4.4
பிரபந்தங்கள், புராணங்கள்
பிரபந்தம்
என்ற நிலையில் குலோத்துங்க சோழன் கோவை,
சங்கர சோழன் உலா, தஞ்சைவாணன் கோவை போன்றவை
தோன்றியன.
4.4.1
பிரபந்தங்கள்
குலோத்துங்க
சோழன் கோவை
இக்கோவையின்
பாட்டுடைத்தலைவன் பற்றிப் பல கருத்து
வேறுபாடுகள் உள்ளன. பலருடைய கருத்து, இது
மூன்றாம்
குலோத்துங்கசோழன் மீது பாடப்பட்டது
என்பதாகும்.
திருக்கோவையாரை அடுத்தும்,
தஞ்சைவாணன் கோவைக்கு
முன்பும் தோன்றியது. இது ஐந்திணைக்
கோவை எனப்படும்.
நீண்ட பிரபந்தங்களுள் ஒன்று. 510 பாடல்களைக்
கொண்டது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
உறையூர்,
புகார், தஞ்சை, நாகை (சோழர்க்குரிய நகரங்கள்)
என்பனவற்றை எல்லாவிடங்களிலும் இக்கோவை குறிப்பிடுகின்றது.
குலோத்துங்கனின் போர்ச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. சேரனது
கரூரை வென்று, தன் அடியில் பணிந்த அவனுக்கு மீண்டும் முடி
வழங்கி அவ்வூருக்கு ‘முடிகொண்ட சோழபுரம்’ எனப் பெயரிட்டமை
கூறப்பட்டுள்ளது. இம்மன்னனின் வள்ளல் தன்மை, தமிழ்ப்புலமை
போன்றவையும் கூறப்பட்டுள்ளன. இம் மன்னனின் காலத்தில்தான்
வச்சணந்திமாலை, நேமிநாதம், நன்னூல்
முதலியவை
எழுதப்பட்டன. இம்மன்னன் சிறந்த கலாரசிகன்
என்பது
இக்கோவையுள் பல இடங்களில், (கலையாதரன் (360), கற்றோர்க்கு
வள்ளல் (327), இசை விருப்பமுடையவன் (46), பாவலர் காவியம்
ஆடுபவன் (415) கூறப்பட்டுள்ளது. தன்முன் கவி பாடியவர்களின்
கவிதைகளில் காணப்படும் குற்றங்களைக் களையும்
ஆற்றல்
பெற்றவன்; இம்மன்னன் சிவபிரானிடம் அன்பு கொண்டவன்.
சங்கர
சோழன் உலா
இவ்வுலா
சோழருடைய பாரம்பரியத்தைக் கூறுகிறது. இவ்வுலா
ஆசிரியர் ஒட்டக்கூத்தர் செய்த உலாக்களைப்
பின்பற்றிப்
பாடியுள்ளார். அவர் பெயர் தெரியவில்லை. சோழர் குலத்தொன்மை,
தலைவன் பெருமை, அவனுடைய அலங்காரம், அவன் பவனி வருதல்
போன்றவையும், அரசன் உலாவருதலை கண்ட பெண்களின் மன
நிலையும் கூறப்பட்டுள்ளன.
தஞ்சைவாணன்
கோவை
இதனைப்
பாடியவர் பொய்யாமொழிப் புலவர். தொண்டை நாட்டைச் சேர்ந்த துறையூரில்
பிறந்தவர். சில தனியன்களும் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
பாண்டிக்கோவை, திருக்கோவையார், குலோத்துங்க
சோழன் கோவை என்பவற்றை அடுத்துக் கிடைக்கின்ற நூல்களில்
இதுவே பழமை வாய்ந்தது. தென் பாண்டி நாட்டிலுள்ள மறை நாட்டுத் தஞ்சாக்கூர்த்தலைவன்
சந்திரவாணனைப் புகழ்வது இந்நூல். இவன் பாண்டி நாட்டுத் தலைவனாக இருந்தான்.
இவனும் இந்நூல் ஆசிரியரும் சிவ வழிபாடு உடையவர்கள் என்பதைப் பாடல்கள்
மூலம் அறிய முடிகிறது. சொற்சுவை, பொருட்சுவை ஆகியவையும் எளிய நடையும்
கொண்டது. தொல்காப்பியம், இறையனார் களவியல்
என்ற பண்டை இலக்கணங்களை நன்கு பயின்றவர் இந்நூலாசிரியர். நாற்கவிராசநம்பியின்
அகப்பொருள் விளக்கத்துக்கு இலக்கியமாகவே இக்கோவையைப் பொய்யாமொழிப்
புலவர் பாடியுள்ளார்.
4.4.2
புராணம், வேதாந்தம்
இக்காலப்
பகுதியில் தோன்றிய புராண இலக்கியமாக,
பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார்
திருவிளையாடல் புராணத்தைக் கூறலாம். வேதாந்த இலக்கியம்
என்ற நிலையில், ஸ்ரீபட்டனாரின் பங்களிப்பைக் கூறலாம்.
திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்
பெரும்பற்றப்புலியூர்
நம்பியால் எழுதப்பட்டது. இவருடைய
பெயரால் இது நம்பி திருவிளையாடல்
எனவும் வழங்கப்படும்.
மதுரைப்புராணம் என்றும் ஆசிரியர்
குறிப்பிடுகின்றார். இந்நூல்
1753 விருத்தங்களைக் கொண்டது. 64 திருவிளையாடல்கள் இதில்
சொல்லப்பட்டுள்ளன. சந்தம் பாடுவதில் இவருக்கு விருப்பம் உண்டு.
கடவுள் வாழ்த்துப் பகுதியில் பல பாடல்களில் துதிக்கப்பெறும் தலம்
அல்லது மூர்த்தி பெயரின் சந்தத்திலேயே
(திருச்சிற்றம்பலம்,
திருவம்பலம், பொன்னம்பலம்) அமைந்துள்ளன. புராணக் கதைகளை
ஒட்டி, சில இலக்கியச் செய்திகளைக் கூறுகிறார்.
வாதவூரடிகள்
சரிதத்தைத் தனியாக நான்கு படலங்களில்
241 பாடல்களில்
கூறுகிறார். இதுவே தனியாக ஒரு புராணம் எனக் கருதும் அளவு
உள்ளது. புராணம் படிப்பதன் பயனையும் கூறுகிறார்.
பரமார்த்த
தரிசனம்
ஸ்ரீ
பட்டனார் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் பகவத்
கீதையை முதன்முதலில் தமிழில் பாடினார். ஆசிரியர் இந்நூலுக்குத்
தமிழில் பரமார்த்த தரிசனம்
எனப் பெயர் சூட்டிய போதிலும்,
பகவத் கீதை என்றே
ஏடுகளில் காணப்படுகிறது. மூலமும்
உரையுமாக நூல் உள்ளது. சங்கரர் அருளால் இந்நூலைச் செய்ததாக
ஆசிரியர் கூறுகின்றார். ஆதலால் வைணவர்கள்
இதனைப்
படிப்பதில்லை. மொழி பெயர்ப்பு மூல நூலை ஒட்டியே செல்கிறது.
எனினும் பாடல்கள் தமிழ் மரபும் பண்பும் குறையாமல் உள்ளன.
இந்நூல் தற்போது தமிழ் இலக்கிய உலகில் வழக்கில் இல்லை.
|