1.2 சமண சமய இலக்கியங்கள்

சமண சமயம் வட இந்தியாவில் தோன்றியது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகுந்தது. தமிழகத்தில் உள்ள காஞ்சி மாநகரும், மதுரை மாநகரும் சமண சமயத் தலங்களாகத் திகழ்ந்தன எனலாம். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் சமணர் எனப்பட்டனர். 1. உயிர்களைக் கொல்லாமை 2. வாய்மை 3. திருடாமை 4. துறவு ( துறவு - திருமணம் செய்து கொள்ளாமல், தனியனாய் உலக பந்தபாசங்களை விலக்கி வாழுதல்) 5. ஆசையைத் துறத்தல் என்ற ஐந்து நோன்புகளைச் சமணர் கடைப்பிடித்தனர். இவற்றை அவர்கள் மா விரதங்கள் என்றனர்.

பொய்கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
செய்தவம் நுனித்த சீலம்

(சீவக சிந்தாமணி - 2834)

இவற்றைச் சமணசமயம் வலியுறுத்திற்று. இவை தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. எனவே சமணம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றியது. இதனால் தமிழ்மொழி பல நன்மைகள் பெற்றது. அறநூல்கள், காப்பியங்கள், இலக்கண நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், நிகண்டுகள் ஆகியவற்றை அவர்கள் படைத்தனர்; இனி 6ஆம் நூற்றாண்டில் சமணர் செய்த தமிழ் இலக்கியங்கள் பற்றிக்  காணலாம்.

1.2.1 ஆறாம் நூற்றாண்டுச் சமண இலக்கியங்கள்

கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய நூல்கள் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணத் தமிழ் நூல்கள் ஆகும்.

இவை குழந்தைகளின் மனத்தைக் கவரும் வகையில் அறக் கருத்துகளைக் கதைவடிவில் சொல்லும் வெளிப்பாட்டு முறையைக் கொண்டிருந்தன.

அவ்வகையில் கிளி, எலி, நரி ஆகியனவற்றைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, கதை வடிவில் குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டன.

விருத்தம் என்பது செய்யுளில் ஓர் இனத்தின் பெயராகும்.

இந்நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

கிளி விருத்தம்

கிளியின் மீது கதையையும், நீதியையும் ஏற்றிச் சொல்லுவதாக இந்த நூல் அமைந்திருத்தல் வேண்டும். வடமொழியில் இதுபோன்ற கதைகள் உள்ளன. வடமொழியில் இக்கதைகளை எழுதியவர் ஒரு சமணர் ஆவார். மேலும், கிளிவிருத்தம் பற்றி ஞானசம்பந்தர் கூறியுள்ளார். அவர் சொல்லும், கிளி விருத்தம் வடமொழிக்கும் முதல்நூலாகத் தமிழில் சமணர்களிடையே வழங்கியிருக்கலாம் என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சமணத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் கூறுகின்றார்.

எலி விருத்தம்

பஞ்சதந்திரக் கதைகள் என்ற நூலில் மித்ரலாபம் என்றொரு பகுதி உள்ளது. அதில் எலி ஒன்று புறாவைக் காப்பாற்றிய கதை உள்ளது. எலி விருத்தம் என்பது அந்தக் கதையைச் சொல்லுவதா அல்லது அதுபோன்ற ஒன்றா என்பது விளங்கவில்லை. ஆனால், எலி விருத்தம் என்றொரு தமிழ்நூல் இருந்தது என்று மட்டும் அறிகிறோம்.

நரி விருத்தம்

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் ஆகிய திருத்தக்கதேவர் எழுதிய நரி விருத்தம் வேறு; இந்த நரி விருத்தம் வேறு. இதைப் பழைய நரி விருத்தம் என்று கூறுவர். இந்த நரி விருத்தம் கதை வழியாக நீதி கூறும் நூல்.

பிற கதைகள்

சமண சமயம் கூறும் அறக் கருத்துகளை மக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் கதைகள் பல உள்ளன. வசன நூல்களாக அவை அச்சிடப்படாமல் ஏட்டில் நிறைய உள்ளன.

1.2.2 சமண சமயப் பக்திப் பாடல்கள்

யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படும் பாடல்கள் சமண சமயப் பக்திப் பாடல்களாக உள்ளன.

போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதன் சேர்வோர்
சோதி வானம் துன்னுவாரே

(யாப்பருங்கலவிருத்தி-6 : 69,மேற்கோள்
யாப்பருங்கலக் காரிகை 5 மேற்கோள்)

அணிநிழல் அசோகமர்ந்து அருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே

(யாப்பருங்கலவிருத்தி-8,மேற்கோள்
யாப்பருங்கலக் காரிகை-5 மேற்கோள்)

ஆகிய பாடல்கள் சமணரது கடவுளாம் அருகனைப் பாடும் பாடல்களாக இருப்பதைச் சான்று காட்டலாம். எனவே பக்தி உணர்வே சமண சமயப் பக்தி இலக்கியத்திற்குத் தோற்றுவாயாக அமைந்திருத்தல் வேண்டும். பல தமிழ்ப்பாடல்கள் சமண சமயப் பக்திப்பாடல்களாக, வழிபாட்டிற்குரியனவாக ஓதப்பட்டிருப்பது உண்மை. ஆனால் சைவ சமயத் திருமுறைகள் போன்றோ, வைணவ திவ்வியப் பிரபந்தம் போன்றோ அவை தொகுக்கப் பெறாது மறைந்து போயிருக்கலாம்.

சான்றுகள்

சமண சமயம் சார்ந்த முழு நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் இருந்துள்ளன என்று ஊகிக்கக்கூடிய அளவிற்குச் சான்றுகள் உள்ளன குண்டலகேசி விருத்தம், கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித்துறைகளுள் உளவாகும் என்று வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் கூறியுள்ளதிலிருந்து அந்நூல்கள் இருந்தன என்று அறியலாம்.

கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர்
எலியின் தொழில்

பாட்டு மெய் சொலிப் பக்கமே செலும் எக்கர்
தங்களைப் பல்லறம்

காட்டியே .............................................................................................

............................................. திருவாலவாய் அரன் நிற்கவே

(திருவாலவாய் பதிகம் : பா : 5 )

என்று திருஞானசம்பந்தர் கிளிவிருத்தம், எலியின் தொழில்பாட்டு (எலியின் விருத்தம்) பற்றிக் கூறுகிறார்.

அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே

(ஆதிபுராணத் திருக்குறுந்தொகைப் பா. 7)

(அரி = திருமால்; அயற்கு = அயனுக்கு; அயன்= பிரமன்)

என்று திருநாவுக்கரசர் பாடலிலும் அறியலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரது பாடல்களிலும், அந்நூல்கள் குறிக்கப்பட்டிருப்பதால் இவை அவர்களது காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முந்தியவை. சமணம் செழித்திருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாக இருத்தல் வேண்டும் எனலாம்.