|
6.4
தத்துவ நூல்களும், திரட்டுநூல்களும்
இக்காலப்
பகுதியில் தோன்றிய தத்துவ நூல்களில்
குறிப்பிடத்தக்கவை தச காரியம், அட்டாங்க
யோகக்குறள்,
ஒழிவிலொடுக்கம், பேரானந்த சித்தியார், பிராசாத தீபம்
போன்றவையாகும். திரட்டுகள் என்ற நிலையில் பெருந்திரட்டு,
குறுந்திரட்டு போன்றவற்றைக் கூறலாம்.
6.4.1
தத்துவம்
இக்காலக்
கட்டத்தில், தசகாரியம், அட்டாங்க யோகக்குறள்,
ஒழிவில் ஒடுக்கம் முதலிய தத்துவ
நூல்கள் வெளிவந்தன.
தச
காரியம்
இது, களந்தை
ஞானப்பிரகாசரால் எழுதப்பட்டது. தேச,
கால, பாத்திர இலக்கணம் (வழிபாடு செய்யும் முறைகளைக்
கற்க முற்படுவோர் கருத்தில் கொள்ள வேண்டியவை, தகுந்த
இடம், தகுந்த நேரம், தகுந்த ஆசிரியர் முதலியனவாகும்), சற்குரு
(குருவாக இருப்பதற்கு உரியவர்) இலக்கணம், அசற்குரு
(சற்குரு அல்லாதவர்) இலக்கணம், தீட்சை (ஒருவர் இறைவழிபாடு
செய்ய விரும்பினால், தக்க குருமூலமாகப் பயிற்சி பெற வேண்டும்.
இதையே தீட்சை என்று ஆகமங்கள் கூறும்.) என்பன இந்நூலில்
குறிப்பிடத்தக்கவையாகும். தச காரிய நூல்கள் பல இருந்தாலும்
இதுவே அளவால் பெரியது. 302 பாடல்களைக் கொண்டது.
அட்டாங்க
யோகக்குறள்
65
குறட்பாக்களை உடையது. அட்டாங்க யோகம் என்பது
எட்டு அங்கங்களை (உறுப்புகள்) உடைய யோகம்.
எட்டும்
எட்டுப் படிகளைப் போன்றவையாகும். இயமம், நியமம், ஆசனம்,
பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற
எட்டு உறுப்புகளைப் பற்றிக் கூறுகிறது.
ஒழிவில் ஒடுக்கம்
ஒழிவில் ஒடுக்கம் 253 வெண்பாக்களைக்
கொண்டது. இதனை
இயற்றியவர் கண்ணுடைய வள்ளல். இந்நூலை அக்கறையோடு ஓதி
உணர்பவர் உலக வாழ்வில் ஈடுபாடு கொள்ளமாட்டார். புதுமையான
தொடர்களும், சொற்களும் இதில் உள்ளன. இதன் பாடல்களில்
வழக்குச் சொற்களும், வழக்கிலுள்ள உவமைகளும், பல்வகைத்
தொழிற்பெயர்களும் காணப்படுவதால், ஆசிரியர் ஓரளவு பாமர
மக்களும் உணரும் வகையில் இந்நூலை இயற்றியதாகக்
கொள்ளலாம். இந்நூலில் புதிய
சொற்கள் அதிகம்
பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்குச் சிலவற்றைக்
காண்போம்.
சன்னை
|
- சைகை
|
கிஞ்சு
|
- சிறிது
|
கிடீர்
|
- அறிவீர்
|
பிராசாத
தீபம்
பிராசாத
தீபம் என்னும் நூல் ஒரு வகையான யோக
நெறியைப் பற்றிக் கூறுகிறது. சிவஞானத்தின் பயனாகிய முக்தியைக்
கொடுப்பது பிராசாதம். இது ஒரு யோக
நெறி. சிவஞான
சித்தியாரில் குறிப்பாகவும், தத்துவப்
பிரகாசத்தில் விளக்கமாகவும்
இது சொல்லப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
இந்த நூல் தமிழில் மிகவும் விரிவான பிராசாத
சாத்திரமாகும்.
6.4.2
திரட்டுகள்
வேதாந்த
சமயத்தைப் பரப்பும் நிலையில் திரட்டு நூல்கள்
தோன்றின. அவற்றுள் பெருந்திரட்டும்,
குறுந்திரட்டும்
குறிப்பிடத்தக்கவை.
பெருந்திரட்டு
இது,
தத்துவராயரால் தொகுக்கப்பட்டது.
இவையனைத்தும்
வேதாந்தப் பாடல்கள் ஆகும். தத்துவராயரின் குரு சிவப்பிரகாசரால்
தொகுக்கப்பட்ட காரணத்தால் சிவப்பிரகாசப்
பெருந்திரட்டு
எனப்படும். பாயிரமாக 12 பாடல்களையும்,
நூலாக 2821
பாடல்களையும் கொண்டது. இதிலுள்ள நூல்கள் 147
ஆகும்.
தற்போதுள்ளவை மிகச் சிலவேயாகும்.
அவற்றில்
சைவத்திருமுறைகள், ஞானாமிர்தம், சிவானந்த
மாலை,
தத்துவரத்தினாகரம், தத்துவ விளக்கம் போன்றவை அடங்கும்.
வேதாந்த
சமயம் தமிழில் செல்வாக்கு அடையாத காலத்தில்
இத்திரட்டு தோன்றியது. அதனைப் பரப்பும் முயற்சியில்
இது
தோன்றியது எனலாம். தத்துவப்பிரகாசம், வேதாந்த
தீபிகை,
ஞானசாரம், ஞானசித்தி முதலிய சைவசித்தாந்த நூற்பெயர்களை
இவர் தம் பாடல்களில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாசகம்
என்ற தலைப்பிலும் பாடல்கள் அமைந்துள்ளன.
திருவாசகம் எனும் தலைப்பில் வரும் இரு
பாடல்களைப்
பார்க்கலாம்:
அன்னையும்
ஆயமும் கேண்மின்களோ, எனது ஆர்உயிர் ஆய
சிவபெருமான்...
(பெருந்திரட்டு
11, சுவானுபூதி பாடல் எண்: 21) |
வானும்
நிலனும் அடையக் கேண்மோ வள்ளல், பெருந்துறை
மேய பெம்மான்
(பெருந்திரட்டு
11, சுவானுபூதி பாடல் எண்: 22) |
மேற்கண்ட
பாடல்கள் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்
காணப்படவில்லை என்பது வியக்கத்தக்க செய்தியாகும். பண்டைய
நூல்களில் தம் கருத்துக்கு ஏற்ற பாடல்களைத் தத்துவராயர்
தொகுத்துத் தம் கருத்துக்குப் பொருத்தமானவற்றைச்
சேர்த்தார்;
பண்டை நூல்களில் தக்க மேற்கோள் கிடைக்காதபோது
பல
புதிய பாடல்களைப் பாடியும் சேர்த்துள்ளார்.
அவ்வாறு
சேர்க்கும்போது பண்டைய பெயர்களைப் புதிய பாடல்களுக்குச்
சூட்டி, திரட்டைப் பெருந்திரட்டாக ஆக்கினார்.
குறுந்திரட்டு
இந்நூல்
தத்துவராயர் பெருந்திரட்டில் தொகுத்தவற்றில்
சிலவற்றைச் சுருக்கமாகத் திரட்டி 424 செய்யுட்களாக எழுதப்பட்டதாகும். இத்திரட்டில்
பல மிகைப்பாடல்களும் உள்ளன. திருவாசகப்
பாடல்களும் இதில் காணப்படுகின்றன. குறுந்திரட்டுப்
பாடல்களில், சில தேவாரம் போலவே செய்யப் பெற்ற பாடல்கள் ஆகும்.
இந்நூலாசிரியர்
தம்மை மறந்து எங்கும் சிவமே பேசுகிறார்.
இவர் சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம்,
அடங்கன்முறை,
பிள்ளைத்திருநாமம், தசாங்கம் உட்பட பல
நூல்களை
எழுதியுள்ளார்.
|