4.1 இலக்கிய நூல்கள், உரைகள்

இக்காலத்தில் தோன்றிய சைவ இலக்கியங்கள் மற்றும் பிற இலக்கியங்கள் பற்றியும், இலக்கிய உரைகள் பற்றியும் இங்குக் காணலாம்.

4.1.1 சைவ இலக்கியங்களும், பிற இலக்கியங்களும்

 • சிவஞானபோதம்
 • சைவ இலக்கியம் என்ற வகையில் மெய்கண்டார் (கி.பி. 1232) முதல் இடத்தைப் பெறுகிறார். இன்றைய சைவ சித்தாந்த மரபைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். இவர் இயற்றிய ஒரே நூல் சிவஞான போதம் ஆகும். இவர் நடுநாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் திருப்பெண்ணாடத்தில் பிறந்தார். கயிலாயத்தில் சிவஞான உபதேசம் பெற்று, பரஞ்சோதி முனிவர் வானவீதியில் சென்றபோது, மெய்கண்டார், குழந்தையாக வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அக்குழந்தையிடம் வந்து, தான் பெற்ற சிவஞானத்தை அதற்கு உபதேசம் செய்தார். சிவஞானம் பெற்ற மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் சித்தாந்த சாத்திர நூல். மெய்கண்டாரிடம் 49 மாணாக்கர் இருந்ததாகக் கூறுவர். தமக்குப்பின் சிவஞானத்தைப் பரப்பி, சைவ ஆசாரிய பரம்பரையை வளர்த்துவர அருணந்தி சிவாசாரியாரைப் பணித்துவிட்டு மெய்கண்டார் இறைவன் திருவடியடைந்தார்.

  சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்குப் போதிக்கும் (உணர்த்தும்) நூல் சிவஞானபோதம் எனப்படும். சிவஞானபோதம் நூற்பாவால் ஆகிய 12 சூத்திரங்களும் (40 வரிகள்), பொல்லாப்பிள்ளையார் வணக்கம், அவையடக்கம் என்ற இரு பாடல்களும் கொண்டது. இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்கள் என இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது.

  1. பொது அதிகாரம் 1. பிரமாண இயல் - 3 சூத்திரங்கள்
  2. இலக்கண இயல் - 3 சூத்திரங்கள்
  2. உண்மை அதிகாரம் 3. சாதன இயல் - 3 சூத்திரங்கள்
  4. பயனியல் - 3 சூத்திரங்கள்

  சிவஞான போதம் நூலுக்குப் பல உரைகள் தோன்றியுள்ளன. சிவஞான போதத்தைத் தொடர்ந்து இக்காலப் பகுதியில் தோன்றிய பிற சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகும். இவை இரண்டுமே அருணந்தி சிவாசாரியாரால் எழுதப்பட்டதாகும். இவர் சிவாசாரியார் மரபில் வந்தவர். இவர் மெய்கண்டாரின் மாணவர் ஆவார்.

 • சிவஞான சித்தியார்
 • சிவஞான சித்தியார் (கி.பி 1253) என்னும் நூலானது சுபக்கம் (328 திருவிருத்தங்கள்), பரபக்கம் (301 திருவிருத்தங்கள்) என்ற இரு பகுதிகளை உடையது. சிவஞானபோதம் போலவே இதுவும் 12 சூத்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. சிவஞானபோதத்திற்குச் செய்யுள் வடிவில் அமைந்துள்ள ஓர் அரிய உரைநூலாகச் சிவஞானசித்தியாரைக் கூறலாம்.

  சுபக்கம் - அரிய பெரிய சைவ சித்தாந்த நுண்பொருளை விளக்குகிறது.
  பரபக்கம் - பிற சமயக் கருத்துகளை எடுத்துக் கூறி, அவற்றைக் காரண காரியத்தோடு மறுக்கிறது.

  சைவ சித்தாந்தக் கொள்கைகளில் 95 விழுக்காடு சிவஞான சித்தியாரில் உள்ளன. எனவேதான்,

  சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
  சித்தியாருக்கு மிஞ்சிய சாத்திரமும் இல்லை

  என்ற ஒரு பழமொழி எழுந்தது எனலாம். இந்நூலுக்கு ஞானப்பிரகாசர், வெள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள், நிரம்ப அழகிய தேசிகர், மறைஞான தேசிகர், சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் போன்றோர் உரை எழுதியுள்ளனர்.

  சைவ சித்தாந்த ஞானசாத்திரங்களில் இந்நூல் அளவால் மிகப் பெரியது. அன்று முதல் இன்றுவரையுள்ள சைவ சமயக் கருத்துகளின் விரிவுகளுக்கெல்லாம் இது இடம் கொடுக்கிறது. சமய ஆராய்ச்சியில் புகுவோருக்கு இது நன்கு விளங்கும்.

 • இருபா இருபஃது
 • அருணந்தி சிவாசாரியாரின் மற்றொரு நூலாகும். இது 20 செய்யுளால் ஆனது. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டு வகை யாப்புகளில் பத்துப் பத்துச் செய்யுள்களைக் கொண்டது. மெய்கண்டாரைச் சிவபெருமானாகவே கருதிச் செய்யப்பட்ட இந்நூலில், பல அரிய சைவ சித்தாந்த நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. சிவஞானசித்தியாரில் கூறப்படாத சில சிந்தனைகளை இந்நூலில் வினாக்களாக எழுப்பி, அடுத்தடுத்து வரும் செய்யுள்களில் விடைகளை உள்ளடக்கி, இதனை அமைத்திருக்கும் முறை படித்து இன்புறத்தக்கதாகும். செய்யுள் நடை மிகச் சிறப்புடையது.

  இந்நூலுக்குச் சீகாழித் தத்துவநாதர், மதுரைச் சிவப்பிரகாசர், நமச்சிவாயத் தம்பிரான் போன்றோர் உரை எழுதியுள்ளனர். இவற்றுள் தத்துவநாதர் உரையே சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திலும் காலத்தால் மிகவும் முற்பட்ட உரையாகும்.

 • உண்மை விளக்கம்
 • உண்மை விளக்கம் என்ற நூல் மனவாசகங் கடந்தாரால் இயற்றப்பட்டது. இவர் மெய்கண்டாரின் மாணவர். இந்த நூல் 53 வெண்பாக்களால் ஆனது. இந்நூலில் 36 தத்துவம், ஆணவ மலம், இரு வினை, உயிர், இறைவனின் திருநடனம், ஐந்தெழுத்து அருள் நிலை, பரமுத்தி நிலை, அணைந்தோர் தன்மை என்பவை சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் நிலையில் அமைந்துள்ளன. இந்நூல் வினா விடை முறையில் அமைந்துள்ளது. சைவ சித்தாந்தத்தைச் சாத்திரம் வாயிலாகப் பயில விரும்புபவர்கள், இந்நூலை முதலில் படித்துவிட்டுப் பின்னர் மற்றவற்றைப் படித்தால் பொருள்கள் விளங்கிக் கொள்ள எளிதாக இருக்கும்.

 • நளவெண்பா
 • நளவெண்பா புகழேந்தியால் இயற்றப்பட்டது. புகழேந்தி தொண்டை மண்டலத்தில் களத்தூரில் பிறந்தவர். இக்காலப்பிரிவில் (13ஆம் நூற்றாண்டில்) இலக்கியம் என்று பெயர் சொல்லக்கூடிய அளவில் காவிய நூலாகக் கிடைப்பது இந்நூலாகும். இதற்கு முன்னர் எழுந்தது பெருந்தேவனார் பாடிய பாரத வெண்பாவாகும். இருப்பினும் நளவெண்பாவே நன்கு புகழ் பெற்றதாகும். இந்நூல் 424 வெண்பாக்களைக் கொண்டது. ‘வெண்பாவில் புகழேந்தி’ என்னும் சிறப்பு இந்நூலாசிரியருக்கு உண்டு. இந்நூல் சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் என்ற மூன்று காண்டங்களைக் கொண்டது.

  நளனுடைய சரித்திரம் தமிழிலும் வடமொழியிலும் நன்கு அறியப்பட்ட ஒன்று. மகாபாரதத்திலுள்ள கிளைக்கதைகளில் ஒன்று நளோபாக்கியானம் என்பது. இது நளனுடைய வரலாற்றைக் கூறுவது. இதைத் தழுவியே புகழேந்தி, நளவெண்பாவைப் பாடினார். இந்நூல் தோன்றிய காலம் முதல், கல்வி பயிலுகின்ற இளம்பிள்ளைகள் தவறாது படிக்கின்ற சிறிய காப்பியமாக அமைந்துள்ளது. நூலில் ஆங்காங்குப் பண்டைய நூல்களின் கருத்துகளும் தொடர்களும் பயில்வதைக் காணலாம். இவ்வாறு பயிலும் நூல்கள் திருக்குறள், திருவாசகம், திருநெடுந்தாண்டகம், திருவாய்மொழி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையாகும். இந்நூல் மிக உயர்ந்த நீதிகளை எளிய சொற்களால் புகட்டும் ஒரு சிறந்த காவியமாகும். இந்நூல் எழுந்த காரணமே சூதாட்டத்தின் தீமையை எடுத்துரைப்பதாகும்.

  கற்பின் இலக்கணம், மக்கட்பேற்றின் சிறப்பு போன்ற கருத்துடைய பாடல்களை இதில் காணமுடிகிறது. வாய்மையின் சிறப்பு, தூதர் இலக்கணம், ஊழ்வினையின் வலிமை போன்ற பல பொருள்கள் இதில் கூறப்படுகின்றன. செஞ்சிக் கலம்பகம், அல்லி அரசாணி மாலை போன்ற நூல்களும் புகழேந்திப் புலவர் இயற்றியனவாகக் கருதப்படுகின்றன.

  இவ்வாறாக, இலக்கிய நூல்கள் என்ற நிலையில் சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருஃது, உண்மை விளக்கம் போன்ற சாத்திர நூல்களும் நளவெண்பாவும் அடங்கும்.

  4.1.2 இலக்கிய உரைகள்

  தமிழ் இலக்கிய வரலாற்றில் 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் விரிவுரைகள் எழுந்துள்ளன. பல உரையாசிரியர்கள் தருக்க ரீதியாகப் பொருளை விளக்கியுள்ளனர். அதேசமயம் நூலாசிரியரின் இதயத்தைத் திறந்து காட்டுவதுபோல உரையெழுதி யிருக்கின்றார்கள். பல பண்டைய நூல்களையும் உதாரணமாக எடுத்துக்காட்டி நினைவூட்டியுள்ளார்கள். பல தனிப்பாடல்களைக் கூட எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் கற்று அறியக்கூடியதை விட, ஒரு பெருங் கல்வியாளரிடம் பாடம் பயின்ற அனுபவத்தை உரையாசிரியர்கள் நமக்கு ஊட்டுகின்றனர். இக்காலக்கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் காலிங்கர் (காளிங்கர்) மற்றும் பரிமேலழகர் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவருமே திருக்குறளுக்கு உரை செய்தவர்கள்.

 • காலிங்கர் உரை
 • திருக்குறளுக்கு உரை செய்த ஆசிரியர் பதின்மருள் பரிமேலழகர் உரை சிறப்பானது. பரிமேலழகர் உரையும், மணக்குடவர் உரையும் நெடுங்காலமாக அச்சிடப்பெற்று வந்துள்ளன. ஏனைய உரைகளுள் பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர் போன்றோரின் உரைகள் அண்மைக் காலத்திலேயே அச்சிடப் பெற்றன. காலிங்கர் உரை ஓரளவு நூல் முழுமைக்கும் கிடைத்துள்ளது. இடையிடையே இரண்டொரு குறள்களுக்கு இவருடைய உரை கிடைக்காத நிலையில், அச்சிட்டவர்கள் அக்குறள்களுக்குப் பரிதியார் உரையையே தந்துள்ளனர்.

  காலிங்கர் என்ற பெயரில் பலர் சோழ அரசில் பெரும் பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேளாள குலத்தினராயும், படைத்தலைவராயும் இருந்தனர். இவரும் அந்தப் பரம்பரையில் வந்திருக்கலாம். காலத்தால் இவர் பரிமேலழகருக்கு முற்பட்டவர். காலிங்கர் செய்ததாக இத்திருக்குறள் உரை ஒன்றுதான் கிடைத்துள்ளது. இவர் உரை சிறப்பான உரையாகும்.

  இவரது உரையில் வடமொழிச் சொற்கள் சில உள்ளன. சிக்கலான பொருள் அமைப்போ வாக்கிய அமைப்போ இதில் இல்லை. விளக்கமாகப் பல இடங்களில் உரை எழுதியுள்ளார் (எடுத்துக்காட்டு : குறள் 774, 940, 714, 737, 833, 887, 910, 947 மற்றும் பிற).

  பாரதத்துள் நூற்றுவரையும் இராமாயணத்தில் இராவணனையும் எண்ணிக்கொள்க என்று கீழ்க்காணும் குறளில் உதாரணம் கூறுகிறார்.

  இகழ்ச்சியின் கெட்டாரை எண்ணுக தாம்தம்
  மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

  (539)

  (இவ்வுலகத்து வேந்தருள் முற்காலத்துத் தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும் பொழுது, இகழ்ந்து கெட்டாரை எண்ணிக் கொள்க - என்பது இக்குறளுக்குக் காலிங்கர் கூறும் உரை)

  ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்தாவது குறள் உரையின் முடிவில் அடுத்த அதிகாரத்துக்குத் தோற்றுவாயை அழகாக அமைத்துக் காட்டுகிறார், காலிங்கர்.

 • பரிமேலழகர் உரை
 • பரிமேலழகர் உரை இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றோர் உரையாகும். தலைசிறந்த உரையாசிரியர்களுள் இவர் மிகவும் சிறப்புடையவர். அந்தண மரபைச் சேர்ந்தவர். (திருக்குறளுக்கு உரை செய்த) பதின்மர் உரைகளுள், அச்சில் வந்துள்ள ஐந்து உரைகளில் எல்லா வகையிலும் இது சிறப்பானது. பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படைக்கும் இவர் உரை எழுதியுள்ளார்.

 • பரிமேலழகரின் திருக்குறள் உரை
 • இது பொழிப்புரையாகவே உள்ளது. பிற்காலத்தில் உரையை அச்சிட்டோர் கற்போர் நலன் கருதிப் பதவுரையாகப் பிரித்து அச்சிட்டனர். இந்த உரையாசிரியர் முந்தையோரின் செய்யுட்களையும், தொடர்களையும் உரைநடையாகவே எழுதிச் செல்கிறார். பல நூல்களைப் பரிமேலழகர் மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார். இடம் விளங்காத மேற்கோட் பாடல்களும் சில உள்ளன. உரையாசிரியரின் வடமொழிப் புலமையை இவ்வுரையில் காணமுடிகிறது.

  பரிமேலழகர் சமய நூலறிவு மிக்கவர் என்பதை அவர் சொல்லும் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. சாங்கிய நூல் (27), ஆருகதர் (286), வைசேடிகர் (307, 359) ஆகமங்கள் (300) ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் (2) ஆகிய குறிப்புகளிலிருந்து இதனை அறியலாம். மெய்யுணர்தல் (அதிகாரம் 36) என்பதற்குத் தத்துவ ஞானம் என்று பொருள் கூறுகிறார். 'மெய்யுணர்தல்' என்ற இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களிலும் தத்துவப் பொருள்களையே விரித்துரைக்கிறார். பரிமேலழகர் உரை இலக்கண உரை என்பர். காரணம் அவர் ஆங்காங்குப் பல இலக்கணக் குறிப்புகளைத் தந்திருப்பதும், பிறவுரையாசிரியர்கள் இலக்கணப் பிழையால் செய்த தவறான உரைகளை எடுத்துக் காட்டியிருப்பதும் ஆகும். இவருடைய ‘மருத்துவக் குறிப்புகள்’ பெரிதும் ஆராய்ந்து வாழ்க்கைக்குப் பொருந்த எழுதப்பெற்றவை.

  தமிழ் இலக்கிய உரையாசிரியர்களுள் மிகச் சிறந்தவர்கள் என்ற நிலையில் காலமுறைப்படி அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், நச்சினார்க்கினியர் என்ற மூவரைக் குறிப்பிடலாம்.

  இக்காலப் பகுதிக்குச் சற்றுப் பின்னாகச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலியவற்றுக்கும், ஐம்பெருங் காப்பியங்களுக்கும் உரைகள் எழுந்தன. இந்த உரைகளின் காலம் பொதுவாக கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை எனலாம். உரை எழுதும் இம்முயற்சியானது இலக்கியம், இலக்கணம் ஆகிய இரு துறைகளிலும் வளர்ந்தது. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிற உரைகள் என்ற நிலையில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு போன்றவற்றிற்கான உரைகளையும் பரிபாடலுக்குப் பரிமேலழகர் உரையினையும் கூறலாம்.