‘இச்செயலைக் கணக்காகச் செய்தான்’ என்பர் தமிழர். இதன்
பொருளாவது, பெரியோர் நூல்களில் சொல்லியபடியே சரியாகச்
செய்தான் என்பதாகும். ஆசிரியர் கணக்காயனார் எனப்பட்டார்.
நூலை ஆய்பவர் என்பது இப்பெயரின் பொருள். ‘கணக்கினை
முற்றுப்
பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே
நன்று’ என்ற பழமொழிப் பகுதியால், கணக்கு என்னும் சொல்
நூல் என்ற பொருள் கொண்டது என்று அறியலாம்.
பல்வேறு நூல்வகைகளுக்கும் இலக்கணம் கூறும் பாட்டியல்
நூல்கள் பிற்காலத்தில் தோன்றின. பன்னிருபாட்டியல் என்பது
அவற்றுள் ஒன்று. அது ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்
ஆகிய
பாவகைகளில் மிகுதியான அடிகள் கொண்டனவாக ஐம்பது முதல்
ஐந்நூறு பாடல்களைத் தொகுத்தமைப்பது
மேற்கணக்கு என்று
கூறிற்று. அதுவே, வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான
அடிகளால் ஐம்பது
முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு
விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது.
இதனால் பாட்டிலுள்ள அடிகளின் மிகுதியும் குறைவுமே மேல்
கீழ் என்ற
அடைமொழிகளால் விளக்கப்பட்டன என்பது விளங்கும்.
இடைக்காலத்தில் எழுந்த நூல்களிலும், உரைகளிலும் -
கீழ்க்கணக்கு என்று
அடையில்லாமலும், பதினெண்கீழ்க்கணக்கு
என்று அடையோடும் இவை குறிக்கப்படுகின்றன. - ‘மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்’
என்பது தமிழ்விடுதூது. நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதரும்,
நச்சினார்க்கினியரும்
பதினெண்கீழ்க்கணக்கு என்ற குறியீட்டைக் கையாள்கின்றனர்.
எனவே
இந்த வழக்கு, கி.பி. 13, 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு
உரியது என்பது விளங்குகின்றது.
|
இத்தொகுப்பில் அடங்கும் நூல்களின் பெயர்களை எளிதில்
நினைவில் கொள்வதற்கு ஏதுவாக இடைக்காலத்துச் சான்றோர்
ஒருவரால் எழுதப்பட்ட வெண்பாவொன்று வழங்குகின்றது.
அது
வருமாறு:
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு. |
இப்பாட்டின்படி, இத்தொகுப்பில் அடங்கும் பதினெட்டு நூல்களின்
பெயர்களும் கீழே தரப்படுகின்றன.
1) |
நாலடியார் |
2) |
நான்மணிக்கடிகை |
3) |
இன்னா நாற்பது |
4) |
இனியவை நாற்பது |
5) |
கார் நாற்பது |
6) |
களவழி நாற்பது |
7) |
ஐந்திணை ஐம்பது |
8) |
ஐந்திணை எழுபது |
9) |
திணைமொழி ஐம்பது |
10) |
திணைமாலை நூற்று ஐம்பது |
11) |
திருக்குறள் |
12) |
திரிகடுகம் |
13) |
ஆசாரக்கோவை |
14) |
பழமொழி |
15) |
சிறுபஞ்சமூலம் |
16) |
முதுமொழிக்காஞ்சி |
17) |
ஏலாதி |
18) |
கைந்நிலை |
மேலே காட்டிய வெண்பாவில் ஒரு பாடவேறுபாட்டைப்புகுத்தி,
கைந்நிலையின்
இடத்தில் இன்னிலை என்ற நீதி நூலை வைத்து
எண்ணுவாரும் உளர். எனினும் கைந்நிலையே
பெரும்பாலோருக்கும் உடன்பாடானது.
|