இலக்கிய
வரலாற்றில் 12ஆம் நூற்றாண்டு ஒரு பொற்காலம் என்பர். மன்னர்களின் ஆட்சிச்
சிறப்பு எல்லாத் துறைகளிலும் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக
அமைந்தது. சோழ நாட்டிலும், தமிழ் நாட்டிலும் பொதுவாக இக்காலப் பகுதியில்
போர் இல்லாமையால் தமிழ் மொழிக்கு இது ஒரு பொற்காலம். முதல்
குலோத்துங்கனோடு (கி.பி. 1070 - 1120) தொடங்கி, மூன்றாம்
குலோத்துங்கனோடு (கி.பி. 1178 - 1218) முடிவடையும் இக்காலப்
பகுதியில் நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். சீவக சிந்தாமணி தோன்றிய
பின்பு இரு நூற்றாண்டுகளாகியும் அதைப்போல விரிவான பெரிய காவியம் எழவில்லை
என்ற குறையைப் போக்க எழுந்த பெருங்காப்பியம்
பெரியபுராணம் ஆகும். எக்காலத்திலும், எந்நாட்டிலும் இல்லாத
ஓர் அரிய பக்தி நூல் இதுவாகும்.
வைணவத்தைப்
பொறுத்தவரை வைணவரின் தினசரி ஒழுக்கத்தையும் ஆலய வழிபாட்டு முறைகளையும்
இராமானுசர் ஒழுங்குபடுத்தினார்.
அது தவிர நாலாயிரத்திலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து எல்லா
வைணவர்களும் தவறாமல் ஓதவேண்டும் என்று நியமித்தார்.
சமண
இலக்கியத்தில் பிற நூற்றாண்டுகளைப் போல வளர்ச்சி இல்லை.
வீரசோழிய உரை தவிர பௌத்தத்தில் இலக்கியம் என்ற பேச்சுக்கே
இடமில்லை.
இந்நூற்றாண்டின்
முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்கள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்படுகின்றது.
இந் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1151 - 1200) தோன்றிய இலக்கியங்கள்
பற்றி ‘12 ஆம் நூற்றாண்டு - பிற்பகுதி’ என்ற தலைப்பில், அடுத்த பாடத்தில்
பார்க்கலாம்.
|