1.3 அகத்தியரும் அகத்தியமும்

தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது.
இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக்
கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும்,
இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம்
உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார்.
இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும்,     சோதிட
சாத்திரங்களும்     வழங்குகின்றன.     இவர் முத்தமிழுக்கும்
இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப்
பேரகத்தியம்
என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள்
இருந்தன என்பர்.


1.3.1 தமிழ் தந்த முனிவர்

இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும்
வகையில், கம்பர் பெருமான், ‘தமிழ் என்னும் அளப்பரும் சலதி
(கடல்) தந்தவன்’ ‘தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ்
தந்தான்’ என்று பாராட்டினார். யாப்பருங்கலக் காரிகை,
‘தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக்
கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்’ என்று
புகழ்கிறது. வீரசோழிய ஆசிரியர், ‘அகத்தியன் புவனிக்கு
இயம்பிய தண்டமிழ்’ என்று புகழ்ந்தார்.
  • அகத்தியரின் வருகை

  • அகத்தியர் சிவபெருமான் கட்டளைப்படி
    தமிழகம் வந்து பொதிகை மலையில்
    தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது.
    அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில்
    தோன்றியவர் என்பது ஓர் பழஞ்செய்தி.
    சிவபெருமான் பார்வதியை     மணந்த
    நாளில்     தேவரெல்லாம்     ஒன்று கூடியமையால்     வடமலை     தாழ்ந்து
    தென்திசை உயர்ந்தது என்றும், நாவலந்தீவினைச் சமன்
    செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு
    அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது.
  • அகத்தியர் பற்றிய கதைகள்
  • அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியவர் சிவன் என்றும்
    முருகன் என்றும் கதைகள் உண்டு. இவர் மகேந்திர மலையில்
    தங்கி ஆகமம் கேட்டார் என்றும் கூறுவர். இவர் பற்றி வழங்கும்
    கதைகள் மிகப்பல. இவர் விந்திய மலையின் ஆணவத்தை
    அடக்கினார்; வில்வலன், வாதாபி என்னும் அரக்கர்களை
    அழித்தார்; விதர்ப்ப மன்னன் மகள் உலோபா முத்திரையை
    மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார்; இவர்
    கமண்டலத்து நீரே காவிரி ஆயிற்று. இப்படிப் பல கதைகள்
    உள்ளன.
  • சங்கப்புலவர்

  • இவர் முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் வீற்றிருந்தவர்
    என்றும், அவ்விரு சங்கத்திற்கும் அகத்தியமே இலக்கணம்
    என்றும் கூறுவர். இவர் பொதிகையில் தமிழ் வளர்த்தமை பற்றி
    வால்மீகியும் கம்பரும் பாராட்டுகின்றனர்.
  • அகத்தியரின் மாணாக்கர்

  • இவருக்குத் தொல்காப்பியர்     உள்ளிட்ட பன்னிருவர்
    மாணாக்கர் என்பர். அவர்களில் சிலர் பெயர்கள் வருமாறு:
    1. தொல்காப்பியர்
    2. அதங்கோட்டாசான்
    3. பனம்பாரனார்
    4. அவிநயன்
    5. காக்கைபாடினி
    6. செம்பூண்சேய்
    7. துராலிங்கன்
    8. வையாபிகன்
    9. கழாரம்பன்
    10. நத்தத்தன்

    1.3.2 அகத்தியச் சூத்திரங்கள்

    அகத்தியச் சூத்திரங்கள் என உரையாசிரியர்களால்
    மேற்கோள் காட்டப் பட்டன பல உள்ளன. ஆனால், அவற்றின்
    நடையும், பொருளும் ஐயத்திற்கு இடமானவையாகும். இவை
    பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதில் ஐயம் இல்லை.
    எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சூத்திரங்களைக் காணுங்கள்.
    ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்
    சாலும் மூன்றாம் வேற்றுமைக்கு....

    அகத்தியரின் மாணாக்கராகக் கருதப்படும் தொல்காப்பியர் ஒடு
    உருபை மட்டுமே மூன்றாவதன் உருபாகக் கூறினார். ஓடு என்ற
    வடிவத்தையோ ஆல் உருபையோ அவர் சொல்லவில்லை. சங்க
    இலக்கியத்தில் ஆல் உருபு இல்லை.

    இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
    எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே
    எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
    இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்

    இதில் உள்ள இலக்கியம் என்பது பிற்காலச் சொல். எள் என்ற
    வடிவம் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் இல்லை.
    மாறாக எண் என்றே உள்ளது.

    இச்சான்றுகள் அகத்தியர் பெயரால் வழங்கும் சூத்திரங்கள்
    பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதனைக் காட்டும்.