5.2 முத்தொள்ளாயிரம்

இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல், இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் இடம் பெற்றுள்ளன. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே இன்று முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிட்ட விருந்து என்னும் வகையைச் சாரும்.

 • பெயர்க்காரணம்
   
 • இந்நூலின் பெயர் இருவகைகளில் விளக்கப்படுகிறது. மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. இவ்விரண்டாவது கருத்தின் படி இந்நூலுக்குரிய செய்யுட்கள் 2700 ஆகும்.

  இவற்றுள் முதற் கருத்தே ஏற்புடையது என்கின்றார் இலக்கண விளக்கத்தின் ஆசிரியர். எண் இலக்கியத்திற்கு உதாரணம் கூறும்போது, அது பத்து முதல் ஆயிரம் பாடல்கள் கொண்டது என்று குறிப்பிட்டு, அரும்பைத் தொள்ளாயிரம் என்பதனையும் முத்தொள்ளாயிரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

  5.2.1 நூலாசிரியர்
   

  இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்களோடு முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரையும் சேர்த்துப் பிற சான்றோர் எனக் குறிப்பிட்டார். எனவே இவர் சங்கப் புலவர் அல்லர் என்பது வெளிப்படையாகும். ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார்.

 • நூலாசிரியர் சமயம்
   
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.

  5.2.2 பாடுபொருள்
   

  முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது என்று முன்பே கூறப்பட்டது. மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள் குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும், பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ் பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும் புகழப்பட்டுள்ளன. மன்னர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார். இடைக்காலத்துச் சமயச் சான்றோர்கள் இம்மரபைப் பின்பற்றியது நினைவிருக்கலாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அகத்துறைகளைப் பயன்படுத்தி ஆன்மா இறைவனோடு கூடுவதற்குத் துடிக்கும் துடிப்பினை வெளியிட்டனர். அம்மரபினைப் பின்பற்றிய முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரும் சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூன்று வேந்தர்களின் பாலும் தமக்குள்ள அன்பினை, ஒருதலைக் காதல் கொண்ட பெண்களின் கூற்றாகப் பாடி வெற்றி கண்டுள்ளார். இந்நூலின் பெரும் பகுதி பெண்பால் கைக்கிளையாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • கைக்கிளைப் பாடல்
   
 • இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக் காணலாம்.

  பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

  உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
  கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
  கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
  கொண்டன மன்னோ பசப்பு (60)

  (செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

  5.2.3 கற்பனை வளம்
   

  கற்பனையே கவிதைக்கு உயிர். முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒவ்வொன்றும் கற்பனை ஊற்று என்றால் அது மிகையாகாது. சேர நாட்டின் வளத்தினையும், மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஒரு சேரப் புகழும் ஆசிரியர் பின் வருமாறு பாடுகின்றார்:

  அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
  வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம்
  கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ
  நச்சிலை வேல் கோக் கோதை நாடு

  (வாய்அவிழ = விரிய; வெரீஇ = அஞ்சி; புள்ளினம் = பறவையினம்; பார்ப்பு = குஞ்சு; கௌவை = ஒலி)

 • இதன் பொருள்
   
 • சேறு நிறைந்த பொய்கைகள் சேர மன்னன் நாட்டில் மிகுதி. அப்பொய்கைகளில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று எண்ணின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பாற்ற நினைத்துத் தம் கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேரநாட்டில் காண்பது அரிது என்கின்றார் புலவர். இதற்குக் காரணம் கூறுவார் போல, நச்சிலை வேல் கோக்கோதை என்று மன்னனைக் குறிப்பிடுகின்றார். அவன் ஏந்திய வேல் நஞ்சு பூசப்பட்டிருப்பது; எனவே, பகைவர் அவன்பால் பேரச்சம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பு.

 • கூடிழந்த சிலந்தி
   
 • சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது இரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள். அரண்மனைக்குப் பரிசிலர் வருகின்றனர். வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன். ஆம்! அந்தணர் வந்தனர்; அவர்கள் ஆவையும் பொன்னையும் வாங்கிச் சென்றனர். நாவன்மை மிக்க புலவர்கள் வந்தனர்; அவர்கள் மந்தர மலைபோல் உயர்ந்த களிறுகளைப் பெற்றுத் திரும்பினர். இங்ஙனம் மனிதரெல்லாம் பரிசு பெற்றுத் திரும்பிய நாள், சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் புலப்படுத்தினார்.

  5.2.4 பண்பாட்டுச் செய்திகள்
   

  முத்தொள்ளாயிரம் எழுந்த காலத்துத் தமிழர்தம் பண்பாட்டு நிலையை அறிய, அதன் ஆசிரியர் நமக்கு வாய்ப்பளித்துள்ளார்.

  அசுவனி முதலாக எண்ணப்படும் 27 விண்மீன்கள் பற்றிய அறிவு அன்று தமிழர்க்கு இருந்தது. மன்னிய நாண்மீன், ஆதிரையான் (1) தென்னன் திருஉத்திராட நாள் (7) என்ற குறிப்புகளை நோக்குக.

  பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் இதனுள் பதிவு செய்யப்பட்டுள்ளன.