1.5 மடங்களும் படைப்புகளும்

பதினான்காம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் சைவ மடங்கள் கட்டப்பட்டன. நாயக்க மன்னர்களின் ஆதரவிலும் பல மடங்கள் கட்டப் பெற்றன. சமயத் துறைக்கு மடங்கள் பணியாற்றியதோடு, தமிழ் இலக்கிய இலக்கணத்தைப் போற்றுவதிலும் ஆர்வம் செலுத்தின. பழைய நூல்களைக் கற்பதற்கும் புதிய நூல்களைப் படைப்பதற்கும் மடங்கள் ஆதரவு தந்தன. அதனால் புலவர் பலர் மடங்களைச் சார்ந்து வாழ்ந்தனர். மடங்களின் தலைவர்களாக விளங்கியவர்களும் சமய நூல்களை இயற்றினர்.

1.5.1 திருவாவடுதுறை மடம்

குரு நமச்சிவாயர் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டில் இம்மடம் நிறுவப் பெற்றது. இம்மடத்தின் புலவர்களால் இயற்றப் பெற்ற 14 நூல்கள் பண்டார சாத்திரம் என்றழைக்கப்படுகின்றன. இம்மடத்தில் வாழ்ந்த ஈசான தேசிகர் இலக்கணக் கொத்து என்ற நூலை எழுதினார். சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு உரையெழுதினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த காலத்தில் இம்மடத்தினரால் ஆதரிக்கப் பெற்றார்.

1.5.2 தருமபுர மடம்

சைவ சித்தாந்தக் கருத்துக்களை மிகுதியும் பரப்பி வரும் இம்மடம் குருஞான சம்பந்தர் என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப் பெற்றது. இம்மடத்தால் ஆதரிக்கப்பெற்ற சம்பந்த சரணாலய சுவாமிகள் கந்த புராணச் சுருக்கம் என்ற நூலினையும், வெள்ளியம்பலத் தம்பிரான் சிவஞான சித்தியாருக்கு விரிவுரையும் எழுதியுள்ளனர்.

1.5.3 துழாவூர் திருமடம்

குருஞான சம்பந்தரின் மாணவரான நிரம்ப அழகிய தேசிகர் குன்றக்குடியின் மேற்கே துழாவூர் திருமடம் தோற்றுவித்தார். சிவஞான சித்தியார் சுபக்கம், திருவருட்பயன் என்ற இரண்டு நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். திருஐயாற்றுப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம், வேணு வன புராணம் என்பனவும் இயற்றியுள்ளார். இவருடைய மாணவர்களான (1) அளகைச் சம்பந்த முனிவர், (2) ஞானக்கூத்தர், (3) சிதம்பரநாத பூபதி என்ற மூவருமே நூல்கள் படைத்துள்ளனர்.

1.5.4 சூரியனார் கோவில் மடம்

சூரியனார் கோவில் சந்தானத்தின் 2ஆம் முதல்வர் சிவாக்கிரக யோகிகள். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் வடமொழியில் நூல்கள் செய்துள்ளார். சிவநெறிப் பிரகாசம் என்ற நூலையும் சிவஞான சித்தியார் சுபக்க, பரபக்க உரைகளையும் எழுதியுள்ளார்.