2.5 ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட கலகங்கள் சென்னையில் கவர்னராக பெண்டிங் பிரபு இருந்தார். அப்போது சில கலகங்கள் ஏற்பட்டன. அவையாவன : (1) வேலூர்க் கலகம் (2) வெள்ளையர் கலகம் என்பனவாகும். திப்புசுல்தானின் மகன்கள் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது பிரிட்டிஷ் படைத் தலைவன் ஒருவனின் தன்னிச்சையான சில ஆணைகளை எதிர்த்து இந்திய வீரர்கள் இடையே கி.பி. 1806ஆம் ஆண்டு வேலூரில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. இதை வேலூர்க் கலகம் என்பர். சென்னைக் கவர்னராக இருந்த பெண்டிங் பிரபுவின் உடன்பாட்டைப் பெற்றுக் கொண்டு பிரிட்டிஷ் படைகளின் தலைமைச் சேனாதிபதி சர் ஜான் கிரேடாக் (Sir John Cradock) என்பவர் இராணுவத்தில் சிப்பாய்களின் நடைமுறைக்குச் சில ஒழுக்க விதிகளைப் பிறப்பித்தார். சிப்பாய்கள் தம் தாடியைக் களைந்துவிட வேண்டும் என்றும், மீசையை ஒரு புதிய முறையில் முறுக்கிவிட்டுக் கொள்ள வேண்டும் என்றும், நெற்றியில் திருநீறு, நாமம், பொட்டு முதலியவற்றை அணியக்கூடாது என்றும், காதுகளில் கடுக்கன் போட்டுக் கொள்ளக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டார்கள். மேலும் ஐரோப்பியர் அணியும் தொப்பியைப் போன்று வடிவமைக்கப்பட்ட தலைப்பாகை ஒன்று அணிய வேண்டும் என்றும் அவர்கள் ஆணையிடப்பட்டனர். தம்மை வலுக்கட்டாயமாகக் கிறித்துவராக்குவதற்கும் ஆங்கிலேயர் முயற்சி செய்கின்றனர் என்று சிப்பாய்கள் அஞ்சினர். எனவே, புதிய இராணுவ ஒழுங்கு முறைகளை அவர்கள் மும்முரமாக எதிர்த்தார்கள். அவர்களுடைய எதிர்ப்பு ஒரு பெருங்கிளர்ச்சியாக வளர்ந்து விட்டது. கி.பி.1806ஆம் ஆண்டு வேலூரில் இருந்த சிப்பாய்கள் திடீரென்று கிளர்ந்து எழுந்து நூறு ஆங்கிலேயரைக் கொன்றுவிட்டனர். உடனே ஆர்க்காட்டிலிருந்து கர்னல் கில்லஸ்பி (col. Gillespie) என்பவர் ஒரு படையுடன் வந்து கிளர்ச்சியை அடக்கினார். இச்சம்பவத்தில் சுமார் 300 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் புதிய ஒழுங்குமுறை விதிகள் ரத்து செய்யப்பட்டன. இக்கிளர்ச்சிக்குக் காரணம் திப்புவின் மக்கள் கோட்டைக்குள்ளிருந்து தூண்டிவிட்டதே என கிரேடாக் எண்ணினார். ஆதலால் திப்புவின் மக்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டார்கள். சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெள்ளையர் படையில் உயர் பதவிகளில் இருந்த அலுவலர்கள் தமக்குப் போதிய ஊதியமும், உரிமைகளும், கௌரவமும் அளிக்கப்பட வேண்டும் என்று கலகம் செய்தனர். இதை வெள்ளையர் கலகம் என்பர். பெண்டிங் பிரபுவும், தலைமை சேனாதிபதி சர். ஜான் கிரேடாக்கும் பதவியை இழந்து தம் தாய்நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண்டிங் பிரபுவுக்குப் பிறகு சர் ஜார்ஜ் பார்லோ (Sir George Barlow) என்பவர் சென்னையில் கவர்னராக நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் வெள்ளையர் கலகம் முதிர்ந்தது. அவர்களுடைய கலகத்தில் இந்தியச் சிப்பாய்கள் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். கிளர்ச்சி மசூலிப்பட்டினம் செகந்திரபாத், ஜௌல்னா, சீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களிலும் பரவிற்று. இரண்டு மாதங்கள் நெருக்கடி நிலையில் இருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த மின்டோ பிரபு (Lord Minto) நேரில் வந்து இக்கிளர்ச்சியைத் தீர்த்து வைத்தார். |