கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைப்
பொறுத்தவரை
இலக்கியங்களில் பேரிலக்கியம் என்று எதுவும் தோன்றவில்லை.
சோழராட்சி முடிவுக்கு வந்த காலம் இதுவேயாகும். சோழ
மன்னர்களில் இறுதியாக வந்த மூன்றாம் இராசேந்திரன் மக்களின்றி
இறந்துபோனார். குறுநில மன்னரும், பிறரும் தலையெடுத்த
நிலையை அடக்கும் வலிமை வாய்ந்த அரசு இல்லை. பாண்டியர்
வலிமை ஓங்கிச் சோழ நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர்.
இச்சூழலில் மூன்றாம் இராசேந்திரனோடு கி.பி. 1279இல்
சோழராட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் பாண்டியராட்சி தமிழகத்தில் ஆரம்பமானது.
ஆட்சி மாற்றம் மிகுந்த கொந்தளிப்பான சூழலை
உண்டாக்கிய நிலையில் இலக்கியங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே
தோன்றின.
குலோத்துங்க
சோழன் மீது ஒரு கோவையும், அவன் தம்பி சங்கரசோழன் மீது ஓர் உலாவும்
எழுந்தன. குறுநிலத் தலைவர்களுடைய ஆதரவால் தோன்றிய இலக்கியங்களில் புகழேந்தியின்
நளவெண்பா, தஞ்சைவாணன் மீது பாடப்பெற்ற
கோவை போன்றவற்றைக் கூறலாம். அரசியல் தடுமாற்றம் என்ற சூழ்நிலையில்
சமயத் துறையில் எழுச்சி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய
நூற்றாண்டுகளில் சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களும் அவற்றால் ஏற்பட்ட
சமய உணர்வுமாகும். சைவத்தைப் பொறுத்தவரை சித்தாந்த நூல்கள் எழுதப்பெற்றன.
வைணவத்தில் சித்தாந்தங்களும், நாலாயிரத் திவ்யப் பிரந்த வியாக்கியானங்களும்
அதிகம் தோன்ற ஆரம்பித்தன. சிறப்பிலக்கியங்கள் தோன்றுவதற்குரிய சூழ்நிலை
இல்லாதுபோகவே, சிற்சில சிற்றிலக்கியங்கள் தோன்றின. பண்டைய இலக்கியங்களுக்கு
உரை எழுதும் முயற்சியும் ஆரம்பமானது. இலக்கணங்களுக்கு உரைகள் தோன்றின.
பொதுவான நிலையில் இந்நூற்றாண்டில் சமய நூல்களும், உரை நூல்களும் தோன்றி
வளர்ந்ததைக் கூறலாம். சமண இலக்கியத்தில் வழக்கம்போலச் சீரான வளர்ச்சி
நிலை இந்நூற்றாண்டில் காணப்படுகிறது.
|