3.5 பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட பட்டியல்களில் அடங்காதவை பற்றி இத்தலைப்பில் பார்க்கலாம். இதுவரை கூறப்பட்டவை தவிர, நூல் செய்து பெயர் விளங்காதவர்களும், பெயர் விளங்கி நூல் செய்ததாகத் தெரியாதவர்களும் சிலர் உள்ளனர்.

  • கந்தியார்
  • கந்தியார் (கி.பி.1175) என்ற பெயர் ஒளவையார் என்ற பெயரை ஒத்தது. கந்தியார் என்ற சொல் சமண சமயத்தில் மணமாகாது துறவு பூண்ட ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்ட பெயராகும். ‘கந்தி’ என்ற சொல் சமணப் பெண்டிருள் தவக்கோலம் உடையோரைக் குறிப்பது. ‘தவப்பள்ளியிலிருக்கும் தவக்கோலமுடைய முதியவள் கவுந்தி’ என்று சிலப்பதிகார உரை கூறும். கைம்மைக் கோலமுடையவள் கவுந்தி; கந்தி எனவும் கூறுவதுண்டு,

    கந்தியார் அருக தெய்வ பக்தியோடு சமய நூல்களை ஓதுவதில் பொழுது போக்கியவர்கள். இத்தகைய ஒரு கந்தியார் உதயணகுமார காவியம் என்ற ஒரு காப்பியத்தை இயற்றியுள்ளார்.

    உதயணகுமார காவியத்துக்கு முன்பு இருந்த கந்தியருள் பெயரளவால் சிலர் இக்காலப்பகுதியில் வாழ்ந்தார்கள். ஒருவர் சுமார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து சீவக சிந்தாமணியிலும், பரிபாடலிலும் இடையே இடைச் செருகலாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார். நச்சினாக்கினியர் உரைமூலம் சீவகசிந்தாமணியின் கந்தியார் மிகவும் அதிகமான பாடல்களைச் செருகியுள்ளார் என்பதை அறியலாம். கந்தியார், பரிபாடல் எழுபது பாட்டுக்களுள் இன்னாருக்கு இத்தனை பாட்டு உரியது என்று வரையறுக்கும் பாடலைப் பாடியதாகக் கூறுவர்.

  • ஓவாத கூத்தர்
  • ஓவாத கூத்தர் (கி.பி,1185) என்ற பெயருடையவரின் பாடலோ நூலோ கிடைக்கவில்லை. ஆனால் இவர் இருந்தார் என்பதை ஒரு கல்வெட்டின் மூலம் அறியலாம். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திலிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையருகேயுள்ள கூத்தனூர் சரசுவதி கோயிலில் கிடைத்த ஒரு சாசனத்தில் கீழ்க்கண்ட வரிகள் உள்ளன.

    ஸ்ரீ சரசுவதி தேவியை எழுந்தருளுவித்தார்
    இவ்வூர் நன்செய் 20ம் காணி உடைய
    மலரி உடையார். இந்தக் கவிச்சக்கரவர்த்திகள்
    பேரர் கவிப் பெருமாளான ஓவாத கூத்தர்

    இதன் மூலம் இவ்வூரில் சரசுவதி தேவிக்குக் கோயில் கட்டியவர் மலரியுடையாரெனும் கவிச்சக்கரவர்த்தியின் பேரரான ஓவாத கூத்தர் என்ற கவிஞர் என அறியலாம். ஒட்டக்கூத்தர் மலரியில் பிறந்தவர் என்பது தண்டியலங்கார மேற்கோள் மூலம் அறியலாம். (மலரி என்பது தற்போது திருவெறும்பியூர் என அழைக்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ளது) மலரி ஒரு தேவாரத்தலம். இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டவர் ஒட்டக்கூத்தரின் பேரரான ஓவாத கூத்தர் (ஓவாத = இடைவிடாத) நடராசப்பெருமான் இரவுபகல் இடைவிடாது ஆடுபவராதலால் ஓவாத கூத்தர் எனப்படுவார், அவர் பெயரை இவர் கொண்டுள்ளார் எனலாம். கவிப் பெருமாள் என்று சிறப்புப் பெயர் கூறுதலால் இவரும் கூத்தரைப்போலப் பெரும் புலவராயிருந்தார் எனக் கொள்ளலாம். முதுகுளத்தூர் - திருமாலுகந்தான் கோட்டைச் சிவன் கோயில், கோயிற்பட்டி ஆதனூர்ச் சிவன் கோயில் முதலியவற்றில் ஓவாத கூத்தருடைய அறக்கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஓவாத கூத்தர் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த புலவராகின்றார். இலக்கியப் பங்களிப்பு என்ற நிலையில் இவரைப் பற்றி வேறு விவரம் எதும் கிடைக்கவில்லை.

  • குணாதித்தன்சேய்
  • குணாதித்தன்சேய் என்ற ஒரு புலவன் இருந்ததாகவும், அவன் காகுத்தன் கதை என ஒரு நூல் பாடியதாகவும் கூறுவர். இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அது, அல்லியரசாணி மாலை, தேசிங்குராஜன் கதை போன்ற அமைப்புடைய கதையாக இருக்க வாய்ப்புண்டு. காகுத்தன் - ககுத்தன் வமிசத்தில் பிறந்தவனாகிய இராமன், இராமனது கதை என இதை எண்ணுவதில் தவறில்லை.