6.5 பிற நூல்கள் மேற்கண்டவை தவிர நிகண்டுகளும் உருவாயின. இக்காலக் கட்டத்தில் தோன்றியவை கயாதர நிகண்டு, உவமான சங்கிரகம், அளவை விளக்கம் போன்றவை. இலக்கணத்தைப் பொறுத்தவரை பெரிய அளவில் இந்நூற்றாண்டில் எதுவும் எழவில்லை. நிகண்டு, தமிழில் தோன்றிய அகராதிக்கலை ஆகும். முற்காலத்தில் நிகண்டு கற்ற பின்னரே தமிழ் படிக்கத் தொடங்குவர். 6.5.1 நிகண்டு, இலக்கணம் தமிழில் எழுதப்பட்ட அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது நிகண்டு. நிகண்டுகள் இக்கால எல்லையில் தோன்றின. இலக்கண நூல்களும் தோன்றின. கயாதரரால் எழுதப்பட்டது. இந்நூலில் ஆசிரியரின் கல்வி கேள்வியையும், சிவ பக்தியையும் அறியலாம். பிங்கல நிகண்டைப் போலவே ஆசிரியர் பெயரால் பெயர் பெற்றது இது. மனப்பாடம் செய்ய எளிமையானது. தெய்வப்பெயர், இடம், மக்கள் என்ற பெயர்கள் உட்படப் பல பெயர்கள் பற்றிய பத்துத் தொகுதிகளைக் கொண்டது. பழைய நிகண்டுகளின் பயன்பாடின்மை பற்றி மு.வரதராசனார் கூறும் கருத்தைக் கேளுங்கள். அகர வரிசையில் சொற்கள் சேர்க்கப்பட்டு பொருள்கள் உணர்த்தப்படும் அகராதிகள் ஐரோப்பியர் தொடர்பால் ஏற்பட்ட பிறகு பழைய நிகண்டுகள் அவ்வாறு பயன்படவில்லை. நிகண்டு செய்தோர் வேறு இலக்கியம் செய்ததாக வழக்கு இல்லை என்றாலும், இந்நூற்றாண்டில் கயாதரர், நிகண்டுடன் வேறு சில நூல்களையும் எழுதியுள்ளார். உவமான சங்கிரகம் என்ற பெயரில் மூன்று நூல்கள் உள்ளன. இக்காலப் பகுதிக்கு உரியது முதல் நூலாகும். தொல்காப்பியத்தின் மூன்றாவது பிரிவான பொருளதிகார இயல் பிற்காலத்தில் தனிப்பிரிவாக வளர்ந்தது. இதனோடு நெருங்கிய தொடர்புடைய உவமவியல் கருத்துகளின் ஒரு பகுதியே உவமான சங்கிரகம் எனப்படும் இந்நூலாகும். ஆசிரியரின் வரலாறு தெரியவில்லை. நூலின் இறுதியில் பெண்களுக்குரிய சில பொது உவமைகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலைச்
செய்தவர் களந்தை ஞானப்பிரகாசர் என்பதாக,
வெள்ளியம்பலவாணத் தம்பிரான் தமது முத்தி
நிச்சயப்
பேருரையில் கூறுகிறார். இந்நூல் அளவை இலக்கணம்
கூறுகிறது.
இந்நூல் பற்றி, சாமிநாதய்யர் தம் ‘சங்ககாலத்
தமிழும்
பிற்காலத் தமிழும்’ என்ற நூலில்
கூறுவதாவது:
சிறப்பு மிகுந்த தமிழ் இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் சிறந்த உரைகள் எழுதப்பட்டன. குறிப்பாகத் திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றிற்கு உரை நூல்கள் தோன்றின. இக்காலக் கட்டத்தில் பரிதியாரால் திருக்குறளுக்கு உரை எழுதப்பட்டது. (காலமுறைப்படி திருக்குறளுக்கு உரை எழுதிய ஐவரைப் பற்றி 11ஆம் நூற்றாண்டு பாடப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) பரிதியார் உரையில் வடசொற்களும், வடமொழித் தொடர்களும் அதிகம் உள்ளன. வேறு யாரிடமும் இல்லாத சொல்லாட்சி இவரிடம் உண்டு. பதவுரையோ பொழிப்புரையோ கூறப்படாமல் பாடலின் கருத்து மட்டும் சொல்லப் பெறுவதால் குறளின் கருத்தை மட்டும் அறிய இது உதவுகிறது. இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். இவ் உரையாசிரியர் திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதியுள்ளார். கல்லாடர் தொல்காப்பியம் - சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியுள்ளார். இவர் தமது உரையை, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளைத் தழுவி அமைத்துள்ளார். பரிமேலழகரின் திருக்குறள் உரையில் காணும் தொடர்களும் இவரது உரையில் வருகின்றன. இவரைத் தவிர, சொல்லதிகாரத்துக்குத் தெய்வச்சிலையாரும் உரை எழுதியுள்ளார். அந்தவுரை விருத்தியுரை எனப் பெயர் பெற்றது. நேமிநாதம் என்னும் இலக்கண நூலுக்கு உரை இக்காலக் கட்டத்தில் தோன்றியது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. (நேமிநாதம் என்பது 22வது சமண தீர்த்தங்கரர் பெயரால் குணவீர பண்டிதர் 12ஆம் நூற்றாண்டில் எழுதிய இலக்கண நூலாகும். 12ஆம் நூற்றாண்டு இரண்டாம் பகுதி பாடத்தில் இந்நூல் பற்றி விளக்கப்பட்டுள்ளது). நேமிநாதம் நூலுக்கான இந்த உரை பொழிப்புரையாகவும், கருத்துரையாகவும் உள்ளது. வினா, விடை விளக்கங்களைக் கொண்ட விருத்தியுரையாகவும் இது உள்ளது. சமயத்தால் ஆசிரியர் சமணர். இவர் தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக் காட்டுகிறார். சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் இதில் சுட்டப்படுகின்றன. தக்கயாகப் பரணிக்கு உரை ஒன்று இக்காலத்தில் எழுதப்பட்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கலிங்கத்துப் பரணிக்குப் பிறகு வந்த நூல் தக்கயாகப் பரணி ஆகும். கலிங்கத்துப் பரணிக்குப் பழைய உரைகள் இல்லை. தக்கயாகப் பரணிக்கு உண்டு. இவ்வுரையாசிரியர் தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். தமிழில் சங்க நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், சூளாமணி, உதயணன் கதை போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறார். இவருக்குக் கவியழகில் ஈடுபாடு உண்டு. சொல்லையும் பொருளையும் மிகவும் ஆராய்ந்து எழுதுபவர். எல்லாவிடத்திலும் சுவைபடவே பொருள் எழுதுவார். ஒரு சொல்லிற்குரிய இரு பொருளைச் சேர்த்து எழுதுவார். அதேபோல ஒரே பொருளைத் தருகின்ற இரு சொற்களைச் சேர்த்து வழங்குவார். பல சமயங்களை நன்கு அறிந்தவர். 15 சமயங்களைத் தன் உரையில் கூறுகின்றார். புறப்பொருள் வெண்பா மாலை, தொல்காப்பியத்துக்குப் பின் வந்து, இன்று வரை கிடைக்கின்ற ஒரே புறப்பொருள் இலக்கண நூலாகும். இந்நூலுக்கு சாமுண்டிதேவ நாயகர் உரை எழுதினார். இவ்வுரை பதவுரையாக மட்டுமே உள்ளது. மூலநூலைப் போலவே இதுவும் 12 பகுதிகளாக, படலம் என்றே உள்ளது. இலக்கணக் குறிப்பு முதலியன மிகுதியாகக் காணப்படவில்லை. நூலாசிரியரும் உரையாசிரியரும் சைவ சமயத்தினர் என்று கருதுவதற்கான சான்றுகள் நூல் முழுவதும் காணப்பெறுகின்றன. தேவார உரை, கண்ணுடைய வள்ளலால் இக்காலத்தில் எழுதப்பட்டது. இவர் சம்பந்தர் தேவாரத்துள் சித்திரக் கவிகளாக உள்ளவற்றிற்கு உரை எழுதியுள்ளார். தாம் வழிபடும் கடவுளாகக் கொண்ட ஞானசம்பந்தருடைய பாடல்களுக்கு இவர் உரை எழுதியதில் வியப்பில்லை. பொருள் விளங்காத சித்திரக் கவிகளுக்கு இவர் உரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். திருக்களிற்றுப்படியாருக்கும் இவர் உரை எழுதியதாகக் கூறுவர். இந்த உரை நூல் மதுரை சிவப்பிரகாசரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசர் என்ற பெயரில் பலர் இருந்ததால் இவரை வேறுபடுத்திக்காட்ட மதுரை சிவப்பிரகாசர் என்பர். இவர் முன்னோர் நூல்களையும், உரைகளையும் நன்கு ஆராய்ந்து, இருபா இருபஃது, சிவப்பிரகாசம் ஆகிய இரு சித்தாந்த சாத்திரங்களுக்கும் உரை எழுதியுள்ளார். முதலில் இவர் எழுதியது இருபா இருபஃது உரையாகும். சாத்திர மேற்கோள்கள் இதில் அதிகமாகக் காணப்பெறவில்லை. சிவப்பிரகாச உரையைப் பொறுத்தவரை அவர் ஆராய்ச்சித்துறையில் தாம் கூறும் ஒவ்வொரு விளக்கக் கருத்துக்கும் உரிய ஆதாரத்தைப் பண்டைய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். எந்தப் பாடலையும் நூலின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறார். தாம் கூறும் சமயக் கருத்துகளுக்குத் திருமுறையையே மேற்கோளாகக் காட்டுகிறார். இவர் வடமொழியிலும் பயிற்சியுள்ளவர். |