5.1 பின்புலங்கள்

ஒன்பதாம் நூற்றாண்டில் அரசர்களிடையே நடந்த போர்களால் குழப்பமான சூழலிருந்தது. சமஸ்கிருதம் செல்வாக்கு பெற்றிருந்தது. இருப்பினும், இலக்கண நூல்களும், இலக்கண உரைநூல்களும், நிகண்டுகளும் தோன்றுவதற்குரிய சூழலிருந்தது.

5.1.1 அரசியல் பின்புலம்

மூன்றாம் நந்திவர்மனின் மகன் நிருபதுங்க வர்ம பல்லவன் (கி.பி.850-880) முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் காலத்துப் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன் குடமூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரைத் தோற்கடித்தான். “பாண்டியனிடம் முன்பு தோற்ற பல்லவர் படை அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) பாண்டியனையும், பிறரையும் அரிசிலாற்றங்கரையில் முறியடித்தது என்று பல்லவனது பாகூர்ப் பட்டயம் கூறுகிறது. கி.பி.882 இல் நிருபதுங்கவர்மன் இறந்தவுடன் அவனது மகன் அபராசிதவர்ம பல்லவன் (கி.பி.882-890) ஆளத் தொடங்கினான். இவனுடன் பல்லவ ஆட்சி முடிவுறுகிறது. திருப்புறம்பியம் (கும்பகோணத்துக்கு அருகில் உள்ள இடம்) என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் போர் நடந்தது. இதில் விசயாலய சோழன் (கி.பி.850-870) மகன் ஆதித்த சோழன் (கி.பி.870-907), கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான். கி.பி.890இல் தொண்டை நாடு முழுவதையும் பல்லவரிடம் இருந்து ஆதித்த சோழன் மீட்டுக் கொண்டான். இவ்வாறு ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது காலக்கட்டம் பல்லவ அரசின் முடிவையும், சோழ அரசின் எழுச்சியையும் பதிவு செய்கிறது.

ஏறக்குறைய கி.பி.250இல் சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டை நாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றினர். பின்னர் கி.பி.890 வரையிலும், ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ்நாட்டை ஆண்டனர். அதன் பின்னர், சோழமரபில் ஆதித்த சோழனும், சோழ மரபினரும் பல்லவரை வென்று, இழந்த தம் பேரரசை மீட்டுக் கொண்டனர். காஞ்சியில் பல்லவர் ஆட்சி முடிந்ததும், பல்லவ அரச மரபினர் சோழப் பேரரசில் கூடலூர், சேந்தமங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசர்களாகவும் இருந்தனர். சிலர் தமது பழைய இடமாகிய பல்லாரிக் கோட்டமும், மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்பபாடிக்கே சென்று குறுகிய  நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மைக் காஞ்சி பல்லவ மரபினர் என்றே சொல்லிக் கொண்டனர்.

5.1.2 சமயப் பின்புலம்

நிருபதுங்கவர்மன் காலத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டன. பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடைமுடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம்பூண்டிக் கல்வெட்டு கூறுகிறது. நிருபதுங்க வர்மனின் மனைவி பிருதிவி மாணிக்கம் உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டினாள்.

புதுக்கோட்டையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில் நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

அபராசிதவர்மன் ஆட்சியில் (கி.பி.890இல்) திருத்தணிகைக் கோவில் கட்டப்பட்டது. இதில் அவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அக்கோவில் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் சிவன், பிரமன், கொற்றவை (துர்க்கை), திருமால் ஆகியவரது சிலைகள் உள்ளன. இந்த கோவில் கல்வெட்டில் காணப்படும் வெண்பா அபராசிதவர்மன் பாடியது என்பர். அதுபற்றி இப்பாடத்தின் அடுத்த பகுதியில் காணலாம். அபராசிதவர்மனின் மனைவி மாதேவி அடிகள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தாள். (கழஞ்சு-பொன் அளக்கும் அளவீட்டுக் கருவி) திருவொற்றியூரிலே உள்ள அபராசிதவர்மனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு, அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு, வெற்றிலை, இளநீர், சந்தனம், கற்பூரம் என்பன வாங்க ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது. இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல்லவ மன்னராலும், மக்களாலும் குறைவின்றிச் செய்யப்பட்டன. பழந்தமிழர்க் காலத்துப் பாடல் பெற்ற கோவில்களுக்கும், பல்லவமன்னர்கள் புதிதாகக் கட்டிய கோவில்களுக்கும் இக்காலக்கட்டத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாகும்.

நாயன்மார், ஆழ்வார்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்தில் இருந்த மதிப்பினை நன்கறியலாம். மக்களின் சமயப் பற்றும் தெரிய வருகிறது.

5.1.3 சமூகப் பின்புலம்

பல்லவர் காலத்தில் நான்கு சாதிகளின் அடிப்படையில் தமிழகச் சமுதாயம் அமைந்திருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற பகுப்பு செவ்வனே இருந்து வந்தாக முதலாம் மகேந்திர வர்மனின் கூரம் பட்டயம் தெரிவிக்கிறது. கல்வியில் நாட்டம் உடையவர் களாகவும், மன்னர்களின் பெரும் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பிராமணர்கள் பணியாற்றினர். பக்தி இயக்கம், ‘கடவுள் முன் பக்தர்கள் சமம்' என்ற கருத்தை நிலைப்படுத்த முயன்றது. வேட்டுவகுலத்துக் கண்ணப்பநாயனார், திருப்பாணாழ்வார் போன்றோர் எளிய சாதியினர் ஆவார்.

சமூக மாற்றம்

பல்லவ மன்னர்கள் எல்லோரும் ஒரே சமயத்தினர் என்பதற்கு இல்லை. மகேந்திரவர்ம பல்லவன் சமண, பௌத்த சமயத்தைப் பேணி வளர்த்தான். பின்னர் அப்பரால் சைவ சமயத்தைப் பின்பற்றினான். சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன் வைணவ சமயத்தினர். பரமேசுவரவர்மன், நந்திவர்மன் சைவர்கள், திருமங்கை ஆழ்வாரை ஆதரித்த இரண்டாம் நந்திவர்மன் வைணவன். வைகுந்தப் பெருமாள் கோவிலை இவன் கட்டினான். சிம்மவர்மன் சிறந்த சைவன் ஆவான்.

பாசுபாதர், காபாலிகர், காளாமுகர் ஆகிய சைவ சமயப் பிரிவினர் இருந்தனர். திருநீறு அணிந்து, சிவனே முழு முதல் கடவுள் என்பர் பாசுபதர். காபாலிகர் பைரவரை வணங்கினர். மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை ஆதிபராசக்தி வடிவமாகக் கண்டு வணங்கினர். இறைவனைப் பாடி, ஆடி, மந்திரம் செபித்து, நரபலி இட்டு காளாமுகர் வணங்கினர். எல்லாச் சமயத்தவரும் வாழ்ந்தனர்.

பல்லவர் வடவர் ஆதலின் அவர்தம் பட்டயங்கள் வடமொழியிலேயே எழுதப்பட்டன. முதலாம் பரமேச்சுரவர்மனது கூரம் பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வர்ணனை சிறப்பானது. இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், தண்டன் தோட்டப் பட்டயம், மூன்றாம் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயம் ஆகியவற்றில் வடமொழி நடை சிறப்பானது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக் கல்வெட்டுகள் சுருக்கமும், தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரக் கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொல் தொடர்களைக் கொண்டவை.

லோக விபாகம், கிராதார்ச்சுனியம், அவந்தி சுந்தரி கதை, மத்த விலாசப் பிரகசனம், காவியாதர்சம் போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் காலத்தில் தோன்றியவை.

பிற்காலப் பல்லவர் காலத்தில்தான் தமிழ் மொழியில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் வந்தன. அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், தொடர்கள், வருணனை முதலியன பண்பட்ட தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையவராக இருந்தனர். தமிழ்மொழியை வளர்த்ததுடன், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்தனர். தேவாரத் தமிழ்ப் பதிகங்களும், திவ்வியப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் தமிழ் நயமிக்கன. எனினும் ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு எழுதவும் பிற சிறப்புடைய அரசியல் ஓலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை சான்றுகள் மூலம் உய்த்து உணரலாம்.

5.1.4 மொழிப் பின்னணி

பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழி சிறப்பிடம் பெற்றிருந்தது. மன்னர்தம் அரசவை மொழியாகவும் சமஸ்கிருத மொழி இருந்தது. சமஸ்கிருத மொழிக் கல்லூரிகளுக்கு மன்னர்கள் ஆதரவு தந்தனர். காஞ்சியிலிருந்த கடிகை எனும் கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். சிறந்த அறிஞர்கள் பலர் அதில் பணி புரிந்தனர். பாகூரில் வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது.

துறவியரின் இருப்பிடங்கள் மடங்கள் ஆகும். அவை கற்றறிந்த அறிஞர்தம் உறைவிடங்கள் ஆகும். அன்னதானம் வழங்கும் இடமாகவும், பயணிகள், வழிப்போக்கர்கள் தங்கும் விருந்தினர் மனைகள் ஆகவும், பொதுவாக ஏழை, எளியவர்களின் இருப்பிடங்களாகவும் அவை விளங்கின. இம்மடங்கள் கல்லூரிகளாகவும் இருந்தன. காஞ்சியில் பல பௌத்த மடங்கள் இருந்தன. சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தாமலை ஆகியவற்றில் சமண மடங்கள் இருந்தன.

அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 சைவ மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கல்யர், முருக நாயனார், சம்பந்தர், அப்பர் முதலியோர் மடங்களை ஏற்படுத்தினர் என்பதையும் பெரியபுராணம் கூறுகிறது. நந்திவர்மன் காலத்துப் பட்டயத்தில், கச்சி மேற்றளியைச் சார்ந்த மடம் கூறப்பட்டுள்ளது.

வடமொழிக் கல்லூரிகளில் வேதங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. மடங்கள் கற்பித்த பாடங்களில், இலக்கணம், சித்தாந்தம், அறநூல்கள், புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், அந்தந்தச் சமயத்துக்குரிய இலக்கியங்கள் முதலியவை பயிற்றுவிக்கப்பட்டன. உண்டி, உறையுள் தந்து கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

5.1.5 பாடுபொருள் மாற்றம்

பல்லவம் என்பது தனிநாடு. தமிழ் வழங்காத நாடு என்று அகத்தியனார் பாடல் குறிப்பிடுகிறது. வடமொழி வழக்குப் பற்றி விளக்கக் கூடிய நிகண்டுகளும், புதுப்புது பாடல் வகைகளை விளக்க வந்த இலக்கண நூல்களும் தோன்றலாயின. ஆழ்வார், நாயன்மார்களின் பாடல்களில் பலவகைச் சொல் அணிகள் இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர் காலம் தொடங்கிச் சொல் அலங்காரச் செய்யுட்கள் வளரத் தொடங்கின. இவற்றுக்கு இலக்கணங்களும், விளக்கங்களும் எழுதும் அணி இலக்கண நூல்களும் வளர்ந்தன. பல இலக்கண நூல்கள் எழுந்தன. ‘பாட்டியல்' என்பது பாடலின் இயல்பை விளக்குவதற்காக எழுந்த இலக்கண நூல் வகை ஆகும்.

இலக்கணத் துறையில் பெரும் கிளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டன. பலதுறை அறிஞர்களான இலக்கணப் புலவர்களைத் தம் மாணவர்களாகக் கொண்ட ஒரு பேராசிரியர் ‘அகத்தியர்' என்ற பெயருடன் வாழ்ந்தார். இவர், ‘பாட்டியல்' முதலான பலதுறை இலக்கண நூல் செய்தார். இவர் மாணாக்கர் பலர். தொல்காப்பியர் முதலான பண்டைப் பெயர்களையே அவர்கள் பூண்டிருந்தனர். இத்தொல்காப்பியரே ஒரு பாட்டியல் செய்தார். இத்தொல்காப்பியரும் பிறரும் சேர்ந்த பன்னிருவர், பன்னிரு படலம் என்ற புறப்பொருள் இலக்கணநூல் பாடினர். அணி இயல் என்றொரு நூல் முதல் முதல் தோன்றியது. நிகண்டு நூல் தோன்றியது. இறையனார் களவியல் எனும் அகப்பொருள் நூலும் அதன் உரையும் தோன்றின. அவிநயம், இந்திரகாளியம் (சிறப்பான இசைக்கு இலக்கணம் கூறும் தமிழ்நூல்) எனும் இலக்கண நூல்கள் தோன்றின. இக்காலத்தில்தான் சொல் பற்றிப் பரிசீலிக்கும், நிகண்டு எனும் புதுப்பிரிவு தோன்றியது. பின்னாளில் அது பெரிதும் வளர்ந்தது.