பதினோராம்
நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலம் தமிழக வரலாற்றில்
குறிப்பிடத்தக்க ஒரு காலம் எனலாம். பல்லவரும் பாண்டியரும் மறைய, சோழப்
பேரரசு மறையும் நிலை அது. விசயாலய சோழன்
(கி.பி. 848 - 881) தொடங்கி மூன்றாம் இராசேந்திரன்
(கி.பி. 1246 - 1279) வரை ஆண்ட சோழப் பேரரசர்களின் காலம்.
அதைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியக்
காலம் என்பர். இக்காலக் கட்டத்தில் சோழ மன்னர்கள் பெரும்
கோயில்களைக் கட்டினர். சைவ இலக்கியத்தை வளர்த்தனர். இராசராசன் காலத்திற்கு
முன் தமிழ்நாட்டில் பல இடங்களில் தேவாரப் பதிகங்கள் பாடப் பெற்றன.
அவற்றைத் தொகுக்கும் பணி இக்காலத்தில் நடைபெற்றது. இம் மன்னனின் சைவ
சமய ஈடுபாடே தேவாரம் தொகுக்கப்படக்
காரணமாக அமைந்தது.
முதலாம்
இராசேந்திரன் (கி.பி. 1012 - 1044) கட்டிய கங்கை
கொண்ட சோழீச்சரம் மீது கருவூர்த்தேவர்
திருவிசைப்பா
பாடினார். இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1051 - 1063)
தஞ்சைப்
பெரிய கோயிலில் இராசராசேச்சர நாடகம் நடிக்க நிவந்தம் (நிதி
உதவி) தந்துள்ளான். வீரராசேந்திரன் (கி.பி. 1063 - 1070) கல்விப்
பணிகளுக்கு ஏற்பாடு செய்தான். இம்மன்னனின்
பெயரால்
வீரசோழியம் நூல் எழுந்தது.
மன்னர்கள் பல போர்களில்
ஈடுபட்டாலும் சமயம், கல்வி, கலை என்ற நிலைகளில் தாக்கத்தை
ஏற்படுத்தினர். சோழப் பேரரசர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.
ஆனால், பிற சமயக் காழ்ப்பு இல்லை.
சமயப்பொறையே
அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
சமயப்
பற்றின் காரணமாக இலக்கியங்கள் எழும் சூழல்
ஏற்பட்டது. சமய ஈடுபாடு, இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையாக
அமைந்தது. இராசராசன் (கி.பி. 985 - 1012) காலத்திற்கு முன்பே
கோயில்களில் தேவாரப் பதிகங்கள் பாடிவரப் பெற்றதைப் பல்லவர்
காலக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பௌத்த சமயத்திற்கு
இம்மன்னன் தந்த ஆதரவு தொடர்ந்து நீடித்தது. சமணம்
போற்றப்பட்ட நிலையில் சமணப் புலவர்களால் யாப்பிலக்கண
நூல்கள் தோன்றின. இலக்கியம் வளரும் சூழலில் உரைகள் எழுதும்
முயற்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இக்காலத்தில்
தோன்றிய குறிப்பிடத்தக்க புலவர்களாகக்
கல்லாடர், புத்தமித்திரனார், இளம்பூரணர் போன்றோரைக்
கூறலாம். தேவாரப் பதிகங்களைத் தொகுத்தவர் என்ற நிலையில்
நம்பியாண்டார் நம்பி சிறப்புப்
பெறுகிறார்.
மேற்குறிப்பிட்டவை
பற்றிய விரிவான செய்திகளை
இப்பாடத்தில் படிக்கலாம்.
|