2.3 நாணயங்கள் தமிழகத்தில் பல வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. நட்சத்திர வராகன்கள், சென்னை வராகன்கள், ஆர்க்காட்டு ரூபாக்கள், பொன் மொகராக்கள், வெனீஷிய நாணயங்கள், பறங்கிப்பேட்டை மொகராக்கள், மைசூர் மொகராக்கள், வெள்ளி டாலர்கள், மராட்டிய ரூபாக்கள், ஐதாரி வராகன்கள், இராசகோபால் பணங்கள் ஆகிய நாணயங்கள் மக்கள் கைகளில் நடமாடி வந்தன. சென்னையில் நடைபெற்று வந்த நாணயம் அச்சிடும் சாலையில் (Mint) நட்சத்திர வராகன்கள், மதராஸ் வராகன்கள், மதராஸ் பணங்கள், மதராஸ் துட்டுகள் அச்சிடப்பட்டன. சென்னைக் கவர்னர் மன்றோ பிரபு காலத்தில் ஏற்பட்ட புதிய விதிமுறைகளின்படி இந்நாணயங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. ரூபா நாணயம் ஒன்று மட்டும் புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பழைய வராகன் ஒன்றுக்கு 3½ ரூபா வீதம் செலவாணி விகிதம் விதிக்கப்பட்டது. வாணிகத் துறைக்கு நாணய ஒழுங்குமுறை பெரிதும் பயனாயிற்று. வாணிகம் நன்கு வளர்ந்து வந்ததாயினும் ஆங்கிலேயர் வகுத்த சில விதிமுறைகளின் காரணமாக வாணிகத்தில் கிடைத்த இலாபமானது, இந்தியக் குடிமக்களின் கைகளில் தங்காமல் கடல் கடந்து சென்று ஆங்கிலேயரின் பேழைகளை நிரப்பி வந்தது.
|