4.4 கல்வியின் நிலை

ஆங்கிலேயரின் ஆட்சியினால் இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட மாபெரும் நன்மைகள் இரண்டு. இந்தியா ஒரே நாடாக அமைந்தது ஒன்று. இந்திய மக்கள் ஆங்கிலம் பயில வாய்ப்பு ஏற்பட்டது மற்றொன்று. இக்காலக் கட்டங்களில் கிராமங்களில் சிறுசிறு பள்ளிக்கூடங்கள் நடைபெற்று வந்தன. தனித்தனி ஆசிரியர்கள் அவற்றைத் திண்ணைகளின் மேலும், தெரு நடைகளிலும் நடத்தி வந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் சிறு ஊதியம், அரசாங்கம் அளித்த மானியம், குடிமக்கள் அளித்த தானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆசிரியர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர்.

திண்ணைப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஒரு சில உயர் குலத்தினருக்கே கிடைத்தது. தொழிலாளர்கள் தம் மக்களை இளமையிலேயே தத்தம் குலத்தொழிலில் ஈடுபடுத்திப் பயிற்சியளித்து வந்தனர். இதனால் அவர்களில் பலருக்கு, எழுத்து என்றால் என்ன? என்பதே தெரியாமல் போயிற்று. திண்ணைப் பள்ளிப் பயிற்சியும் இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிப்பதில்லை.

மாணவர்கள் எழுத்தைக் கற்றவுடனே தமிழில் உள்ள பல நீதி நூல்களையும், சதகங்களையும் மனப்பாடம் செய்வார்கள். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த ஒரு சிலரே மேற்கொண்டு தமிழ் நூல்களைப் பயில முனைந்தனர். அவர்களும் ஒழுக்க நூல்களையும், தோத்திர நூல்களையும், நிகண்டுகளையுமே பெரும்பாலும் கற்று வந்தனர். அவர்கள் புராணங்கள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பயிலும் வாய்ப்புப் பெறவில்லை. அவர்கள் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் புகவில்லை. அறிவியல், வரலாறு, தத்துவம், உயர் கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெறவில்லை. ஓலைகளில் எழுதியிருந்தவற்றைப் படித்து வந்தனர். ஓலைகளின் மேல் எழுத்தாணியால் எழுதி வந்தனர். முதன்முதல் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் வைப்பதனைச் சுவடி தூக்குதல் என்பர்.

இவ்வாறு கல்வியின் நிலை இருந்ததைக் கண்டு ஆங்கிலேய அரசு நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக ஒரு திட்டம் வகுத்தது (1854). அதற்கு ஆங்கிலக் கல்வித் திட்டம் என்று பெயர். மாவட்டங்களில் எல்லாம் தாய்மொழிப் பயிற்சிப் பள்ளிகள் திறக்கவும், கல்வி வாய்ப்பைப் பெருக்கவும், மாகாண அரசாங்கத்தில் கல்வித்துறை ஒன்று அமைக்கவும், சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கவும், சாதி, மத வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் பொருள் உதவி வழங்கவும் அத்திட்டத்தில் வழிகள் வகுக்கப்பட்டன. பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் தமிழும், மேல் வகுப்புகளில் ஆங்கிலமும் பயிற்சி மொழியாக்கப்பட்டன.

சென்னை அரசாங்கத்தில் கல்வித்துறை தொடங்கப்பட்டது. அதற்கு இயக்குநர் (Director of Public Instruction) ஒருவர் நியமிக்கப்பட்டார். முதன்முதல் இயக்குநராக நியமனமானவர் சர் அர்பத் நாட் (Sir A.J. Atbothnot) என்பவர் ஆவார். அவர் பிறகு சென்னைக் கவர்னராகவும், சென்னை மற்றும் கல்கத்தாப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராகவும் (Vice-Chancellor) பணியாற்றினார்.

இந்திய அரசாங்கத்தின் 1857ஆம் ஆண்டின் 27ஆம் சட்டத்தின் கீழ்ச் சென்னையில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. செனெட் (Senate) என்ற ஆட்சிக்குழு அதன் நிருவாகத்தை நடத்தி வந்தது. தொடக்கத்தில் கலைகள், சட்டம், மருத்துவம், கட்டடப் பொறியியல் ஆகியவற்றில் பயிற்சியும், பி.ஏ. பட்டமும் அளிக்கப்பட்டன.

சென்னையில் இருந்த அரசாங்க உயர்நிலைப்பள்ளி மாநிலக் கல்லூரியாகக் (Presidency College) கி.பி.1840இல் உயர்த்தப்பட்டது. பொறியியல் கல்லூரி 1834ஆம் ஆண்டிலும், மருத்துவக் கல்லூரி 1835ஆம் ஆண்டிலும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி 1837ஆம் ஆண்டிலும், பச்சையப்பன் கல்லூரி 1841ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டன. சென்னை அரசாங்கம் முதன்முதல் 1866ஆம் ஆண்டில் பெண்கள் பள்ளிகளைத் திறக்கத் தொடங்கியது.