1.4 வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியத்தைப் பொறுத்தவரை சில தனிப்பாடல்களே இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்டன. அவை தனியன் என அழைக்கப்பட்டன. ஆழ்வார்களையும் வைணவ ஆசாரியர்களையும் போற்றிப் புகழும் தனிப்பாடல் ‘தனியன்’ ஆகும். அப்பாடல்களைப் பாடிய சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

அ) திருக்கச்சி நம்பி

பூவிருந்தவல்லியில் பிறந்தவர். பெருமாளின் கட்டளைப்படி திருவரங்கம் சென்று பெரிய நம்பிகளை வணங்கினார். திருமழிசையாழ்வாருடைய திருச்சந்த விருத்தத் தனியன்கள் இரண்டும் இவர் இயற்றியவையாகும்.

ஆ) திருவரங்கப் பெருமாளரையர் (கி.பி 954 - 1059)

வைணவ ஆசாரியர் ஆளவந்தார் புதல்வர்களில் ஒருவர். அவருடைய சீடருமாவார். இவர், தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சிக்குப் பாடிய தனியனைக் கேளுங்கள்.

மண்டங்குடி என்பர் மாமாறையோர் மன்னியசீர்த்
தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்

(பாடல் 1828, பெருந்தொகை)

தொண்டரடிப் பொடியாழ்வார் பிறந்த ஊர் மண்டங்குடி ஆகும் என்பது இதன் பொருள். மண்டங்குடி சோழ நாட்டுப் பகுதியைச் சேர்ந்தது என்பர். பாண்டி நாட்டுத் திருவாடானையில் இதே பெயரில் ஓர் ஊர் உண்டு.

இ) திருமலைநம்பி (கி.பி. 974 - 1074)

ஆளவந்தாரின் சீடர். இவர் அமலனாதிபிரானுக்குத் தனியன் பாடியுள்ளார்.

ஈ) சொட்டை நம்பிகள்

ஆளவந்தாரின் மற்றொரு புதல்வர். இவர் திருவாய்மொழித் தனியன், திருக்கோட்டி நம்பிகள் தனியன் ஆகிய தனியன்களைப் பாடியுள்ளார்.