2.1 பின்புலங்கள்

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி என்பர். இலக்கியம் அது தோன்றிய காலச் சூழலைப் பிரதிபலித்தும் காட்டும். காலச் சூழலுக்கேற்ப இலக்கியங்கள் தோன்றுகின்றன, மாறுகின்றன, வளர்ச்சியடைகின்றன. எனவே ஓர் இலக்கியத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் அது தோன்றிய அரசியல், சமூக, சமயச் சூழல்கள் தெரிந்திருக்க வேண்டும். ஏழாம் நூற்றாண்டின் இலக்கியங்களைத் தெரிந்து கொள்வதற்கு அக்காலக்கட்டத்தின் அரசியல், சமூகம், சமயம் ஆகியவை எத்தகைய பின்புலங்களாக இருந்தன என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2.1.1 அரசியல் பின்புலம்

களப்பிரர், சோழர், மழவர் ஆகியோரை வென்று காவிரி ஆறு வரை பல்லவப் பேரரசை நிறுவிய சிம்மவிஷ்ணு கி.பி.615 வரை ஆட்சி செய்தான். களப்பிரரிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றினான். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காவிரி வரை உள்ள நாட்டை அரசாண்டான்.

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான். கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை அறவே நீக்கினான். அவன் தன் வீரத்தாலும், பெருந்தன்மையாலும், பகை அரசர்களுடைய அசையும் பொருட்களையும், அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக் கொண்டான்”

என்று அவந்தி சுந்தரி கதாசாரம் எனும் வடமொழி நூல் கூறுகிறது. ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சி மாநகரைக் குறிக்கிறது. காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான் என்று அந்த நூல் குறிக்கிறது. கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில், ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றுள்ளது. எனவே சோழநாட்டைச் சிம்மவிஷ்ணு வென்று பல்லவரது ஆட்சியின் கீழ்க்கொண்டு வந்தமை புலனாகும்.

சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத்
தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப்
பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல
நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப்
போன்றவன்; செல்வத்தில் குபேரனை ஒத்தவன்.
அவன் அரசர் ஏறு

என்று சிம்மவிஷ்ணு பற்றி அவனது மகன் மகேந்திரவர்மன் தான் இயற்றிய மத்தவிலாசப் பிரகசனத்தில் கூறியுள்ளான்.

சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெல்லாம் பரவியுள்ளது.
இவன் காவிரி பாயப் பெற்ற செழிப்பான சோழ
நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்

என்று மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயம் கூறுகிறது.

இப்பூவுலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான்.
அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான். களப்பிரர்,
மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்

என்று இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயம் கூறுகிறது.

களப்பிரர்  :

தொண்டை நாட்டின் ஒரு பகுதியையும்,  சோழநாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்தவர்கள்.

சோழர்   :

களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டும், உட்படாமலும் காவிரிப் பகுதியை ஆண்டவர்கள். தலைநகரம் உறையூர்.

மழவர்  :

மழ (மலை) நாட்டினர். ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். திருக்கோவலூர் முதலிய மலைப் பகுதிகளில் வாழ்ந்தவர்.

அவந்தி சுந்தரி கதா சாரம்   :

சிம்மவிஷ்ணுவின் அரசவைப் புலவர் தண்டி எனும் வடமொழி வல்லுநர் எழுதிய நூல் ‘அவந்தி சுந்தரி கதா சாரம்’ ஆகும்.

சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவனது மகன் முதலாம் மகேந்திர வர்மன் கி.பி.615 முதல் 630 வரை ஆண்டான். அவனது காலத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுப்பு நடத்தினான்.

துள்ளி விழும் கயல் மீன்களைக் கண்களாகக்
கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின்
மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலில்
கலக்க இயலாதது ஆயிற்று. புலிகேசியும்,
பல்லவப் பனியைப் போக்கும் கடும் கதிரவனாய்ச்
சேர, சோழ, பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.

என்று புலிகேசியின் கல்வெட்டு கூறுகிறது. காஞ்சிபுரத்திற்குப் பத்துக்கல் தொலைவில் உள்ள, ‘புள்ளலூரில் மகேந்திரன் தன் பகைவர்களை அழித்தான்’ என்று இரண்டாம் நந்திவர்ம பல்லவனது காசக்குடி பட்டயம் கூறுகிறது. இவன் காலத்தில் தொடங்கிய பல்லவ-சாளுக்கியப் போர் 150 ஆண்டுகள் வரை ஓயவில்லை. மகேந்திரவர்மன் வடமொழிப் புலமை மிக்கவன். குண்டூரில், ‘சேஜர்லா’ என்னுமிடத்தில் இவன் கல்வெட்டு உள்ளதால், கிருஷ்ணையாறு வரை ஆண்ட பேரரசன் என்பர்.

முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவனது மகன் நரசிம்ம வர்மன் பெரு வீரனாக கி.பி.630 முதல் 668 வரை தமிழகத்தை ஆண்டான்.

“கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல
இப்பல்லவர் மரபில் வந்தவனும் - வணங்காமுடி மன்னர்
தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும்-
தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம்
போன்றவனும் - நரசிங்கப் பெருமானே தோன்றினாற்
போல வந்தவனும்- சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை
அடிக்கடி முறியடித்தவனும் - பலநூறு போர்கள்
புரிந்தவனும் - பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய
இடத்துப் போர்களில் புலிகேசி தோற்று ஓடிய போது
‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய
பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்”

என்று கூரம் பட்டயங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய, களப்பிரர்களோடு அடிக்கடி போர் செய்ய வேண்டிய சூழல் பல்லவருக்கு இருந்ததைத் தெளியலாம்.

இரண்டாம் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மனின் மகன். ‘அந்தந்த வகுப்பார் நடக்க வேண்டிய முறைகளைக் கூறும் அறநூல் வழி ஆண்டான் இவன்’ என்று வேலூர் பாளையப்பட்டுக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குப் பின் பரமேசுவரவர்மன் கி.பி.670 முதல் 685 வரை ஆண்டான். “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்ரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடும்படி செய்தான் என்று கூரம் பட்டயம் இவன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனை வென்ற செய்தியைக் கூறுகிறது. எனினும், சாளுக்கிய புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்தன், பாண்டியன் பராங்குச மாறவர்மனுடன் (கி.பி. 670-700) கூட்டணி அமைத்துக் காஞ்சியில், “பரமேசுவர வர்மனைத் தோற்கடித்தான்” என்று சாளுக்கியப் பட்டயங்கள் கூறுகின்றன. பின்னர் பல்லவ மன்னன் தனது படைகளைத் திரட்டி உறையூர் அருகில் உள்ள பெருவளிநல்லூரில் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்து இழந்த புகழை மீட்டான்.

(சாளுக்கிய அரசு : பல்லவரது கொடிய பகைவர் சாளுக்கியர்.
   

கிருஷ்ணை ஆறு வரை ஆண்டவர் மேலைச் சாளுக்கியர் ஆவார். வடக்கே கோதாவரிக்கும், கிருஷ்ணை ஆற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டனர்.)

2.1.2 சமூகப் பின்புலம்

பல்லவர்கள் தமிழகத்தின் வடக்கிலிருந்து வந்தவர்கள். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் நால்வகைச் சாதியின் புனித சட்டத்தை மகேந்திரவர்மன் காப்பாற்றினான் என்று கூரம் சாசனம் கூறுகிறது. ஒவ்வொரு சாதியினருக்கும் தனி விதிகளைப் பல்லவ வேந்தர்கள் நடைமுறைப்படுத்தினர் என்று காசக்குடி பட்டயம் கூறுகின்றது. அந்தணர்கள் மண்ணுலகத் தேவர்கள் என்று பட்டயங்கள் கூறுகின்றன. அரசுப்பணி, கோவில் பணி, கல்விச் சலுகை, இறையிலி நிலம், வரிச்சலுகைகள் அவர்களுக்குக் கிடைத்தன. சமூகத்தில் அவர்கள் நிலை உயர்ந்திருந்தது. அந்தணருக்காகப் புதியதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் மிகுந்த ஊர்கள், ‘பிரம்மதேயச் சிற்றூர்கள்’ எனப்பட்டன. இச்சிற்றூர்கள் எத்தகைய வரியையும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியது இல்லை. உதயச்சந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் என்பன இத்தகு பிரம்மதேயச் சிற்றூர்களாகும். இவை சமூகத்தில் அந்தணர் நிலையை உயர்த்தின.

வேதியர்களுக்கு அடுத்த நிலையில் ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆட்சிப் பொறுப்பும், பாதுகாப்புப் பொறுப்பும் அவர்களது நிலையை உயர்த்தின. சமூகத்தில் எஞ்சிய மக்கள் அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு செய்யப்பட்டிருந்தனர்.

2.1.3 சமயப் பின்புலம்

சிம்மவிஷ்ணு என்னும் பெயரைக் கொண்டே அவன் வைணவன் என்று அறியலாம். ‘பக்தி ஆராதித்த விஷ்ணு - சிம்மவிஷ்ணு' என்று இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் கோவிலின் உள்ளே வடபுறப் பாறையில், ‘ஸ்ரீ சிம்ம விஷ்ணு போதாதிராஜன்’ என்று பொறிக்கப்பட்டு, அதன் அடியில் அமர்ந்த நிலையில் ஓர் ஆண் உருவம் உள்ளது. கிரீடம் அணிந்து, மார்பிலும், கழுத்திலும் அணிகள் நிறைந்துள்ளன. அதன் இருபுறமும் முடியணிந்த பெண் உருவங்கள் நின்ற நிலையில் உள்ளன. தமிழ்நாட்டிற்கே புதிய குகைக்கோயிலை அமைத்தவன் சிம்மவிஷ்ணு ஆவான். அதன் எதிரே உள்ள தென்புறப் பாறை மீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதி ராஜன்’ என்று பொறிக்கப்பட்டு, அதன் அடியில் முடியும், அணிகளும் அணிந்த மகேந்திரன் நிற்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது.

மகேந்திரன் ஆட்சியின் முற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. மகேந்திரவர்ம பல்லவனே சமணனாக இருந்து, பின் சைவனாக மாறினான். குகைகளைக் கோவில்களாகக் குடைந்தவன் இவனே. பாறைகளைக் கோயில்களாக மாற்றியவன் இவனே.

லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர்
கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால்
புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம்
உலகத்தில் நீண்டநாள் நிலைத்திருப்பதாக

என்று திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோயிலையும் மகேந்திரவர்ம பல்லவன் அமைத்தான். இவன் சமணனாக இருந்தபோது, சமணர் சொற்கேட்டு, அப்பர்க்குக் கொடுமைகள் செய்தான். இறுதியில் இவன் சைவனாக மாறியதும், குடிகளும் சைவர் ஆயினர். சமணம் தளர்ந்தது. சைவம் வளர்ந்தது. திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணப் பள்ளியை இடித்து அக்கற்களைக் கொண்டு வந்து திருவதிகையில் சிவன் கோயிலைக் கட்டி அதற்குத் தன் பெயரால், ‘குணபர ஈச்சரம்’ என்று பெயரிட்டு வழங்கினான். (திருநாவுக்கரசர் புராணம்: 146) மண்டபப்பட்டில் மும்மூர்த்தி கோவிலும், சித்தன்னவாசலில் சமணர் கோவிலும் மகேந்திவர்ம பல்லவனால் குடையப்பட்டவை. மாமண்டூர், சிங்கவரம், நாமக்கல், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் குடைந்து அமைக்கப்பட்டவை பெருமாள் கோயில்களாம். இதனால் அவன் கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு மிக்கு வாழ்ந்தமை புலனாகும்.

செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு எதுவுமின்றி
பிரமன், சிவன், விஷ்ணு ஆகியோருக்கு விசித்திர
சித்தர் ஆலயங்கள் கட்டினார்.

என்று மண்டகப்பட்டுக் கல்வெட்டு மகேந்திரவர்மன் பாறையைக் குடைந்து கோவில் கட்டியதைக் கூறும். (விசித்திர சித்தர் என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்த மற்றொரு பெயர் ஆகும்.)

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமாள் குகைக்கோவில், கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும், மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பெற்ற திருச்சிராப்பள்ளி மலையடிக் குகைக்கோவில், மகாபலிபுரத்தில், ‘மண்டபங்கள்’ என்றழைக்கப்படும் கோயில்களாகிய, ‘மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம்’, ஒரு கல்லையே கோயிலாகச் செதுக்கி உருவாக்கிய “தருமராசன் தேர், பீமசேனன் தேர், அர்ச்சுனன் தேர், திரௌபதி தேர், சகாதேவன் தேர்” போல்வன நரசிம்மவர்ம பல்லவன் கட்டியவை. பாறை மீது செதுக்கிய கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்கும் காட்சி இவனது சமயப் பற்றினைப் புலப்படுத்தும்.

பரமேசுவரவர்ம பல்லவன் சிறந்த சிவபக்தன். ‘கூரம்’ என்ற சிற்றூரில் சிவன் கோவிலைக் கட்டி, அதற்குப் ‘பல்லவ பரமேசுவர கிருகம்’ என்று தன் பெயரையே இட்டான். கோயிலில் ‘பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன்’ என்று கூரம் பட்டயம் கூறுகிறது. மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் கணேசர் கோயிலைக் கட்டினான். இராமனுசர் மண்டபம் அமைத்தான். தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான். கணேசர் கோவில், தருமராசர் மண்டபம், இராமானுசர் மண்டபம் ஆகியவை எல்லாம் சிவன் கோயில்களே என்பது அங்குள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இராசசிம்ம பல்லவன் சிறந்த சிவபக்தன். காஞ்சியில் ஐராவதேச்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள கோவில், பனைமலைக் கோயில் ஆகியவற்றைக் கட்டினான். விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் பனமலை உள்ளது. இராசசிம்மனின் மனைவி ரங்கபதாகை என்பவள் காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறு சிறிய கோயில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளாள்.