6.4 கல்வி வளர்ச்சி

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தலக்கல்வி முறை இருந்து வந்தது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. திண்ணைப் பள்ளிகள், குருகுலக்கல்வி போன்றவை இருந்தன. சென்னை ஆளுநராக சர் தாமஸ் மன்றோ பதவியேற்கும் வரை (1820) சென்னை அரசு, தலையிடாக் கொள்கையினைக் கடைப்பிடித்து வந்தது. தாமஸ் மன்றோ பதவியேற்ற பின்பு அவருடைய பரிந்துரையின் பேரில் கல்வி பற்றிய முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவே தற்காலத்தில் தொடக்கப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்று வளர்வதற்கு வழிவகுத்தது.

6.4.1 பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி

இந்தியா விடுதலை அடைந்த பின்பு அறுபதாண்டுகளில் கல்வியில் தமிழகம் இன்று பெருவளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியா விடுதலை அடைந்தபோது இருந்த தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இன்று பல மடங்காகப் பெருகிவிட்டன. விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இன்று மிகவும் அதிகமாகி விட்டது.

இன்று (2011) தமிழ்நாட்டில்,

தொடக்கப் பள்ளிகள் - 34180
   
இடைநிலைப் பள்ளிகள் - 9938
   
உயர்நிலைப் பள்ளிகள் - 5030
   
மேல்நிலைப் பள்ளிகள் - 4574
   
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 1150
   
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் - 21
   
பொறியியல் கல்லூரிகள் - 454
   
மருத்துவக் கல்லூரிகள் - 17

என்று கல்வி நிலையங்கள் உள்ளன. இப்பட்டியல் தமிழ்நாடு கல்வியில் பெரியதொரு வளர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டு வருவதைக் காட்டுகிறது.

6.4.2 பல்கலைக்கழகங்கள்

1948ஆம் ஆண்டில் கூடிய இந்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் குழு அந்த ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுக் கால எல்லைக்குள் பல்கலைக்கழக நிலையில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்திய மொழிகள் பயிற்று மொழிகளாக ஆக்கப்பட வேண்டுமென்றும், ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பின் ஆங்கிலம் பயிற்று மொழியாகவோ, தேர்வு மொழியாகவோ இருக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது. 1948இல் டாக்டர். இராதாகிருஷ்ணன் தலைமையில் அமைந்த பல்கலைக்கழகக் கல்விக் குழு 1948இல் கல்வியின் நோக்கம் சீர்பெற வட்டார மொழி இன்றியமையாதது என்று கருதியது. 1964இல் கல்வி பற்றிய தேசியப் பிரச்சனைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பெற்ற டி.எஸ். கோத்தாரி கல்விக் குழுவும் தாய்மொழியே பயிற்று மொழியாகவும் இருக்கவேண்டும் என்று கருத்தினை வலியுறுத்தியது.

1951இல் சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை, பல்கலைக்கழக வகுப்புகளில் வட்டார மொழியைப் பயிற்று மொழியாகச் செயல்படுத்துவதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பச் சொற்கள் அகராதியைத் தகுதியுறத் தயார் செய்ய முதன்மை அளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தது.

1965ஆம் ஆண்டில் மதுரையில் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றுள்ளது.

1971இல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதுபோன்று திருச்சி, கோவை, காரைக்குடி, கொடைக்கானல், தஞ்சை, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் தோன்றலாயின.

மேலும் தமிழகத்தில் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பல தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் மூலம் அஞ்சல் வழியில் கல்லூரிக் கல்விக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான பாடங்களை நடத்தி வருகின்றன. சென்னையில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (Open University) தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இணையவழி மூலம் கல்வி பயிலும் வாய்ப்புகளும் தற்போது பெருகி வருகின்றன. சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), உலகெங்கணும் வாழ்கின்ற வெளிநாட்டுத் தமிழர்கள், இணைய வழி மூலம் சான்றிதழ், பட்டயம், மேற்பட்டயம், பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.