|  
   3.3 வைணவ இலக்கியம்
   
  திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, 
 திருவரங்கம், திருஅத்தியூர்
 ஆகிய வைணவத் தலங்களது பெயரை வாயால் உச்சரித்தாலே சுகம்
 என்று திருமால், திருமால் உறையும் கோயில், திருமாலின் 
 தலம்
 ஆகிய யாவுமே புனிதமானவை என்ற உணர்வை விதைத்தது
 வைணவம். 
  
 தேனோங்கு சோலைத் திருவேங்கடம் 
 என்றும் 
 வானோங்கு சோலை மலையென்றும் - தானோங்கு 
 தென்னரங்கம் என்றும் திரு அத்தியூர் என்றும் 
 சொன்னவர்க்கும் உண்டே சுகம். 
  
 
 பல்லவ மன்னர்களது 
 ஆதரவும், ஆழ்வார்களது பாசுரங்களும்
 வைணவ இயக்கத்தை வழி நடத்தின. 
 
  3.3.1 திருப்பல்லாண்டு  
      நாலாயிரத் 
        திவ்வியப் பிரபந்தம் என்பது ஆழ்வார்களது பாசுரங்களின் தொகுப்பு 
        நூலாகும். இதன் ‘முதலாவது ஆயிரத்தில்' முதல் நூலாகத் திருப்பல்லாண்டு 
        அமைந்துள்ளது. திருப்பல்லாண்டைப் பாடியவர் பெரியாழ்வார். இந்நூல் 12 பாடல்களைக் 
        கொண்டது. திருமாலை வாழ்த்துவது. ‘இன்றும், இனிவரும் ஏழு ஏழு (7 x 7= 49) 
        பிறவிகளிலும் உனக்கே ஆள் ஆனோம்' என்று உறுதிமொழி கூறும் பாட்டு இது.  
      
      பல்லாண்டு பல்லாண்டு 
        பல்லாயிரத்தாண்டு 
        பலகோடி நூறாயிரம்  
        மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்  
        சேவடி செவ்வி திருக்காப்பு  
      
      என ஆயிரம், கோடி, நூறு ஆகிய 
        எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. என்றென்றும் திருமாலின் திருப்பாதங்களே 
        சரண் என்று தஞ்சம் புகுவது பற்றிக் கூறுவன இப்பாசுரங்கள். 
       
 3.3.2 பெரியாழ்வார் திருமொழி  
       
        பெரியாழ்வார் திருமொழி முதல் ஆயிரத்தில், திருப்பல்லாண்டை அடுத்து 
        அமைந்துள்ளது. இதில் 461 பாடல்கள் உள்ளன. கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் 
        பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவில்லிபுத்தூரில் பிறந்தவர் பெரியாழ்வார். 
        பட்டர்பிரான், விஷ்ணுசித்தன் எனக் குறிக்கப்படுபவர். ஆண்டாளை வளர்த்தவர். 
        கண்ணனின் பிறப்பிற்காக மகிழ்தல், வந்து பிறந்த கண்ணனின் கால்விரல், தொடை, 
        உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், 
        காதின் குழை, நெற்றிமுடி ஆகியவற்றின் அழகைக் காண அயலவரை அழைத்தல், கண்ணன் 
        தொட்டிலில் உறங்குமாறு பாடும் தாலாட்டுப் பகுதி, நிலவைக் குழந்தையுடன் விளையாட 
        அழைத்தல், தளர்நடை நடக்கும் குழந்தையின் விளையாட்டு, குறும்புச்செயல் என்று 
        யாவற்றையும் பாடுபொருள் ஆக்கிப் பாடியுள்ளார். பிற்காலத்தில் குழந்தையின் 
        வளர்ச்சியைப் பத்துப் பருவங்கள் ஆக்கிப் பத்துப் பத்துபாடல்களில் பாடும், 
        ‘பிள்ளைத் தமிழ்' என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வித்தாக அமைந்தது பெரியாழ்வாரது 
        பாசுரங்களேயாம். திருமாலுக்குத் திருட்டி படாமல் ‘பல்லாண்டு பாடியதால், ‘பெரியாழ்வார்' 
        என்று அழைக்கப்படுகிறார். பாண்டியன் ஸ்ரீவல்லபன் காலத்தில் அவனது அவையில் 
        நடந்த விவாதத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர் இவராவர். 
 (திருட்டி - கண்ணேறு ; கண்பட்டு ஏதும் கெடுதல் 
 விளைந்து
  விடுமோ என்று 
 அஞ்சி அதை நீக்க
  முற்படுதல்.) 
  
 3.3.3 ஆண்டாள் அருளியவை  
 இக்காலக் கட்டத்தில் 
 ஆண்டாள் பாடியவை திருப்பாவை,
 நாச்சியார் திருமொழி ஆகியவையாகும். 
  
 
    திருப்பாவை 
  
      ஆண்டாள் பாடியது, 
         திருப்பாவை  ஆகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த 
        த்தில், ‘முதலாவது ஆயிரத்தில்', பெரியாழ்வார் திருமொழியை அடுத்து, 
         திருப்பாவை  அமைந்துள்ளது. 30 பாடல்களைக் கொண்டது. ‘ஆண்டாள் 
        என்பது கற்பனைப் பாத்திரம். அவர் பாடியதாகச் சொல்லப்படும் பாடல்கள் பெரியாழ்வாரே 
        பாடியவை' என்று மூதறிஞர் இராஜாஜி கூறுவார். திருப்பாவையில் இடம்பெறும், ‘வெள்ளி 
        எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற பாடல் வரியைக் கொண்டு வானவியல் வல்லுநர்கள், 
        ஆண்டாள் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர் என்பர். திருப்பாவை முப்பது பாடல்களும் 
        மார்கழி மாதத்தில் இளம்பெண்களால் இன்றும் பாடப்படுகின்றன. இன்றளவும் தமிழகத்தில் 
        உள்ள வைணவத் திருக்கோயில்களிலும், திருப்பதியிலும், வைணவர் இல்லங்களிலும் 
        மார்கழி மாதத்தில் அதி காலையில் திருப்பாவை பாடப்படுகிறது. பெரியாழ்வார் 
        பெற்ற பெண்கொடி என்று போற்றப்படுபவர் ஆண்டாள் ஆவார். பன்னிரு ஆழ்வார்களில் 
        இவர் ஒருவரே பெண் ஆழ்வார் ஆவார். 
       
    நாச்சியார் 
 திருமொழி  
       ஆண்டாள் பாடியது, 
        நாச்சியார் திருமொழி  ஆகும். முதலாவது ஆயிரத்தில் இடம் 
        பெற்றுள்ளது. இதில் 143 பாடல்கள் உள்ளன. ஆண்டாள் பாசுரங்களில் திருப்பாவை 
         தவிர மற்றவற்றைக் கற்பனை என்று சொல்ல முடியவில்லை. உண்மை உணர்வு 
        ததும்பப் பாடப்பட்டுள்ளது. திருமாலையே மணந்துகொள்ள உறுதி பூண்டு, ‘மானிடர்களுக்கு 
        என்று திருமணம் பேசினால் உயிர் வாழமாட்டேன்' என்றவர் ஆண்டாள். திருமாலை மணந்து 
        கொள்வதாகக் கனவு கண்டு இவர் பாடியது, ‘வாரண மாயிரம்' என்ற பாடல். இப்பாடல் 
        தென்கலை வைணவர்களது திருமணங்களில் இன்றும் தவறாமல் ஓதப்படுகிறது. 
       
 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று 
 ஊத 
 முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்,  
 மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்  
 கைத்தலம் 
 பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் 
 (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : 561) 
  
      என்று தனது கனவைத் 
        தோழியருடன் பகிர்ந்து கொள்வதாகப் பாடல் அமைந்துள்ளது. 
  
 ஆண்டாளின் பாடல்களுள் திருப்பாவை 
 இன்றும் பெண்களால்
 போற்றிப் பாராயணம் செய்யப்படுகிறது. தமிழர் 
 மட்டுமன்றிக்
 கன்னடர், ஆந்திரர் ஆகியோரும் தம்தம் மொழியில் 
 எழுதி
 வைத்துப் பாடி வழிபடுகின்றனர். ஆண்டாளின், திருப்பாவையும்,
 மாணிக்க வாசகரது,  திருவெம்பாவையும்  
 இடைக்காலச் சோழர்
 ஆட்சியில் கடல் கடந்து 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம்
 நாட்டில் பரவின. சயாம் அரசு கொண்டாடும் விழாவின் பெயர்,
 ‘திரியெம்பாவ - த்ரிபாவ' என்பது. அவ்விழாவில் திருப்பாவை,
 திருவெம்பாவைப் பாடல்களை மந்திரம் போல் பாடி வருகின்றனர். 
  
 3.3.4 குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி  
 குலசேகர ஆழ்வார் 
 பாடிய பாசுரத் தொகுப்பின் பெயர்
 பெருமாள் திருமொழி  ஆகும்.  நாலாயிரத் திவ்வியப்
 பிரபந்தத்தில், முதலாவது ஆயிரத்தில் இந்நூல் 
 உள்ளது. இதில் 105
 பாடல்கள் உள்ளன. குலசேகர ஆழ்வார், இராம அவதாரத்தில்
 பெரிதும் ஈடுபாடு உடையவர். வித்துவக் கோடு  எனும் 
 தலத்தில்
 எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்து இவர் பாடும் பாடல்கள்
 பக்திச்சுவை மிக்கன. குலசேகர ஆழ்வார், திருவஞ்சைக் களத்தில்
 சேர மரபில் பிறந்தவர். செல்வத்தையோ, மனிதப் பிறவியையோ
 இவர் பொருட்படுத்தவில்லை. திருப்பதி மலையில் ஒரு சிகரமாக,
 மீனாக, காட்டு ஆறாக, பாதைகளாக, படியாக இருக்க வேண்டும்
 என்ற ஆவலைத் தன் பாசுரங்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு
 பதிகத்தில் இராமாயணக் கதைச்சுருக்கத்தைப் பாடியுள்ளார்.
 பெரியாழ்வாரும் இராமனைப் பல இடங்களில் 
 பாடியுள்ளார்.
 இலங்கைக்குத் தூது சென்ற அனுமன் 
 இராமன் கூறிய
 அடையாளங்களைச் சீதைக்குச் சொல்கிறான். கணையாழியைத் தந்து
 மகிழ்கிறான் என்று பெரியாழ்வாரின் பத்துப் பாடல்கள் கூறுகின்றன.
 கைகேயி கேட்டபடி இராமன் மரவுரி அணிந்து கானகம் செல்கிறான்.
 அத்துன்பத்தை நினைத்துத் தசரதன் புலம்புகிறான். அத்துயரைக்
 குலசேகர ஆழ்வார் பத்துப்பாடல்களில் பாடியுள்ளார். ஏனைய
 ஆழ்வார்களும் இராமனின் அருஞ்செயல்களையும், பேரருளையும்
 விவரித்துப் பாடி உள்ளனர். ஏழு, எட்டாம் 
 நூற்றாண்டுகளில்
 பாடப்பட்ட இப்பாடல்கள் கம்பரின் காப்பியத்துக்கு வழிவகுத்தன.
 வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிக் 
 கம்பர் தனது
 இராமாயணத்தை எழுதினார். எனினும் இராமாயணத்தின் பக்திச்
 சுவைக்கு ஆழ்வார்களது பாடல்களே அடிப்படையாக அமைந்தன
 எனலாம். 
  
 3.3.5 திருமங்கை ஆழ்வாரின் பிரபந்தங்கள்  
 திருமங்கை ஆழ்வார் பல பிரபந்த 
 நூல்களை இயற்றினார். 
  
    பெரிய 
 திருமொழி  
 திருமங்கை ஆழ்வார் பாடியது, பெரிய 
 திருமொழி. நாலாயிரத்
 திவ்வியப் பிரபந்தத்தில், இரண்டாவது ஆயிரத்தில் 
 பெரிய
 திருமொழி உள்ளது. இதில் 1084 பாடல்கள் உள்ளன. 
      சோழநாட்டில் 
        திருக்குறையலூரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். கள்ளர் மரபைச் சேர்ந்தவர். 
        எல்லா வைணவத் திருப்பதிகளுக்கும் சென்று திருமாலைத் தரிசித்தவர். மிகச்சிறந்த 
        புலமை பெற்றவர். ‘கலீர் கலீர்' என ஒலிக்கும் இனிய பாசுரங்கள் இவருடையவை. 
        அளவிலும், சுவையிலும் பெரிய திருமொழியாக இவரது பாசுரங்கள் உள்ளன.  
        பெரிய திருமொழி  பத்துத் திருமொழிகளாக உள்ளது. திருவரங்கத்தில் 
        உறையும் அரங்கனைக் குறித்து முதல் மூன்று திருமொழிகளும், திருவேங்கடவனைக் 
        குறித்து நான்காவது திருமொழியும், கிருஷ்ண அவதாரத்தைக் குறித்து ஆறு, ஏழு 
        திருமொழிகளும், இராம அவதாரத்தைப் பற்றி எட்டு, ஒன்பது, பத்தாம் திருமொழிகளும் 
        கூறுகின்றன. 
       
    திருக்குறுந்தாண்டகம் 
  
 திருமங்கையாழ்வார் அருளிய 
 மற்றொரு நூல்
 திருக்குறுந்தாண்டகம் ஆகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் 
 இரண்டாவது ஆயிரத்தில் திருக்குறுந்தாண்டகம்  உள்ளது. 
 இதில் 20 பாடல்கள் உள்ளன. சமண, சைவ, புத்த 
 சமயத்தவர்களைக்
 கண்டிக்கிறார். திருமங்கை ஆழ்வார் நாட்டுப்புறப் பாடல் மெட்டில்
 பக்திப் பாடல்களை அமைத்துள்ளார். பெண்கள் விளையாடும்
 விளையாட்டில் ‘சாழல்' என்பது ஒன்று. குயிலே 
 கூவுக என்று
 அழைப்பது ஒருவகை. திருமாலின் பெருமைகளைச் 
 சொல்லிக்
 குயிலைக் கூவ அழைப்பதும், ச்ச்ச்..... என்று பல்லி வீட்டில் 
 ஒலி
 எழுப்பினால் அன்று வீட்டிற்கு யாரோ விருந்தினர் வரப் போகிறார்
 என்ற நம்பிக்கை இன்றளவும் தமிழர்களிடம் 
 உள்ளது. அதை
 வைத்துத் திருமால் வருமாறு ஒலி செய் 
 பல்லியே! என்று
 பல்லியை அழைப்பதும் இவரது பாசுரங்களில் காண முடிகிறது. 
  
    திருநெடுந்தாண்டகம் 
  
 திருநெடுந்தாண்டகம்  
 திருமங்கை ஆழ்வார் பாடியதே ஆகும்.
 இதுவும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 
 இரண்டாவது
 ஆயிரத்தில் உள்ளது. இரண்டாவது ஆயிரத்தில் உள்ள அனைத்துப்
 பாடல்களுமே திருமங்கையாழ்வார் பாடியதாகவே 
 உள்ளன.
 ‘தாண்டகம்' என்பது ஒரு பா வகை. 
 ஆறு சீர்களாக அமைவது குறுந்தாண்டகம் என்றும், எட்டு 
 சீர்களைக் கொண்டது
 திருநெடுந்தாண்டகம் என்றும் குறிக்கப்படும்.
 இது 30 பாடல்களைக்
 கொண்டது. 
  
    திருவெழு கூற்றிருக்கை 
  
  திருமங்கை ஆழ்வார் பாடியது, 
 திருவெழு கூற்றிருக்கை  ஆகும்.
 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில் இப்பாடல் 
 
 
 
 
 
 
 
 
 
 
 அமைந்துள்ளது. ஒரே பாடலைக் கொண்டது. இதுசொல் விளையாட்டு அமைந்த செய்யுள். ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களை அடுக்கியும், இறங்கு வரிசையில் ஏழுமுதல் ஒன்றுவரை குறைத்தும் படித்தால் பொருள் அமையும் ஒரு வகைச் சித்திர கவியாகும்.  
       சைவ 
        சமயக் குருவாகிய திருஞானசம்பந்தரும் திருவெழு கூற்றிருக்கை பாடியிருக்கிறார் 
        என்பதை இங்கே நினைவுகூரலாம். வைணவர்கள் சிவனை இழித்துக் கூறப் பயன்படுத்திய 
        கதைகள் திருமங்கை ஆழ்வார் பாடல்களில் காணப்படுகின்றன. 
       
    சிறிய 
 திருமடல்  
 திருமங்கை ஆழ்வார் பாடிய 
 பாடல், சிறிய திருமடல் ஆகும்.
 நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் 
 நான்காவது ஆயிரம்
 தொகுப்பில் உள்ளது. இது ஒரே பாடல் ஆகும். பழைய 
 காதல்
 மரபை ஒட்டிப் பாடப்பட்டது. காதலில் ஏமாற்றமுற்ற 
 ஒருவன்
 தன்னைத் தானே வருத்திக் கொண்டு உயிர்விடத் துணிவதாக ஒரு
 துறை உண்டு. அது, ‘மடல்' எனப்படும். பனை மடலைக் குதிரை
 வடிவில் செய்து அதன் மேல் இருந்தபடி தன் காதலியின் உருவம்
 தீட்டிய படத்தை ஏந்தியபடி ஊர் நடுவே உண்ணாநோன்பிருந்து
 அழியத் துணிவதாகப் பாடும் துறை அது. ஆசை எந்த அளவுக்குத்
 துன்புறுத்தினாலும் பெண் மடலேறுவது இல்லை 
 என்று
 தொல்காப்பியம் கூறும். அந்த மரபு திருமங்கை ஆழ்வாரால் சிறிய
 திருமடலில் மாற்றப்பட்டு உள்ளது. திருமால் காதலன், அவனை
 அடையத் துடிக்கும் காதலியாகத் தன்னைக் கற்பனை 
 செய்து
 கொள்கிறார். அவனை அடைய முடியாமல் மடல் 
 ஏறுவதாக
 ஆழ்வாரின் பாடல் அமைந்துள்ளது. ‘பெண்கள் மடல் ஏறுவதில்லை'
 என்ற மரபு தென்மொழியாகிய தமிழில் கேட்டதுண்டு. அதை யாம்
 கொள்ளவில்லை. வடக்கே உள்ள நெறியையே விரும்பினோம்.
 எனவே பெண்ணாக இருந்தும் மடல் ஊர்வேன்' என்று 
 காதலி
 சொல்வதாகப் பாடி உள்ளார். 
  
    பெரிய 
 திருமடல்  
 திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் 
 பெரிய திருமடல். இதுவும்
 ஒரே பாடல்தான். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது
 ஆயிரத்தில உள்ள ‘மடல் ஏறுதல்' என்னும் அகப்பொருளில்
 வந்துள்ளது. ஒரு வேறுபாடு என்னவெனில் இங்குப் 
 பெண்
 மடலேறுகிறாள் என்பது. திருமழிசை ஆழ்வார் 
 பாடிய பெரிய
 திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய
 திருமடல், பெரிய திருமடல், திருவெழு கூற்றிருக்கை ஆகிய 6
 பாடல்களும் திருவாய்மொழியின் ஆறு 
 அங்கங்களாகப்
 பாராட்டப்படுகின்றன.  
  |