3.1 பின்புலங்கள்

இக்காலக் கட்டத்திலுள்ள அரசியல், சமூக, சமயப் பின்புலங்களை முதலில் பார்ப்போம்.

3.1.1 அரசியல் பின்புலம்

இராசசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (700-728) அரசாண்டான். இவனது காலம் போர் இல்லாத அமைதியான ஆட்சிக்காலம் ஆகும். இராச சிம்மனது மகன் இரண்டாம் பரமேசுவரவர்ம பல்லவன் மூன்று ஆண்டுகள் (கி.பி.728 - 731) ஆட்சி செய்தபோது சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் மீண்டும் பல்லவர் மீது படையெடுத்துத் தாக்கினான். சாளுக்கியப் படை விரட்டியடிக்கப்பட்டது. இவனுக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் நந்திவர்ம பல்லவன் அறுபத்தைந்து ஆண்டுகள் (கி.பி.731-796) நிலையாக ஆட்சி செய்த மன்னன் ஆவான். நந்திவர்மன் கங்க நாட்டின் மீது படையெடுத்து வென்றான். கி.பி.767-இல் காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள, ‘பெண்ணாடம்' என்ற இடத்தில் பாண்டியன் முதலாம் வரகுணனிடம் போரிட்டு, நந்திவர்ம பல்லவனின் படைகள் தோற்றன. பாண்டியரது செல்வாக்கு வளர்வதைக் கண்ட நந்திவர்ம பல்லவன் கொங்கு மன்னருடனும், கேரள மன்னருடனும் தகடூரை ஆண்ட அதியமானுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு வலிய கூட்டணியை அமைத்தான். பாண்டியன் இக்கூட்டணியை வென்றான். கொங்கு நாடு பாண்டியர் வசமானது. கொங்கு அரசன் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். அதியமான் தோற்றான். பாண்டிய நாட்டுப் படை பல்லவ நாட்டை ஊடுருவிச் சென்றது. தஞ்சை மாவட்டத்தின் மையத்தில் உள்ள, ‘இடவை' எனும் இடத்தில் பாண்டியன் பாசறையை அமைத்தான். பாண்டியனை வெல்வதற்கு நந்திவர்ம பல்லவன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாவது விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது படையெடுத்து, வந்து, வென்று கைலாசநாதர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கிச் சென்றான். இராட்டிரகூட மன்னன் தந்திதுர்கனுக்கும், பல்லவ நந்திவர்மனுக்கும் போர் நடந்தது. பல்லவமன்னன், இராட்டிரகூட மன்னன் மகள் ரேவாவை மணந்து கொள்ளவே, பகை நட்பாக மாறியது. பல்லவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதை இந்நூற்றாண்டு அரசியல் வரலாறு பதிவு செய்கிறது. இரண்டாம் நந்திவர்மனின் மகன் தந்திவர்மன் (கி.பி.796 - 847) காலத்தில் பல்லவர் தேசம், பாண்டியர் மற்றும் இராட்டிரகூடரது தாக்குதலுக்கு உள்ளானது.

3.1.2 சமயப் பின்புலம்

இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.700-728) காஞ்சியில் கைலாச நாதர் கோயிலையும், பனைமலையில் உள்ள சிவன் கோயிலையும், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் கட்டினான். பல்லவ நாட்டை அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தான். பல பழைய கோயில்களைப் புதுப்பித்தான். புதிய கோயில்களைக் கட்டினான். காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில் முதலியன இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்களாம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட மற்றக் கோயில்களுக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்து, சில காலம் காஞ்சியில் தங்கியிருந்துப் பின்னர் சாளுக்கிய நாடு திரும்பினான். பகை அரசனையும் பக்தி எனும் சரடு பிணைத்திருந்ததை இதனால் அறிய முடிகிறது.

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். ‘நந்திபுர விண்ணகரம், பரமேசுவர விண்ணகரம்' என அவர் நூல்களில் வரும் பாசுரக் குறிப்புகள் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைக் குறிப்பனவாம்.

3.1.3 சமூகப் பின்புலம்

சமூகத்தில் வேதியர்கள் உயர்நிலையில் இருந்தனர். நில உடைமை நிலக்கிழார்களை உயர்த்தியது. உழைக்கும் மக்கள் எளிய நிலையில் இருந்தனர். பல தொழில்கள் இழிவானவை என ஒதுக்கப்பட்டு அவற்றைச் செய்யும் தொழிலாளர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்கள் என்று வைக்கப்பட்டனர். சமூகத்தின் அடிமட்டத்தில் வலுவற்று இருந்தவர்களை ஆளோலை முறைப்படி அடிமைப்படுத்தும் வழக்கம் இக்காலத்தில் இருந்ததைச் சுந்தரரின் சரிதம் புலப்படுத்துகிறது. சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருக்கின்ற தருணத்தில் அங்கே வரும் வயது முதிர்ந்த ஒருவர், சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதிக் கொடுத்ததைக் கூறித் திருமணத்தைத் தடுத்து விடுகின்றார். வறுமை மேலிட்டால், நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெறும் முறை இருந்தது. இதற்கு, ‘ஒற்றி வைத்தல்' என்று பெயர். பணம் கிடைத்ததும் அதைத் தந்து மீட்க வேண்டும். ‘ஒற்றியூர்' என்ற இடத்துச் சிவனைப் புகழும் பதிகத்தில் இவ்வழக்கம் சொல்லப்பட்டுள்ளது.

(வேதியர் - அந்தணர்கள்; ஆளோலை - நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல்.)

சமூக மாற்றம்

அரசனால் கோயிலுக்கென்று விடப்படும் ஊர் தேவதானச் சிற்றூர் எனப்பட்டது. மூன்றாம் நந்திவர்மன் திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரைக் கோயிலுக்கு என்று (யக்ஞேசுவரர்) தந்தான். அதன் வருவாய் முழுதும் கோயில் பணிகளுக்குச் செலவிடப்பட்டது.

மறையவருக்கு விடப்படும் ஊர் பிரம்மதேயம் ஆகும். உதயச் சந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் என்பன இக்காலத்தில் அவ்வாறு விடப்பட்டனவாம். ‘பள்ளிச்சந்தம்' என்பது சமணப் பள்ளிக்கு என விடப்பட்ட இறையிலி நிலம் ஆகும்.

பல்லவர் பட்டயங்களில் பௌத்தருக்கு நிலம் விட்டதாக ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்பது இந்நூற்றாண்டில் பௌத்தம் தொடர்பான ஓர் இலக்கியமும் தோன்றவில்லை என்பதுடன் ஒப்பு நோக்கற்குரியது.

சிவனடியார்களும் வைணவ ஆழ்வார்களும் போற்றப்பட்டனர். மக்களாலும், மன்னர்களாலும் ஓம்பப்பட்டனர். சாதி வேற்றுமை பக்தியின் முன் பாராட்டப்படவில்லை. அடியவர் சுந்தரரையும், அரசன் சேரமான் பெருமாளையும் நண்பர்களாக, பக்தி ஒரு தளத்தில் வைத்தது. சுந்தரர் சாதி வேற்றுமை பாராட்டாமல் திருவாரூரில் ஆடல், பாடலில் ஈடுபட்டு இருந்த கணிகையர்குலத்து மகள் பரவையாரையும், பின்னர்த் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்ததாகக் கூறப்படுகிறது.

ஓயாத பெரும்போர்களால் அரசியல் நிலைகுலைய இந்நூற்றாண்டில் பஞ்சம் ஏற்பட்டது. திருவீழிமிழலையில் இறைவனைப் பாடிப் பொற்காசு பெற்று அடியவரைச் சமயகுரவர்கள் உண்பித்த நிகழ்ச்சி, கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியதைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்பர்.

(பண்டாரம் - களஞ்சியம்)

3.1.4 மக்கள் வாழ்வியல் பின்புலம்

பல்லவ அரசர்கள் தந்த சலுகைகள் அந்தணர்களை ஏற்றமுறச் செய்தன. நால்வகை வருணக் கோட்பாடே சமூக நியதியாக இருந்தது. உழைக்கும் எளிய மக்கள் தத்தம் உழைப்பால் வாழ்ந்தனர். நீறுபூசி, கமண்டலம் ஏந்தி, பதிகங்களைப் பாடி, சிவனிருக்கும் தலங்கள்தோறும் சென்று வழிப்பட்டு, பிறர் இடும் பிச்சையில் வாழும் சிவனடியார்கள் பெருகினர். சிவனடியவர்களுக்கு உணவளிப்பது ஆயிரம் கோவிலைக் கட்டுவதைவிடச் சிறந்ததாகக் கருதப்பட்டது. இறைவனை வழிபட்டு, இரந்து உண்டு வாழ்தல் ஏளனத்திற்குரியதாகக் கருதப்படவில்லை. புண்ணியச் செலவுகள் பெருகின. அவரவர் வசதிக்கேற்பக் கோவிலுக்கும், அடியவர்களுக்கும் வழங்கினர். கல்லையும் கனிய வைக்கும் பக்திப் பாசுரங்கள் மக்களின் மனத்தைத் தொட்டன. மக்களிடமும், மன்னர்களிடமும் அடியவர்களுக்குச் செல்வாக்கு இருந்தது. (நால்வகை வருணம் - அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று மக்களை வகைப்படுத்துதல்; கமண்டலம் - சிவனடியார் கையிலுள்ள பாத்திரம்)

அடியவர்கள் தலயாத்திரை செய்தனர். கோயில்கள் சிறப்புப் பெற்றன. கோயில் பணியாளர்கள், ஆடல் வல்ல பெண்டிர், இசை வல்லவர், வாத்தியம் இசைப்பவர், கட்டுமானக் கலைஞர்கள், சிற்பிகள், தச்சர்கள், ஓவிய விற்பன்னர்கள், ஓதுவார்கள் என்று கோயிலை ஒட்டி வாழ்வு நடத்துவோர் எண்ணிக்கை பெருகியது.

தமிழ்ப் புலவர்களைப் பல்லவர்களுக்கு உட்பட்ட முத்தரையர்கள் ஆதரித்ததாகத் தெரிகிறது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பெரும்பிடுகு முத்தரையர் அவையத்துப் புலவர்களாகிய பாச்சில்வேள் நம்பன் வெண்பாப் பாடல்களும், அநிருத்தன் கட்டளைக் கலித்துறையும், கோட்டாற்று இளம் பெருமானார் பாடல்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளன. அவை பற்றிய விளக்கம் பாடத்தில் தரப்பட்டுள்ளது. (கட்டளைக் கலித்துறை - பாவகையுள் ஒன்று)

கோயில்களை அடுத்து அடியவர்கட்கும், ஏழைகளுக்கும் உணவு நல்கும் உணவுச்சாலைகள் இருந்தன. உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும், ஒரு பகுதி நெல், அரிசி ஆகியவற்றைப் பல்லவ அரசர்கள் பெற்றனர். இச்செய்தியை இரண்டாம் நந்திவர்மன் கல்வெட்டு அறிவிக்கின்றது. இத்தகைய உணவுச் சாலைகள் அல்லது சத்திரங்களில் ஏழையர், வழிப்போக்கர்கள், அடியவர்கள் உண்டு வாழ்ந்தனர். விழாக் காலங்களில் உள் ஊரினர், வெளி ஊரினர் என்று அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அதற்கு அரசனும் பொருள் உதவி செய்வதுண்டு. திரு ஆதிரை, சித்திரை விசுத் திருவிழா போன்ற கோயில் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. சித்திரை விசுத் திருவிழாவிற்கு ஒருவர் 15 1/2 கழஞ்சு பொன் திருத்தவத்துறைக் (லால்குடி) கோவிலுக்குத் தந்ததை ஒரு கல்வெட்டு குறிக்கிறது. கோயில்கள் வழிபாட்டுக்கூடங்களாகவும், ஊரினர்க்கு உணவூட்டும் அறச் சாலைகளாகவும், நெருக்கடி நேரத்தில் பணஉதவி செய்யும் சேமிப்புக் களன்களாகவும் திகழ்ந்தன. (கழஞ்சு - பொன்னை அளக்கும் அளவை)

3.1.5 இலக்கியப் பாடுபொருள் மாற்றம்

பல்லவரது இலச்சினை நந்தி ஆகும். பல்லவரது கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்திப் பதிவு இருத்தலைக் காணலாம். தனிப்பட்ட பல்லவ அரசன் சமணனாக இருந்தபோதும், வைணவனாக இருந்தபோதும், சைவனாக இருந்தபோதும், இந்த நந்திக் கொடி, நந்தி இலச்சினை, நந்திப் பதிவு நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. இதிலிருந்து பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது எனத் தெளியலாம் என்பர். கூரம், காசக்குடி பட்டயங்களில் நந்திமீது லிங்கம் அமைந்திருப்பதும் கருதத்தக்கது. அவ்வகையில் சிவபக்தியைப் பாடுபொருளாகக் கொண்ட சைவ இலக்கியங்களே தோன்றின.

அறுபத்தைந்து ஆண்டுகள் அரசாண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம், ‘அரிசரணபரன்' என்றும், தண்டன் தோட்டப் பட்டயம், ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை' என்றும் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் பாடிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும், பரமேச்சுர விண்ணகரப் பதிகத்தையும் (வைகுந்தப் பெருமாள் கோயில்) கொற்றங்குடிப் பட்டயத்தின் பெருமாள் வணக்கமாக உள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின் இவன் சிறந்த வைணவன் என்பது தெளியலாம். கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்றாண்டார் கோயில் ஆகியவை இவனால் கட்டப்பட்டவை. எனவே இக்காலத்தில் வைணவ இலக்கியங்கள் தோன்றி நிலைத்தன.

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ஆர்க்காடு நகருக்கு அருகில் உள்ள பஞ்சபாண்டவர் மலையில் ஒரு குகை சமணருக்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், ‘நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியாருக்குப் படிமம் எடுக்கப்பட்டது' என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் இப்பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். அவ்வகையில் சமண இலக்கியங்களாகப் பெருங்கதை, மேருமந்தர புராணத்தைக் காண முடிகிறது.

முத்தரையர்களின் ஆதரவில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் யாத்த பாடல்கள் மன்னர்களது சிறப்பை நுவலுகின்றன.