2.3 சமய இலக்கியங்களும் பிரபந்த இலக்கியங்களும்

இக்காலப் பகுதியில் எழுந்த வைணவ இலக்கியங்களாக திருஅரங்கத்தமுதனார், திருக்குருகைப்பிரான் பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போன்றோரின் படைப்புகளையும், பல தனியன்களையும் கூறலாம். இராமானுசர் சாதித்த காரியங்கள் மிகவும் அற்புதம் பொருந்தியவை. பிற்கால வைணவ வளர்ச்சிக்கு இக்காலப் பகுதியில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் தோற்றுவாயாக அமைந்தன. சமண இலக்கியங்கள் என்ற நிலையில் அருங்கலச் செப்பு, தீபங்குடிப் பத்து போன்றவற்றைக் கூறலாம். பௌத்த சமய இலக்கியம் என்ற நிலையில் வீரசோழிய உரை பற்றி முன்னரே (2 : 3 : 1) விளக்கப்பட்டுள்ளது. சில பிரபந்த இலக்கியங்களும் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றின.

2.3.1 வைணவம்

பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த வைணவ இலக்கியங்களில், இராமானுச நூற்றந்தாதி, ஆறாயிரப்படி, பிரமேயசாரம், ஞானசாரம் ஆகியவை சிறப்புடையவை.

  • இராமானுச நூற்றந்தாதி
  • திருஅரங்கத்தமுதனாரால் இயற்றப்பட்டது. திருமால் ஆலயங்களையும், ஆழ்வார்களையும் குறிப்பிட்டு, இராமானுசர் புகழாக 108 பாடல்களைக் கொண்ட இந்த அந்தாதியைப் பாடியுள்ளார் ஆசிரியர். வைணவர்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக இந்நூலைக் கருதலாம். இராமானுசர் புகழைப் பாடும் இந்நூலில் இவர் ஒரு பாடலில் தம் நேர் ஆசாரியாரான கூரத்தாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.

    திருவரங்கத்தமுதனார் திருப்பதிக்கோவை என்ற நூலையும் இயற்றியுள்ளார். ஆழ்வார் மங்களா சாசனம் செய்தருளிய (போற்றிப் பாடிய) தலங்களை முறையாகத் தொகுத்துக் கூறும் நூலே திருப்பதிக்கோவையாகும். வைணவத்தில் இது போலப் பலர் பாடியுள்ளனர்.

  • ஆறாயிரப்படி
  • இது திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரால் இயற்றப்பட்டது. இது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு எழுதப்பட்ட விளக்கம். வைணவ மரபில் இந்த நூல் முதன்முதலாக எழுதப்பட்ட உரைநடை நூலாகும். இளமையிலேயே திவ்யப்பிரபந்தத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். இவருக்கு முன் எந்தச் சமயத்திலும் (வைணவம், சமணம், சைவம்) மணிப்பிரவாள நடையில் இவ்வாறு நூலோ உரையோ எழுந்ததாகத் தெரியவில்லை. அது இந்நூலின் சிறப்பாகும். (மணியும் பவளமும் சேர்த்துக் கோத்தது போல் தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் நடையே மணிப்பிரவாள நடை) நல்ல தமிழிலும் இவர் எழுத வல்லவர்.

    இவர் எழுதிய மற்றொரு நூல் பிள்ளான் ரகசியம் என்பதாகும்.

  • பிரமேயசாரம்
  • இக்காலப் பகுதியில் தோன்றியது. இராமானுசரின் சீடரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரால் இது இயற்றப்பட்டது. இந்நூல் 10 வெண்பாக்களும் ஒரு தனியனும் கொண்டது. இறையருளைப் பெறுவதற்கு வழி கருமமும் ஞானமும் அல்ல, பாகவத சேவையே என்பதை உணர்த்துகிறது. இந்நூலின் பொருள் எளிதில் உணரக் கூடிய தன்று.

  • ஞானசாரம்
  • ஞானசாரம் என்பது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுதிய மற்றொரு நூலாகும். 40 வெண்பாக்களும் ஒரு தனியனும் கொண்டது. இது, திருமால் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் நிச்சயம் வீடருளுவான் என்று கூறுகின்றது. பிரமேயசாரம், ஞானசாரம் ஆகிய இரு நூல்களுமே அழகான தமிழில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

    மேலும் இக்காலக் கட்டத்தில் பல தனியன்கள் பாடப் பெற்றுள்ளன. ஆழ்வான், முதலியாண்டான் (1019 - 1124), சீராமப்பிள்ளை (1123), பிள்ளைத் திருநறையூர் அரையர், எம்பார் (1026 - 1131), சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர் போன்ற பலர் தனியன்களை எழுதியுள்ளனர்.

    2.3.2 சமணம்

    சமணத்தைச் சேர்ந்த ஆசிரியர் பலர் பண்டை நாளிலிருந்து தமிழில் இலக்கிய இலக்கணங்கள் செய்து தமிழ் மொழிக்குத் தொண்டு செய்துள்ளனர். நூற்றாண்டு தோறும் அவர்கள் செய்த நூல்கள் பல இருந்தாலும் இக்காலப்பகுதியில் (12ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி) அருங்கலச் செப்பு, தீபங்குடிப் பத்து போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

  • அருங்கலச் செப்பு
  • இச்சொல்லுக்கு ‘அரிய அணிகலன்களை வைத்துள்ள பேழை’ எனப் பொருள் கொள்ளலாம். சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் இத்தொடரைக் காணலாம்.

    ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
    வாய்திறந் தன்ன மதிலக வரைப்பின்

    (அடிகள் 68 - 69)

    ‘பெறுதற்கரிய மணிக்கலம் பெய்த மணிப்பெட்டகம்’ என்று அடியார்க்கு நல்லார் இதற்கு உரை எழுதுகிறார். இந்நூல் வடமொழியின் மொழி பெயர்ப்பாகும். இது குறட்பாக்களால் ஆன நூல். இது 108 குறட்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது.

    நூற்சிறப்பையும், பயனையும் கூறுமிடத்து ஆசிரியர் மூன்று பாடல்களில் நூலின் பெயரைக் குறிப்பிடுகின்றார். இந்நூலாசிரியர் குறள் யாப்பை மேற்கொண்டதோடு, ஒரு குறட்பாடலையும் அப்படியே எடுத்துத் தம் நூலுள் வைத்துள்ளார்.

    காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்

    (குறள் : 360)

    முக்குற்றங்களையும் அவர் குறிப்பிட எண்ணியபோது, இக்குறட்பாவை விட்டு வேறு சொல்ல முடியவில்லை. இதன் மூலம் இவர் திருக்குறளில் கொண்ட ஈடுபாடு நன்கு விளங்கும். இவருக்கு மூல நூல் வடமொழி நூல் எனக் கருதப்பட்டாலும் கூறும் பொதுக் கருத்துகள் யாவும் தமிழில் வழங்கிய கருத்துகள் ஆகும்.

    சமண சமயத்தில் இல்லறம், துறவறம் என இரண்டு அறங்கள் கூறப்படும். இல்லறத்தார் சாவகர் எனப்படுவர். இந்நூல் சாவகர்கள் மேற்கொண்டு ஒழுகத்தக்க அறங்களைப் பொதிந்து வைத்த பேழை என்பதால் இப்பெயர் பெற்றது.

    நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மூன்றும் அறம் என்கிறார். நீலகேசிக்குப் பிறகு தோன்றிய தனிச் சமண நூல் இதுவே.

    இந்நூலாசிரியரின் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இருப்பினும் இவர் தமிழிலும், வடமொழியிலும் பயிற்சியுடையவர். பிராகிருத மொழியிலும் பயிற்சியுடையவர். வடசொற்களை இவர் தமிழ்ப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.

  • தீபங்குடிப்பத்து
  • இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு சமண நூல் தீபங்குடிப்பத்து ஆகும். 10 பாடல்கள் கொண்ட நூலில் ஏழு பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் தீபங்குடிக் கோயிலில் எழுந்தருளியுள்ள அருகதேவனைப் புகழ்வன என்பர். இன்றும் சமணக் கோயில் உள்ள இடங்களாக கும்பகோணம், கருந்தட்டான்குடி (தஞ்சாவூர்), மன்னார்குடி, தீபங்குடி போன்ற ஊர்களைக் கூறலாம். நூற்பாடல்களின் முதல் இரு வரிகள் தீபங்குடியில் வாழ்வோரது சீலத்தையும், பின்னிரு வரிகள் பெண்களின் நிலைமையையும் கூறுகின்றன.

    இவ்வூரிலுள்ள மக்கள் கல்விப் பொருளே செல்வப் பொருளாய்க் கருதிச் செய்யும் செயல்கள் பல. அவர்கள் காலையும், மாலையும் நற்குணனை நினைத்துத் தவமே புரிவார்; வினை செய்யார்; தேன், நறவு (மது), ஊன், பொய், கொலை, களவு தவிர்ப்பார்; தீமை செய்யார்; அருகன் பாதத் தாமரையே பணிவார்.

    பெண் பிறப்பை இழித்துப் பேசும் சமணர் இந்நூலில் பெண்களைப் புகழ்ந்தும் வருணித்தும் உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பலவாறாகப் பெண்களைப் பற்றிய வருணனை இதில் காணப்படுகிறது.

    2.3.3 பிரபந்தங்கள்

    பிரபந்த இலக்கியங்கள் என்ற நிலையில் இக்காலப் பகுதியில் எழுந்தவற்றில் தில்லையுலா, திருப்புகலூர் அந்தாதி, அம்பிகாபதி கோவை, வச்சத் தொள்ளாயிரம் போன்றவற்றைக் கூறலாம்.

  • தில்லையுலா
  • இது 96 வகை பிரபந்தங்களில் ஒன்றான உலா வகையைச் சார்ந்தது. 8 ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலா காலத்தால் மிகவும் பழமையானது. தில்லையுலா இன்று முழுமையும் கிடைக்கவில்லை. உலாப் பிரபந்தங்களில் மிகவும் சிறப்பான இடம் பெறுகிறது. இத்தில்லையுலா கீழ்க்கண்ட வகைகளில் சிறப்புடையது :

    1)

    ஆசிரியரின் இணையற்ற சிவபக்தியைக் காட்டுகிறது.

    2) சில சரித்திர நிகழ்ச்சிகளுக்குச் சான்று பகர்கின்றது.
    3)
    சிறப்பான பண்டைய ஒழுகலாறுகள் பலவற்றை, வேறெங்கும் காண்பதற்கு இல்லாதவற்றை, எடுத்துக் கூறுகின்றது.

    ஆசிரியர் பக்தி முதிர்ச்சிக்கான இடங்களைப் பல இடங்களில் சுட்டியுள்ளார். சமயாசாரியார் நால்வரையும் மிக்க அழகாகப் போற்றுகின்றார். இவருக்கு, சிறுத்தொண்டர் சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளதை இந்நூல் மூலம் அறிய முடிகின்றது. திருநீற்றினிடத்தில் அன்புமிக்கவர் என்பதைப் பல இடங்களில் காண முடிகிறது. சோழ மன்னன் பெயர்களில் பல இருக்க ‘திருநீற்றுச் சோழன்’ என்ற பெயரையே இவர் கையாள்கிறார்.

  • திருப்புகலூர் அந்தாதி
  • திருப்புகலூர் அந்தாதி, மிகவும் பழமையான அந்தாதிப் பிரபந்தம் ஆகும். இதனை இயற்றியவர் நெற்குன்றவாணர். இந்நூல் பக்திச் சுவை கொண்டது. தில்லை இதனுள் பலமுறை சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்ட பிற தலங்கள் திருப்பழனம், திருஐயாறு, திருநள்ளாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர் போன்றவையாகும்.

    நெற்குன்றவாணர் தம்மிடம் பொருள் விரும்பி வரும் புலவர் வாய் திறந்து கேட்க நாணுவர் என எண்ணித் தம் வீட்டு முற்றத்தில் மணலைப் பரப்பி, வருவோர் தம் அவாவினை எழுதிக் காட்டினால் போதும் என்று கூட ஓர் ஏற்பாடு செய்திருந்தார். இதை மறைந்திருந்து பார்த்துத் தக்கபடி வழங்குவது இவர் வழக்கம் என்பர்.

  • அம்பிகாபதி கோவை
  • அம்பிகாபதி என்ற புலவரால் பாடப்பெற்ற கோவையாகும். இது ஒரு பழமையான கோவைப் பிரபந்தம் ஆகும். இதற்கு முன் எழுந்த கோவைகள் நெல்வேலி வென்ற சீர் நெடுமாறனைச் சிறப்பித்து எழுந்த பாண்டிக்கோவையும், தில்லை நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவையும் ஆகும்.

    இக்கோவையின் அவையடக்கச் செய்யுள் முன் வரியில் வரும் அம்பிகாபதி என்ற தொடர் சிவபெருமானைக் குறித்தது. இக்கோவையாசிரியர் பாட்டுடைத் தலைவனாக யாரையும் கொள்ளவில்லை. இதன் காரணமாக ஒரு தலைவனையோ, அவனுக்குரிய நாடு, நகர், மலை, ஆறு போன்ற அடையாளம் ஒன்றையோ ஒவ்வொரு பாட்டிலும் தவறாமல் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு இல்லாது போயிற்று. அதிகமான பாடல்களையுடைய கோவைப் பிரபந்தங்களுள் இதுவும் ஒன்று. கோவையில் 400 பாடல்கள் அமைய வேண்டும் என்பது விதிபோல கொள்ளப்பட்டாலும் இக்கோவையுள் 563 செய்யுட்கள் உள்ளன. இக்கோவையின் மற்றொரு சிறப்பு இந்நூலாசிரியர், இந்நூலுள், உடன் கால நிகழ்ச்சிகளை அறியத்தக்க எவ்விதக் குறிப்பையும் கொடுக்கவில்லை. புராணக் கதைகள், பழக்க வழக்கங்கள், பழமொழிகள் முதலியன இக்கோவையுள் அதிகமாகக் காணப்படுகின்றன. திருக்குறள், நாலடியார், ஆசாரக்கோவைச் செய்யுட்கள் பல அப்படியே எடுத்து அமைக்கப்பட்டுள்ளன.

    கலித்தொகையின் கருத்துகள் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்நூலின் இறுதியில் இல்லறம், துறவறம் என்பவற்றை ஆசிரியர் இரண்டு செய்யுட்களால் கூறுவது அறிந்து மகிழத்தக்கதாகும். இந்நூலில் தமிழ்ப்பண், தமிழ் நூல்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

  • வச்சத்தொள்ளாயிரம்
  • வச்சவராயன் மீது பாடப்பட்டது. இவன் குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவருள் ஒருவனாயிருந்து வத்ஸராசன் என்று பட்டம் பெற்றவன். இந்நூல் தற்போது இல்லை. இது 900 வெண்பாக்களைக் கொண்டது. இந்நூலாசிரியர் பெயரோ, வரலாறோ தெரியவில்லை. வீரசோழிய உரைகாரரான
    பெருந்தேவனார் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

    இக்காலத்தில் தோன்றியவற்றில் சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏர் எழுபது போன்றவை பற்றி 12ஆம் நூற்றாண்டு - பிற்பகுதி என்னும் பாடத்தில் படிக்கலாம்.