4.2 குலப் பிரிவுகள்

அன்றைய நாளில் மக்களிடையே நூற்றுக்கணக்கான குலங்கள் பெருகிக்கிடந்தன. ஒரே குலத்தினர். அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு ஏற்பப் பல மொழிகளைப் பேசினர். அப்போதைய சென்னை மாகாணத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடங்கியிருந்த கொள்ளேகால் என்னும் வட்டத்தில் (Taluk) வாழ்ந்த தேவாங்கச் செட்டிகள் கன்னடத்தைப் பேசினர். ஆனால், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாழ்ந்த தேவாங்கச் செட்டிகள் தெலுங்கையும் தமிழையும் பேசினர். திருநெல்வேலியில் வாழ்ந்து வரும் இசுலாமியர் தமிழையே பேசுகின்றனர்; அவர்களுள் பெரும்பாலார்க்கு உருது பேச எழுத வாராது.

 • பிராமணர்
 • அதைப் போலவே இன்ன குலத்தினர் இன்ன சமயத்தைத்தான் பின்பற்றி வருகின்றனர் என்று வரையறுத்துக் கூறமுடியாது. ஆரிய வைசியச் செட்டிகளிடையே சைவரும் உண்டு; வைணவரும் உண்டு. பிராமணருள் வைணவர்கள் தம்மை ஐயங்கார்கள் என்று கூறிக் கொள்வார்கள்; நாமம் தீட்டிக் கொள்வார்கள். ஆனால் ஸ்மார்த்தப் பிராமணருள் ஒரு பிரிவினர் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு வைணவத்தைப் பின்பற்றுகின்றார்கள். புரோகிதம் செய்யும் ஸ்மார்த்த, வடமப்பிராமணர்கள் தம் குலத்துக்கு மட்டும் புரோகிதம் செய்வார்கள்; பிராமணர் அல்லாத ஏனைய குலங்களுக்குப் புரோகிதம் செய்வதில்லை. பிராமணர் அல்லாதார்க்குப் புரோகிதம் செய்வதற்கெனப் பிராமணர்கள் தனியாக உள்ளனர். கோமுட்டிகளுக்குப் புரோகிதம் செய்யும் பிராமணர் வேறு எக்குலத்தினருக்கும் புரோகிதம் செய்யும் வழக்கம் இல்லை.

 • ஆதி சைவ அந்தணர்
 • கோயில் அருச்சகத் தொழிலுக்கு உரிமையுடையவர்கள் ஆதிசைவ அந்தணர்கள் அல்லது குருக்கள் ஆவார்கள். ஏனைய பிராமணப் பிரிவினர் இவர்களுடன் உணவுக் கலப்பும் இரத்தக் கலப்பும் கொள்ளுவதில்லை. ஆதி சைவரின் கோத்திரங்கள் சூத்திரங்களுக்கும், ஏனைய பிராமணரின் கோத்திர சூத்திரங்களுக்கும், ஆழ்ந்த வேறுபாடு உண்டு. பிராமணர் அல்லாத சைவக் குலத்தினருக்குச் சிவ தீட்சை கொடுக்கும் உரிமை ஆதி சைவருக்கே உண்டு.

 • தில்லைவாழ் அந்தணர்
 • சிதம்பரம் சிற்றம்பலத்தில் வழிபாடு செய்யும் பிராமணர்கள் (தீட்சிதர்கள்) ஒரு தனிப்பட்ட வகுப்பினர் ஆவார்கள். இவர்கள் தில்லைவாழ் அந்தணர் என்றும் தீட்சிதர் என்றும் கூறப்படுவார்கள். இவர்கள் வேறு எந்தப் பிராமணருடனும் பெண் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளுவதில்லை. தில்லைப் பெண் எல்லை தாண்டாது என்பது பழமொழி. அதாவது தில்லையில் உள்ள தீட்சிதர்கள் தங்கள் பெண்ணைத் தில்லைக்கு வெளியே மணம் முடித்துக் கொடுக்க மாட்டார்கள் என்பதாம். அது இன்றளவும் உண்மையாக இருந்து வருகின்றது.

  தில்லையில் வாழும் தீட்சிதர்கள் தில்லை நடராசனை வழிபடுபவர் ஆவார்கள். ஆயினும் தில்லைக் கோவிந்தராசனுக்கு வழிபாடும், அருச்சனையும் செய்வார்கள். பல தீட்சிதர்கள் தமக்குத் திருமாலின் பெயரைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

 • கருணீகர்கள்
 • தமிழகத்தின் வடபகுதியில் கிராமக் கணக்குத் தொழிலைச் செய்துவரும் கருணீகர்களுக்குள் நான்கு வகையுண்டு என்பர். சீர் கருணீகர், சரட்டுக் கருணீகர், கைகாட்டிக் கருணீகர், மற்றவழிக் கருணீகர் என்பன அப்பிரிவுகள். இவற்றுள் சரட்டுக் கருணீகர் என்பார். வைணவ மரபைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த நான்கு பிரிவுகளும் ஒன்றோடொன்று கலப்பதில்லை.

 • மேல்நிலை பெற்றோர்
 • ஆங்கிலேயர் வரவுக்குப் பிறகு பறையர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட குலத்தினருக்கு விடிவு காலம் தோன்றிற்று. அவர்களுள் சிலர் கிறித்தவர்களாக மதம் மாறிச் சமூகத்தில் மேல் நிலை எய்தினர். சிலர் ஆங்கிலேயருக்குப் பல வகையான பணிகள் செய்து பொருளாதார உயர்வு பெற்றனர்.

 • இனக்கலப்பு
 • ஆங்கிலேயர் இந்தியப் பெண்களுடன் சில போது நெருங்கிய உறவு கொண்டதால், அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் ஆங்கிலோ-இந்தியர் என்ற ஒரு புதிய குலமே தோன்றியது. ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் அவர்களில் ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.