் வடமொழி, தெலுங்கு, 
        தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இலக்கியம், இசை, மருத்துவம் போன்ற துறைகளைச் 
        சார்ந்த ஓலைச்சுவடிகள், அச்சில் இடப்பட்ட நூல்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்தனர். 
        மேலும் இரண்டாம் சரபோஜி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து ஏறத்தாழ 4000 
        புத்தகங்களை வாங்கிச் சரசுவதி மகால் நூலகத்தில் இடம்பெறச் செய்தார். 
இரண்டாம் சரபோஜி தமிழ்ப் புலவர்கள் பலரைத் தம் அவையில் உரிய சிறப்புகள் செய்து 
ஆதரித்தார். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இவருடைய அவையில் தலைமைப் 
புலவராக வீற்றிருந்தார். இப்புலவர் பெருமான் இரண்டாம் சரபோஜி மீது சரபேந்திர 
பூபாலக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடியுள்ளார். தமிழில் உள்ள குறவஞ்சி 
நூல்களில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு 
அடுத்தபடியாக, சிறந்து விளங்குவது சரபேந்திர பூபாலக் குறவஞ்சியாகும். 
6.2.8 இரண்டாம் 
சிவாஜி (கி.பி. 1832-1855) 
       கி.பி.1832இல் இரண்டாம் சரபோஜி மறைந்தார். அவர் 
        மறைந்ததும் அவருடைய மகன்  இரண்டாம் சிவாஜி என்பவர் ஆட்சிக்கு வந்தார். 
        இவர் கி.பி.1832 முதல் 1855 வரை, தம் தந்தை இருந்து ஆண்டு வந்த தஞ்சைப் பகுதிகளை 
        ஆட்சி புரிந்தார். இரண்டாம் சிவாஜி கி.பி.1855இல் வாரிசின்றி இறந்தார். எனவே 
        அப்போது நடைமுறையில் இருந்த வாரிசு இழப்புச் சட்டம் என்ற சட்டப்படி, 
        ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இரண்டாம் சரபோஜியின் சொத்துகளைப் 
        பறிமுதல் செய்தனர். மேலும் தஞ்சை மராட்டிய அரசைத் தாங்களே முழுமையாக ஏற்றுக்கொண்டனர். 
        அத்தோடு ஏறத்தாழ 180 ஆண்டுகள் தஞ்சையில் இருந்து வந்த மராட்டியர் ஆட்சி முடிவுபெற்றது. 
 
      
         
          |   தன் 
              மதிப்பீடு : வினாக்கள் - I  | 
         
         
          |   1.  | 
           தஞ்சையில் மராட்டிய 
            மன்னர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்?  | 
            | 
         
         
          |   2.  | 
           தஞ்சையில் மராட்டிய 
            அரசைத் தோற்றவித்தவர் யார்?  | 
            | 
         
         
          |   3.  | 
           ஏகோஜி யாரிடம் 
            படைத்தலைவராக இருந்தார்?  | 
            | 
         
         
          |   4.  | 
           தக்காணப் பீடபூமியில் 
            இசுலாமியர் ஆட்சியை ஒழித்து, இந்துப் பேரரசை நிறுவப் பாடுபட்டவர் யார்? 
           | 
            | 
         
         
          |   5.  | 
           ஏகோஜிக்குப் பின்னர் ஆட்சிக்கு 
            வந்த தஞ்சை மராட்டிய அரசர் யார்?  | 
            | 
         
         
          |   6.  | 
           சங்கீத சாகரம் என்ற இசைநூலை 
            இயற்றியவர் யார்?  | 
            | 
         
         
          |   7.  | 
           சாகுஜி ஆங்கிலேயர்க்குத் தர 
            ஒப்புக் கொண்ட கோட்டை எது? | 
            | 
         
         
          |   8.  | 
           நாகூர் தர்காவில் சாகுஜி கட்டிய 
            கோபுரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?  | 
            | 
         
         
          |   9.  | 
           தஞ்சையில் மராட்டிய மன்னர்களால் 
            தொடங்கப்பட்ட நூலகத்தின் பெயர் என்ன?  | 
            | 
         
         
          |   10.  | 
           இரண்டாம் சரபோஜி யாரால் வளர்க்கப்பட்டார்? 
           | 
            | 
         
         
          |   11.  | 
           சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 
            யார் மீது பாடப்பட்டது?  | 
            | 
         
         
          |   12.  | 
           இரண்டாம் சரபோஜியின் அவையில் 
            தலைமைப் புலவராக விளங்கியவர் யார்? | 
            | 
         
       
 |