| 2.6 இதிகாசங்கள்  
        பல்லவர் காலத்தில் சமண, பௌத்த மதங்களது செல்வாக்குக் குன்றியது. சைவ, வைணவ சமயங்களின் பலம் வளர்ந்தது. மன்னர்களே தீவிர சைவராகவும், வைணவராகவும் இருந்ததையும், கோயில்களை அமைப்பதில் தீவிர விருப்பினராக இருந்ததையும், வழிபாடுகளுக்குக் கொடை தருவதில் ஈடுபாடு மிக்கவராக இருந்ததையும் இப்பாடத்தின் முற்பகுதியில் பார்த்தோம். அவ்வகையில், இராமாயண, மகாபாரத நூல்களை அடியொற்றி நூல்கள் எழுந்ததைக் காணமுடிகிறது.   பெருந்தேவனாரின் பழைய பாரதம் போலவே, பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்தது. அகவல் செய்யுளால் இயற்றப்பட்டது. இந்நூலின் ஐந்து செய்யுள்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. மற்றப் பாடல்கள் கிடைக்கவில்லை. இந்நூலை இயற்றியவர் பெயரும் தெரியவில்லை.   சமணர்கள் பெரிதும் போற்றிய ‘சைன இராமாயணம்’ எனும் சமண இராமாயணம் நூலும் இருந்தது. அதிலும் சில செய்யுள்களே இப்போது கிடைக்கின்றன. பிற்காலத்துப் புலவர்கள் தாம் தொகுத்த நூலில் சேர்த்து வைத்ததால் அச்சில செய்யுள்கள் கிடைக்கின்றன. கம்பரது இராமாயணம் பிற்காலத்தில் வந்த பின்னர் அதன் சிறப்பிற்கு முன் நிற்க மாட்டாமல், இந்த இராமாயண நூல்கள் மறைந்திருக்க வேண்டும். ஒரு பொருள் பற்றிய சிறந்த நூல் வந்த பின்னர் அதற்கு முன்பிருந்த சிறப்புக் குறைந்த நூல்களைப் போற்றாமல் விட்டுவிடும் பழக்கம் உண்டு என்பதைத் தமிழ்இலக்கிய வரலாறு உணர்த்துவதாக மு.வரதராசனார் கூறுவார்.  |