அன்பார்ந்த மாணாக்கர்களே! வாழ்வியல் துறை ஒவ்வொன்றும் அவ்வக் காலத்தில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக, சமயச் சூழ்நிலைகளின் செல்வாக்குக்கு உட்படுகின்றது. மனித அறிவின் ஆற்றல் மிக்க வெளிப்பாடான இலக்கியத்திற்கு இதில் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டை மூவேந்தர்கள், சங்க நாளில் ஆண்டனர். அவர்களை அடுத்துக் களப்பிரரும், பல்லவரும் ஆண்டனர். பின்னர்ச் சோழரும் பாண்டியரும் சிறிது காலம் ஆட்சி புரிந்தனர்; பின்னர் இசுலாமியரும், நாயக்கரும், மராட்டியரும், ஐரோப்பியரும் ஆண்டனர். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் ஆகியவை மக்களால் பின்பற்றப்பட்ட சமயங்கள் ஆகும். பின்னர் நாடு விடுதலை பெற்றது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. இவ்வாட்சி மாற்றங்களாலும், சமயப் போட்டிகளாலும், அறிவியல் தாக்கத்தாலும், தமிழ் இலக்கியம் பெற்ற மாற்றங்கள் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் காணத்தக்கன. தமிழில் கடந்த ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வரலாற்றுக் காலத்தைப் பல்வேறு காலக்கட்டங்களாகப் பிரித்து நீங்கள் பயிலுகின்றீர்கள். இப்பாடம், தமிழ் இலக்கிய வரலாற்றின் முதற் காலக் கட்டத்தைப் பற்றியதாகும். இதில், தமிழ் மொழியின் தொன்மையும், தமிழ் வளர்த்த சங்கங்களின் வரலாறும், தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவராகப் புகழப்பெறும் அகத்தியர் வரலாறும், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் தொன்மையான தொல்காப்பியத்தின் அமைப்பும், சிறப்பும் பற்றி அறிந்து கொள்வீர்கள். |