1.0 பாட முன்னுரை உலக வரலாற்றில் குறிப்பாக இந்திய வரலாற்றில் தமிழகம் வாசனைப் பொருட்களில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது என்பதனை உலகோர் அறிந்திருந்தனர். இதன் காரணமாக ஐரோப்பியர்களாகிய போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் ஆகியோர் தமிழகத்திற்கு வியாபார நோக்கத்துடன் வந்து பின்பு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டனர் என்பது பற்றிய செய்தியைக் கூறுகிறது. இவர்களின் வருகையால் தமிழகத்தில் பல போர்கள் மூண்டன. அவற்றுள் முதல் கருநாடகப் போரும், இரண்டாம் கருநாடகப் போரும், மைசூர்ப் போர்களும் அடங்கும். தமிழகத்தில் நுழைந்த ஐரோப்பியர்களுள் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரர்களுமே பெரிதும் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஐரோப்பியர்கள் தமிழக மக்களை அடக்கி ஆள முற்பட்டதால் பல கிளர்ச்சிகள் வீரபாண்டியக் கட்டபொம்மன், மருது பாண்டியர், தீர்த்தகிரி போன்றோர்களால் நடைபெற்றன. இவைகளைப் பற்றித் தெளிவாக இப்பாடம் விளக்குகின்றது. |