பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதியில் நீதி பற்றியனவே
பெரும்பான்மையென்று முன்னர்ச் சுட்டப்பட்டது. அவை வருமாறு:
1) |
திருக்குறள் |
2) |
நாலடியார் |
3) |
பழமொழி |
4) |
திரிகடுகம் |
5) |
நான்மணிக்கடிகை |
6) |
சிறுபஞ்சமூலம் |
7) |
ஏலாதி |
8) |
இன்னா நாற்பது |
9) |
இனியவை நாற்பது |
10) |
முதுமொழிக்காஞ்சி |
11) |
ஆசாரக்கோவை |
|
3.2.1 திருக்குறள்
|
தமிழில் உள்ள அறநூல்களுள்
காலத்தால் முந்தியதும்
தன்மையால்
தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி
வெண்பா,
குறள் வெண்பா எனப்படும்.
அவ்வெண்பாவால் ஆன
நூலும்
ஆகுபெயராகக் குறள் என்று பெயர்
பெற்றது. அதன் சிறப்பு
நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
|
 |
நூல் அமைப்பு
|
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு
பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை
இயல்கள்
எனப்படும். இயல்களின் உட்பிரிவுகளாக அதிகாரங்கள்
அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக்
குறட்பாக்கள் இடம் பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும்
1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும்
அடங்கும் இயல்கள், அவற்றி்ற்குரிய அதிகாரங்கள் பற்றிய
பட்டியலைக் கீழே காணலாம்.
|
பால்கள் |
இயல்கள் |
அதிகாரங்கள் |
அறத்துப்பால் |
பாயிர இயல்
இல்லற இயல்
துறவற இயல்
ஊழ் இயல் |
1 முதல் 4 = 4
5 முதல் 24 = 20
25 முதல் 37= 13
38 = 1
-----
38
----- |
பொருட்பால் |
அரசியல்
அங்க இயல்
ஒழிபியல் |
39 முதல் 63 = 25
64 முதல் 95 = 32
96 முதல் 108 = 13
-----
70
----- |
காமத்துப்பால் |
களவு இயல்
கற்பு இயல் |
109 முதல் 115 = 7
116 முதல் 133 = 18
-----
25
----- |
|
திருவள்ளுவர் வரலாறு
|
பெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான
வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர் மயிலையில்
பிறந்தவர் என்று ஒருசாரார் கருதுகின்றனர். அவ்வூரில் அவர்க்குக்
கோயில் ஒன்றும்
எழுப்பியுள்ளனர். அவர் மதுரையைச் சேர்ந்தவர்
என்றும் கூறுவர்.
இவர்க்குரிய இயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை. பிறந்த குடி பழம் பெருமை
மிக்க வள்ளுவக்குடி என்பர். இக்குடியினர் இன்றும் சோதிடம் வல்லவர்களாக
அறியப்படுகின்றனர். இவர்கள் பண்டை மன்னர்களுக்கு மிக அணுக்கமாக இருந்தவர்கள்
என்று பெருங்கதை முதலிய தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. வள்ளுவர்
- வாசுகி கதை, வள்ளுவர் - ஏலேல சிங்கன் உறவு, வள்ளுவரின் நூல் அரங்கேற்றம்
ஆகியன பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இவற்றை உண்மையெனக் கருத முடியவில்லை.
|
வள்ளுவர் காலம்
|
இவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஒருமித்த கருத்து இல்லை.
கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து
கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை, பல
வேறு காலங்களை அறிஞர் கூறுகின்றனர்.
திருக்குறளில் வெளிப்படும் சில பண்பாட்டு நிலைகள்,
மொழிக்கூறுகள் ஆகியவை கொண்டு அது,
சங்க இலக்கியங்களை
அடுத்துத் தோன்றியது என்று பொதுவாகக் கூறலாம்.
|
திருக்குறள் உரையாசிரியர்கள்
|
திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி
உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும்
வெண்பாவால் அறியலாம்.
தருமர், மணக்குடவர்,
தாமத்தர், நச்சர்
பரிமேலழகர், பருதி, திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர் |
இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள்,
பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது
கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால்
பெரிதும் பாராட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய
உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.
|
நூலின் சிறப்பு
|
வடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில்
அறம் உரைப்பவை. திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’
என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம் அனைத்திற்கும் பொதுவான அறம்
கூறுவது.
வள்ளுவர் காலத்தில் வைதீகம், சமணம், பௌத்தம் முதலான
பல சமயங்கள் வழக்கில் இருந்தன. ஆனால் வள்ளுவர்
எச்சமயத்தையும் சார்ந்து நின்று அறம் உரைக்கவில்லை.
அதனால்தான்
‘சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல்
கூறிப் பொருள் இது என்ற வள்ளுவர்’ என ஒரு புலவர்
பாராட்டினர்.
சங்கத்தமிழர் விரும்பி உண்ட கள்ளையும் ஊனையும்
வள்ளுவர் கண்டித்தார்.
கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (260) |
என்றும்,
துஞ்சினார்
செத்தாரின் வேறல்லர் எந்நாளும்
நஞ்சுண்பார் கள் உண்பவர் (926) |
என்றும் கூறியுள்ளார்.
வேள்விகள் ஆயிரம் செய்வதனைவிட, ஓர் உயிரைக் கொன்று
அதன் தசையை உண்ணாதிருத்தல் பெரிய அறம் என்றார்.
சங்கப்புலவர்கள் பரத்தைமை ஒழுக்கத்தை வெளிப்படையாகவே
பாடினர். ஊடல் என்ற உரிப்பொருளை விளக்க அவர்களுக்குப்
பரத்தையின் துணை தேவைப்பட்டது. வள்ளுவரோ, பரத்தைமை
சமூகத்திற்குச் செய்யும் தீமையைக் கருதி, பரத்தையை
அகத்திணையில் இருந்து விலக்கிப் புரட்சி செய்தார். மேலும்
பொருட்பாலில் ‘வரைவின் மகளிர்’ என் அதிகாரம் அமைத்துப்
பரத்தைமையைக் கண்டித்தார்.
ஈன்ற தாயும் பிறரும் துன்பமுறும் பொழுது, அறத்திற்கு
மாறான செயல்களைச் செய்தாயினும் அவர்களைக் காக்க
வேண்டும் என்று மநு முதலிய வடநூல்கள் கூறின. ஆனால்
வள்ளுவரோ,
“ஈன்றாள்
பசி காண்பான் ஆயினும் செய்யற்க;
சான்றோர் பழிக்கும் வினை” (656)
என்றார்.
இங்ஙனம்
வள்ளுவர் கூறும் நெறிகள் உலகப் பொதுமை உடையனவாக விளங்குவதனால் திருக்குறள்
உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார்
வாக்கு.
|
3.2.2 நாலடியார்
|
திருக்குறளுக்கு
அடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார். நாலடி வெண்பாக்கள் கொண்ட
நீதி நூல்கள் வேறு பல உண்டு. எனினும், இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும்
நாலடி என்று வழங்கினர்; மேலும் ‘ஆர்’ விகுதி சேர்த்து நாலடியார்
என்று வழங்குகிறது. நானூறு வெண்பாக்கள் உடைமையால் நாலடி நானூறு
என்றும் வழங்கும். இதற்கு வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.
|
நாலடியாரின் தோற்றம்
|
இந்நூல் ஒருவரால் இயற்றப்பட்டதன்று. இதனை, சமண
முனிவர் பலரும் இயற்றிய 8000 வெண்பாக்களில் இருந்து
தொகுத்த 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் என்பர்.
நாலடியார் சமணர்களின் நூல் என்பதும், அதிலுள்ள
செய்யுட்கள் அழிந்து போன ஒரு பெருந்தொகுதியின்
பகுதி
என்பதும் அறிதற்கு உரியது.
|
நூலின் அமைதி
|
இந்நூல் திருக்குறள் போன்றே முப்பால்களாகவும், பல
இயல்களாகவும், அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
அறத்துப்பாலில் துறவற இயல், இல்லற இயல் என்ற இரண்டு
இயல்களும் 13 அதிகாரங்களும் உள்ளன.
பொருட்பாலில் அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப
இயல், பொது இயல், பகை இயல், பல்நெறி இயல் என ஏழு
இயல்களும் 24 அதிகாரங்களும் அடங்கும்.
காமத்துப்பாலில் இன்ப துன்ப இயல், இன்ப இயல் என
இரண்டே இயல்களும், 3 அதிகாரங்களும் உள்ளன.
|
சிறப்புச் செய்திகள்
|
நாலடியாரில் சமண சமயத்திற்கே சிறப்பாகவுரிய பல
உண்மைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. செல்வம் நிலையாமை,
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றை அழகிய
உவமைகள் வாயிலாக இந்நூல்
விளக்கியுள்ளமை சிறப்பாகும்.
இளமையின் கழிவினுக்குப் பயன்தரும் மரங்களில் இருந்து
கனிகள் உதிர்வதனை உவமையாக்குகிறது ஒரு செய்யுள்.
பனிபடு சோலைப் பயன்மரம்
எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை - 17 |
சமண சமயத்தின்
உயிர்நாடியான கொள்கைகளுள்
கொல்லாமையும், புலால்மறுத்தலும் அடங்கும். புலால் உண்பாரின்
வயிற்றினைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உரிய சுடுகாடு
என்று இழித்துரைக்கிறது இந்நூல். இதனை, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே
புலம்கெட்ட புல்லறிவாளர் வயிறு என்கின்றது.
|
3.2.3 பழமொழி
|
நாலடி போலவே
நானூறு வெண்பாக்கள் கொண்ட நீதிநூல் பழமொழியாகும். பழமொழி நானூறு
என்றும் இது வழங்கும். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி
இடம்பெறும். பாட்டு முழுவதும் அப்பழமொழியின் விளக்கமாக அமையும். பழமொழிகளைத்
தொகுத்து இலக்கியமாக்கப்பட்டவற்றில் தொன்மையான தமிழ்நூல் இதுவேயாகும்.
திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களைத் தழுவிச் செல்வது இந்நூல்.
|
நூலாசிரியர்
|
பழமொழியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். அரையனார் என்பது
இயற்பெயர் அன்று. அரையர் குடியில் பிறந்தவர் என்பதால் இவர் அரையனார்
எனப்பட்டார் எனலாம் (அரையர் – அரசர்). எனவே இவர் ஒரு குறுநில மன்னராகவோ,
அரசியலில் உயர் பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம். முன்றுறை என்பது
ஊர்ப்பெயர். இவ்வூர் எப்பகுதியில் இருந்தது என்று அறியமுடியவில்லை.
இவ்வாசிரியர் சமண சமயத்தினர் என்பது நூலின் தற்சிறப்புப்
பாயிரத்தில்
‘பிண்டியின்
நீழல் பெருமான் அடி வணங்கி ------- முன்றுறை மன்னவன் செய்து அமைத்தான்’ என்று வருவது கொண்டு உணரலாம்.
|
சிறப்புச் செய்திகள்
|
இந்நூலகத்தே பண்டை மன்னர்கள் பலரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள்
இடம் பெற்றுள்ளன.
மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரினைச் செலுத்திக் கொன்ற செய்தியும்
(93), பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அளித்த வரலாறும்
(361), கரிகாலன் இரும்பிடர்த் தலையார் உதவியால் அரசு பெற்று ஆண்ட வரலாறும் (105), கரிகாலனுக்கு யானை மாலையிட்டு மன்னனாக்கிய செய்தியும் (62), அவனே நரைமுடிந்து வந்து நீதி
வழங்கிய வரலாறும் (21), வேறு பல வரலாறுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் இடம் பெறும் குறிப்பிடத்தக்க சில பழமொழிகள் வருமாறு:
குலவிச்சை கல்லாமல்
பாகம்படும் (21)
கற்றலின் கேட்டலே நன்று (61)
வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று (175)
நுணலும் தன் வாயால் கெடும் (184)
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்(லை) (312)
ஒருவர் பொறை இருவர் நட்பு (247) |
|
3.2.4 எண் அடிப்படையிலான நூல்கள்
|
திரிகடுகமும், நான்மணிக்கடிகையும், சிறுபஞ்சமூலமும் முறையே மூன்று, நான்கு, ஐந்து பொருள்களை உடையனவாக அமைந்துள்ளமையைக் கண்டு மகிழலாம்.
|
திரிகடுகம்
|
கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில்,
திரிகடுகம் என்ற மருந்தில் அடங்கியுள்ள சுக்கு, மிளகு, திப்பிலி என்னும்
மூன்று காரப் பொருள்கள் போன்ற மூன்று அறக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலும்
கூறுவதால் இப்பெயர் பெற்றது. (திரி = மூன்று; கடுகம்
= காரப்பொருள்) திரிகடுகச் சூரணம் உடல் நோயைத் தீர்ப்பது போல், அப்பெயர்
கொண்ட இந்நூல் அகநோயைத் தீர்க்கவல்லது.
|
நூலின் ஆசிரியர்
|
இதன் ஆசிரியர் நல்லாதனார். திருத்து என்னும் ஊரில் பிறந்தவர் இவர் என்பது
செல்வத்திருத்து உளார் செம்மல் என்ற சிறப்புப்பாயிரச்
செய்யுளால் தெரிகின்றது. இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது என்பர்.
இவ்வாசிரியர் இயற்றிய கடவுள் வாழ்த்தில் திருமாலின் புகழ் பேசப்படுவதால்
இவர் வைணவ நெறியினர் என்பது பெறப்படுகிறது.
|
சிறப்புச் செய்திகள்
|
இந்நூலாசிரியர் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன (1) உமிக்குற்றுக் கை வருந்துவார் (2) தம் நெய்யில் தாம் பொரியுமாறு (3) துஞ்சு ஊமன் கண்ட கனா (4)
தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும்.
இந்நூலில் நெஞ்சில் நிறுத்தத்தக்க பொன்மொழிகளுள் சில வருமாறு:
ஈதற்குச்
செய்க பொருளை (90) |
நிறை நெஞ்சு உடையானை
நல்குரவு அஞ்சும் (72) |
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்
(52) |
நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
(43) |
ஊன் உண்டலையும், வேள்வியில்
உயிர்க்கொலை செய்தலையும் இந்நூல் கண்டிக்கின்றது (36). சூதினால் வந்த பொருளை விரும்பல் ஆகாது (42). விருந்தின்றி உண்ட பகல் அறிவுடையவர்க்கு
நோயாகும் (44). பொய் நட்பின் சிறப்பை அழித்து விடும் (83) முதலிய இந்நூற் கருத்துகள் என்றும் நினைவில் நிற்பனவாம்.
|
நான்மணிக்கடிகை
|
நான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரிய உண்மைகளைத்
தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து இரண்டு உட்பட, இதில் 104 செய்யுட்கள் உள்ளன. வாழ்த்துச்செய்யுட்கள் திருமாலை வாழ்த்துவதால்
இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் வைணவர் என்பது விளங்கும்.
வெற்றுச்சொல் யாதும் இன்றி ஒவ்வொரு பாட்டிலும் மிக உயர்ந்த வாழ்வியல் உண்மைகள் நான்கினைத் திறம்படத் தொடுத்துக் கூறியுள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது. இதன் சிறந்த பாடல்களில் ஒன்று வருமாறு:
கண்ணின் சிறந்த உறுப்பு
இல்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை, மக்களின்
ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு
எண்ணக் கடவுளும் இல். |
(கொண்டான் = கணவன்; கேளிர் = உறவினர்; ஒண்மை = சிறப்பு)
|
சிறுபஞ்சமூலம்
|
சிறுபஞ்சமூலம்
என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவ்வேர்களாவன
: சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி என்பனவற்றின்
வேர்களாகும். இவ்வேர்கள் உடற்பிணி போக்கி நலம் செய்வது போல, மக்களின்
உயிர்ப்பிணியாகிய அறியாமையைப் போக்கி அதன் ஈடேற்றத்திற்கு உதவும் அரிய
பெரிய உண்மைகளை ஐந்து ஐந்தாகச் செய்யுள்தோறும் கூறும் நூலும் சிறுபஞ்சமூலம்
என்று பெயர் பெற்றது.
|
ஆசிரியர்
|
இதன் ஆசிரியர் காரியாசான். இவர் மதுரையாசிரியர் மாக்காயனார் என்பவரின் மாணாக்கர்
என்றும், சைன சமயத்தினர் என்றும் நூலிலிருந்து தெரிய வருகிறது. இதில்,
சிறப்புப்பாயிரங்கள் இரண்டும் 104 வெண்பாக்களும் உள்ளன. இரு செய்யுட்கள் இடைச்செருகல் எனக் கருத இடமுண்டு.
|
சிறப்புச் செய்திகள்
|
உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பவன் நாக்கு அழியும் என்கிறார் ஆசிரியர்.
இவ்வாறே பொய்ச்சான்று கூறுபவன் நாக்கும் சாகும் என்கின்றார் (8). வலிமையில்லாதவன்
சேவகம் செய்வதும், செந்தமிழை அறியாதான் கவிபுனைதலும் நகைப்புக்கு இடமானவை
என்கிறார் (10). கொல்லுதலும், கொன்றதன் ஊனை உண்டலும் கொடும் நஞ்சு; தனக்கு
நிகர் இல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும் கொடும் நஞ்சு என்கிறார் (11).
|
3.2.5 ஏலாதி
|
ஏலம், இலவங்கம், நாக கேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களையும் முறையே
1 : 2 : 3 : 4 : 5 :
6 என்ற விகிதத்தில் கலந்து செய்வது ஏலாதிச் சூரணமாகும். இம்மருந்து போல, ஒவ்வொரு செய்யுளாலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால்
ஆன நூலும் ஏலாதி எனப் பெயர் பெற்றது. உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சூரணம் போல, இச்
செய்யுட்களில் வற்புறுத்தப்படும் அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யும் என்பது கருத்து.
|
நூலாசிரியர்
|
இதன் ஆசிரியர் கணிமேதையார். கணிமேதாவியார் என்றும் கூறுவர். இவர் சோதிட நூல் வல்லவர்
என்பது இவர் பெயரால் அறியப்படுகின்றது. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே. இவர்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவார். அருகனுக்கு வணக்கம் சொல்லி நூலைத் தொடங்குவதால் இவர் சமணர் எனக் கருதலாம்.
|
சிறப்புச் செய்திகள்
|
இந்நூலின் (2, 19, 42, 46) பாடல்கள் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமை, புலால்மறுத்தல்,
கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன.
வீடுஇழந்தவர், கண்ணில்லார், தம் செல்வத்தை இழந்தவர், நெல் இழந்தவர், கால்நடைச் செல்வம் இழந்தவர் ஆகியோர்க்கு உணவு கொடுத்தவர் பல்யானைகளைக் கொண்டு உலகாளும் மன்னராய்
வாழ்வர் (52) என்றும், கடன்பட்டவர், பாதுகாப்பு இல்லாதவர், கையில் பொருள் இல்லார், கால் முடம்பட்டவர், வயது முதிர்ந்தவர், வயதில் இளையார் ஆகியோருக்கு உணவு ஈந்தவரும் மண்மேல்
படை கொண்டு ஆளும் பேறு அடைவர் (53) என்றும் இவர் கூறுவது சிறப்பாக உள்ளது. கல்வியின் சிறப்பை வற்புறுத்தும்
இடை வனப்பும், தோள்
வனப்பும், ஈடின் வனப்பும்
நடை வனப்பும், நாணின் வனப்பும் - புடை சால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல ; எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு (74) |
என்ற செய்யுள் நினைந்து இன்புறுத்தக்கது.
|
3.2.6 இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும்
|
இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் நாற்பது பாடல்களைக் கொண்டவை எனும் ஒற்றுமையுடன் இனியவை, இன்னாதவை என்பவற்றை ஒன்று கூட்டிச் சொல்லும் தன்மை உடையவை.
|
இன்னா நாற்பது
|
இது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது.
இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.
இந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது. கருத்தின் பெருமை கருதி, அக்கருத்து மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.
இன்னா, ஈன்றாளை ஓம்பாவிடல்
(18)
அடைக்கலம் வவ்வுதல் இன்னா (41)
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23)
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா (16)
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா (29)
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (38) |
|
இனியவை நாற்பது
|
வாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட
நூல் இனியவை நாற்பதாயிற்று. இதன் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானும், திருமாலும், நான்முகனான
பிரம்ம தேவனும் வாழ்த்தப்படுகின்றனர்.
இந்நூலின் நான்கு பாடல்கள் மட்டும் (1, 3, 4, 5) நான்கு இனிய பொருள்களைக் கூறுகின்றன. ஏனையவற்றில் மும்மூன்று கருத்துகளே கூறப்பட்டுள்ளன. இந்நூல் திரிகடுகத்தினை அடியொற்றிச்செல்வது
என்பர்.
இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர் ஆகும்.
நட்டார்க்கு நல்ல செயல்
இனிது (17)
மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13)
கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே (32) |
என்பவை நினைவில் நிறுத்தத்தக்க சில சிறந்த வரிகள். இந்நூலுக்குப் பழைய உரையொன்று உண்டு.
|
3.2.7 முதுமொழிக்காஞ்சி
|
முதுமொழி என்பது மூதுரை அல்லது முதுசொல்லாகும். ஆண்டாலும் அறிவாலும் மூத்தோர் ஏனையோர்க்கு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுவது என்னும் பொருளில் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது.
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் இடம்பெறும் முதுமொழிக்காஞ்சித் துறைக்கு உரிய விளக்கமாகும்.
காஞ்சியென்பது மகளிர் இடையில் அணியும் மணிக்கோவையும் ஆகும். அது போல முதுமொழிகள் பல
கோக்கப்பட்ட நூல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது என்றும் கூறலாம்.
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் எனக் குறிக்கப்படுகின்றார். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற சங்கப் புலவரினும் இவர் வேறானவர்.
இந்நூலில்
பத்துப்பத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து அறிவுரைகள் உள்ளன.
ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று
தொடங்குகின்றது. ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பெயர் தலைப்பாக அமைகிறது.
அப்பெயர் அப்பத்தில் அமைந்த எல்லாப் பத்துப் பாடல்களின் அடிகளிலும் இடம்பெறும்.
சிறந்த பத்து, அறிவுப்பத்து, துவ்வாப்பத்து என்றவாறு அப்பெயர்கள் அமையும்.
இந்நூலின் பாடல்களை உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இதற்குத் தெளிவான பழைய பொழிப்புரை உள்ளது.
திருக்குறளின் கருத்துக்களும் தொடர்களும் இதில் பரவலாகக் காணப்படுகின்றது.
|
3.2.8 ஆசாரக்கோவை
|
‘ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத் தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக இதில்
நூறு வெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை
ஆகிய பல வகையும் இதில் உள்ளன.
இது வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. இதனை
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான்
ஆசாரம்
யாரும் அறிய அறனாய மற்று அவற்றை
ஆசாரக் கோவை எனத் தொகுத்தான் |
என்ற சிறப்புப்பாயிரப் பகுதியால் அறியலாம்.
|
ஆசிரியர்
|
இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர். பெருவாயில் என்ற ஊரினர் இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன்
அருகில் இருந்தது போலும்! இவர் வடமொழி வல்ல கல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.
|
சிறப்புச் செய்திகள்
|
அகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட
வாழ்க்கையில கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது. காலையில் எழுதல்,
காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.
|