4.1 மக்களின் பழக்க வழக்கங்கள்

வட இந்தியாவில் மக்களிடையே காணப்பட்ட சிசுக்கொலையும், உடன்கட்டை ஏறுதலும் தமிழகத்தில் வழக்கில் இல்லை. அவற்றை அகற்றுவதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாகவே பன்னாட்டு மக்கள் தமிழகத்தில் தங்கித் தமிழருடன் இணைந்து வாழ்ந்து வந்தனர். இதனால் பல்வேறு சமயங்கள் தமிழகத்தில் வளர்ந்து வந்துள்ளன. அச்சமயங்களின் காரணமாக வெளியில் இருந்து வந்தவர்களின் சமயக் கருத்துகளை எல்லாம் தம் கருத்துகளாகவே தமிழர் எண்ணினர். அரசாளவும், சமயப் பணி புரியவும், வாணிகம் செய்யவும், பல்வேறு கைத்தொழில்கள் செய்து பிழைக்கவும் தமிழகம் புகுந்த அயல்நாட்டு மக்கள் தாமும் தமிழராகவே மாறித் தமிழருடன் கலந்து உறவாடி வந்துள்ளனர். இக்காரணங்களினால் வட இந்தியாவில் நிகழ்ந்த குருதி சிந்தும் சமயச் சண்டைகளும், அரசியல் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தமிழகத்தில் ஆதரவு பெறாமல் போயின எனலாம்.

தமிழகத்தில் பல குலத்தினரிடையே பெண்கள் மறுமணம் செய்து கொள்ளல், கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளுதல் ஆகிய பழக்கங்கள் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலும் அதன் பின்பு சில ஆண்டுகள் வரையிலும் நிலவி வந்தன. குழந்தை மணத்தைத் தடுக்கும் சாரதா சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் தேவாங்கச் செட்டிகள் சிறு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வந்தனர். இவ்வழக்கம் கோமுட்டிகளிடமும் காணப்பட்டது. பெண்கள் வயது வருவதற்குள் அவர்களுக்கு மணம் முடிப்பதில் பிராமணரும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.