4.3. பிற சமய இலக்கியங்கள்

இக்காலப் பகுதியில் தோன்றிய பிற சமய இலக்கியங்கள் என்ற நிலையில் வைணவம் மற்றும் சமண சமய இலக்கியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பௌத்த சமய இலக்கியம் எதுவும் இக்காலப் பகுதியில் தோன்றவில்லை.

4.3.1 வைணவம்

இக்காலப் பகுதியில் சிறப்பாக வாழ்ந்து தமிழிலும், மணிப்பிரவாளத்திலும் வைணவப் பிரபந்த வியாக்கியானங்களும் (விரிவுரைகள்) கிரந்தங்களும் (நூல்கள்) எழுதிய வைணவ ஆசாரியார்கள் சிலருடைய பங்களிப்பைக் காணலாம். மணிப் பிரவாளம் என்பது மணியும் பவளமும் சேர்த்துக் கோத்தது போல, தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் நடை என்பதை முன்பே பார்த்தோம்.

 • நஞ்சீயர்
 • இக்காலப் பகுதியில் தோன்றியவர். வைணவ இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்பு மிகுதியாக இருந்தது. இவர் திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி, திருப்பாவை ஈராயிரப்படி, திருவந்தாதி, கண்ணினுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு வியாக்கியானம், ரகஸ்யத்ரயவிவரணம், நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம் போன்ற நூல்களைச் செய்தார்.

  நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படியின் சிறப்பை,

  தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
  நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் - எஞ்சாத
  ஆர்வ முடன்மாறன் மறைப்பொருளை ஆய்ந்துரைத்தது
  ஏரொன் பதினாயிரம்

  என்று உபதேச ரத்னமாலை (43) கூறுகிறது. (தன் புகழை ஞானியர்களும் வியக்கும்படி விளங்கும் அறிஞரான நஞ்சீயர், தம் குருவான பட்டர்பிரான் அருளால், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு, அதன் வேதப்பொருள் விளங்குமாறு அழகாகச் செய்தது ஒன்பதினாயிரப்படி உரையாகும் - என்பது இதன் பொருள்).

 • நம்பிள்ளை (கி.பி.1207-1312)
 • சோழ நாட்டில் திருவரங்கம் அருகே நம்பூரில் பிறந்தார். தம் குருவான பட்டரின் அருளோடு திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானம் செய்தார். நஞ்சீயரின் ஒன்பதாயிரப்படி ஆற்றில் நழுவிச் சென்றதால், இவர் தம் நினைவாற்றலினால் அதை மீண்டும் எழுதினார். எழுதியதில் சொந்தக் கருத்துக்களும் சில கலந்திருந்தன. நம்பிள்ளையின் அரிய உபதேச மொழிகள் பலவற்றை வார்த்தாமாலையில் காணலாம்.

 • பெரியவாச்சான்பிள்ளை (கி.பி. 1228-1323)
 • இவர் வியாக்கியான சக்கரவர்த்தி என்று பெயர் பெற்றவர். சோழ நாட்டில் செய்நலூரில் பிறந்தார். இளமையிலிருந்தே இவருக்குக் கிருஷ்ண பக்தி அதிகமாக இருந்தது. நம்பிள்ளையை இவர் தமது ஆசிரியராகக் கொண்டார். இராமாயணத்தில் இவருக்கு அளவற்ற ஈடுபாடு உண்டு. இவருடைய ஆற்றலை நன்கு உணர்ந்த நம்பிள்ளை திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதும்படி இவருக்குக் கட்டளையிட்டார். அதன்மேல் இவர் இராமாயண சுலோகங்கள் எத்தனையோ அத்தனை கிரந்தம் (24,000) கொண்ட வியாக்கியானம் செய்தார். இதுவே இருபத்து நாலாயிரப்படி எனப்படும். திருப்பாவைக்கு, மூவாயிரப்படி என்ற வியாக்கியானம் எழுதினார். திருப்பாவைக் (கி.பி. 1228 - 1323)குப் பலர் வியாக்கியானங்கள் எழுதியிருப்பினும் இவருடைய உரையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

  இவர் எழுதியவை நாலாயிரப் பிரபந்தம் முழுமைக்குமான மணிப்பிரவாள வியாக்கியானம், திரிமத சித்தாந்த சார சங்கிரகம்,  பாசுரப்படி ராமாயணம், கலியன் அருள்பாடு உட்படப் பல நூல்களாகும். மணிப்பிரவாளம் இல்லாது சுவை பொருந்திய தமிழாகவே இவரால் எழுத முடியும் என்பதற்கு இவரது நூலில் அதிகமான சான்றுகள் உள்ளன. கடவுள், உலகம், உயிர் ஆகிய மூன்றின் தொடர்பு பற்றிக் கூறும்போது வடமொழிச் சொற்களைக் கையாளுகின்றார். இயற்கையை இனிய தமிழ்ச் சொற்களால் வருணிக்கின்றார். தம் குருவின் கட்டளைப்படி இவர், பெரியவாச்சான் பிள்ளை திருமொழி உரை செய்ததை உபதேச ரத்ன மாலை (44) பாராட்டுகிறது.

 • பின்பழகிய பெருமாள் ஜீயர்
 • நம்பிள்ளையின் சீடர். வைணவ சமயத்தினர் இவரை நினைவுகூர்வது இவர் செய்த ஆறாயிரப்படி குரு பரம்பராப்ரபாவம் என்ற மணிப்பிரவாள நடை நூலினால் ஆகும். இவர் செய்த நூல்கள் குருபரம்பராப்ரபாவம், பஞ்சார்த்த ரகசியம் என்பன. இவற்றுள் குரும்பரம்பரையே ஆழ்வார்கள் வரலாற்றை அறிவதற்கு அடிப்படையாக உள்ளது. நூலின் முதல் பகுதியான பிரவேசம் என்ற பகுதியில் வைகுண்டநாதன் ஆழ்வார்களை அவதரிக்கச் செய்ததையும், அவர்கள் மூலமாக நாலாயிரப் பிரபந்தங்களை உருவாக்கச் செய்ததையும் கூறியுள்ளார். பின்பு முறையாகப் பன்னிருவர் வரலாற்றைக் கூறி முடிக்கின்றார். பின்னர் வைணவ ஆசிரியர்களின் வரலாறுகள் கூறப்படுகின்றன.

  வைணவ சமயக் கோட்பாடுகள் இந்த நூலில் அதிகம் காணப்படுகின்றன. இந்த பிரபாவத்தை பக்தியோடு படிப்பவர் இதில் ஈடுபட்டு ஒன்றிவிடுவர் என்பதில் ஐயமில்லை. பெரியபுராணம் ஒன்று நீங்கலாக, இவ்வளவு நயமும் சிறப்பும் கொண்ட வரலாற்று நூல் எதுவும் இல்லை. வார்த்தாமாலையும் இவரே தொகுத்தார் என்பது வரலாறு.

 • திருக்கோனேரி தாஸ்யை
 • வைணவப் பெண்மணியான இவர், திருவாய்மொழி வாசகமாலை என்ற நூலை எழுதினார். இந்நூல் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தேர்ந்தெடுத்த 164 பாடல்களுக்கு வியாக்கியானம் போல அமைந்துள்ளது. திருவாய்மொழியில் 1102 பாடல்கள் உள்ளன.

  10 அல்லது 11 பாடல்கள் கொண்டது 1 பதிகம்
  10 பதிகம் கொண்டது 1 பத்து
  10 பத்துகள் சேர்ந்ததே திருவாய்மொழி

  வாசகமாலை ஆசிரியர் தம் நூலில் ஒவ்வொரு பதிகத்திலும் முதல் பாட்டையோ அல்லது முதல் பாட்டும் மற்றொரு பாட்டும் ஆக இரு பாட்டுக்களையோ எடுத்துக் கொண்டு, அவற்றுக்குத் திருவாய்மொழியின் முதல் பாடலுக்குத் தகுந்தவாறு பொருள் கூறுகின்றார். திருவாய்மொழிப் பாசுரங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட பொருள் முதல் பாசுரத்தின் பொருளே என விவரிக்கின்றார். இவ்வாறு இவர் 100 பகுதிகளாக விவரிப்பதால் இந்த நூல் விவரண சதகம் என்று பெயர் பெற்றது. நாலாயிரப் பிரபந்த உரைகள் போல இந்நூலும் மணிப் பிரவாள நடையில் அமைந்துள்ளது. பல வடமொழி நூல்கள் இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பல பழமொழிகளைக் கூறுகின்றார் ஆசிரியர்.

  மேற்கண்டவர்களைத் தவிர வடக்குத் திருவீதிப்பிள்ளை, ஈயுண்ணி மாதவப்பெருமாள், நயினாராச்சான்பிள்ளை, நடாதூரம்மாள் போன்றோரும் அக்காலப் பகுதியில் தோன்றி வைணவ இலக்கியத்திற்குத் தொண்டாற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் பல தனியன்களும் எழுதப்பட்டுள்ளன.

  4.3.2 சமணம்

  சமணர்கள் பல நூற்றாண்டுகளாக, பின்வரும் துறைகளில் தம் கவனத்தைச் செலுத்தி வந்தனர்.

  1) சமண சமய இலக்கியம், சரித்திரம் இயற்றுதல்
  2) தமிழ் மொழிக்கான இலக்கணங்கள் செய்தல்
  3) நீதி நூல்கள், நல்லொழுக்க போதனைக்குரியவை இயற்றுதல்

  இவ்வகையில் இந்நூற்றாண்டில் இரண்டு நூல்கள் எழுந்தன. அவை அறநெறிச்சாரம் (நீதி நூல்), யசோதர காவியம் (புராணக்கதை) ஆகியவையாகும். யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.

 • அறநெறிச்சாரம்
 • முனைப்பாடியாரால் (கி.பி.1275) இயற்றப்பட்டது. இவருடைய வரலாறு கிடைக்கவில்லை. இவர் சமணர், அதற்கேற்ப இந்நூலின் சில பாடல்கள் (1,225,226) அருகதேவனைக் குறிக்கின்றன. 226 வெண்பாக்களைக் கொண்டது இந்த நூல். சமண சமயத்தவருக்கான சிறப்பு ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் வரையறை செய்து கூறுகிறது. இதற்கு முன் வெளியான அருங்கலச் செப்பு என்ற சமண நூலின் விளக்கமாக இதனைக் கருதுவர். சமணச் சார்பினராய் இருந்தபோதிலும் பொது நீதிகளும், ஆசாரங்களும், நல்லொழுக்க விதிகளும் இதில் கூறியுள்ள அளவு வேறு எந்த நூலிலும் கூறப்படவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இவர் நன்கு தோய்ந்தவர். பல பாடல்களில் (89-95) ஆசிரியர், மகளிர் ஒழுக்கம் பற்றிக் கூறுகிறார். இவை தமிழ் மரபைச் சிறப்பாக உணர்த்துகின்றன. சமண மரபையொட்டிப் பெண்டிரைப் பழித்தல் என்ற கருத்தை இவை தெரிவிக்கவில்லை. இதே நூற்றாண்டில் பெண்டிரைப் பழிக்கவென்றே யசோதர காவியம் தோன்றியிருக்க, இவர் அவ்வாறு பழிக்காது நூல் செய்துள்ளது.

 • யசோதர காவியம்
 • யசோதர காவியம் (கி.பி. 1275) என்ற நூலின் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இந்நூல் 320 பாடல்களைக் கொண்டது. பிறப்பு, வினை, இறப்பு, மீண்டும் பிறப்பு, வினை, இறப்பு என்று நூல் முழுவதும் அமைந்துள்ளது. இந்நூலில் வினை பற்றிய சில கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

  1)

  2)
  3)
  உயிர்க்கொலை பெரும்பாவம், புலால் உண்ணல்
  கொடிய பாவம்.
  இசை பழிக்க வேண்டிய ஒன்று.
  பெண்கள் மனம் தீய வழியையே நாடும்

  உயிர்க்கொலை, புலாலுண்ணல் ஆகியவை அறிவுடைய மக்களால் பழிக்கப்படுபவை, மற்றவை அவ்வாறு அல்ல. பெண்ணினத்தைப் பற்றிய இவரது கருத்து தமிழிலும் மக்களிடத்தும் தவறான எண்ணத்தை வளர்த்தது எனலாம். இவர் சீவகசிந்தாமணிக் கருத்துக்களையும், தொடர்களையும் பல இடங்களில் எடுத்தாள்கிறார். இயங்கும் உயிர்களைக் கொலை செய்வது பெரிய பாவம் என்றும், இயங்கா உயிர்களான செடி, கொடியைக் கொலை செய்வது சிறிய கொலை என்றும் அருங்கலச் செப்பு கூறும். இந்நூலில் பெரியகொலை என்று (பாடல் எண்.236) முதல்வகைக் கொலை குறிப்பிடப்பட்டுள்ளது.

  இக்காலம் சமண இலக்கியம் அருகிச் சுருங்கத் தொடங்கிய காலம் எனலாம்.