1.6 மேலும் சில படைப்பாளர்கள்

மேற்குறிப்பிட்டவர்களைத் தவிரவும் மேலும் குறிப்பிடத்தக்க சில படைப்பாளர்கள், தங்கள் படைப்புகள் மூலம் பதினாறாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

1.6.1 குறுநில மன்னர்கள்

விஜய நகரத்தின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர் ஆட்சிக் காலத்திலிருந்த குறுநில மன்னர்களாகிய வரதுங்கராம பாண்டியரும், அதிவீரராம பாண்டியரும் சில நூல்களைப் படைத்தனர்.

• வரதுங்கராம பாண்டியர்

இவர் வடமொழி ஸ்கந்த புராண மூன்றாம் பிரிவினை பிரமோத்தர காண்டம் என்று தமிழில் படைத்தார். குட்டித் திருவாசகம் என்று போற்றப்படும் திருக்கருவைப் பதிற்றுப்பத்தாந்தி, கலித்துறை அந்தாதி என்ற வேறு இரு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவரது மனைவியான சிவகாம சுந்தரியும் தமிழ்ப் புலமை படைத்தவர்.

சிந்தனை உனக்குத் தந்தேன்
    திருவருள் எனக்குத் தந்தாய்.
வந்தனை உனக்குத் தந்தேன்
    மலரடி எனக்குத் தந்தாய்.
பைந்துணர் உனக்குத் தந்தேன்
    பரகதி எனக்குத் தந்தாய்.
கந்தனைப் பயந்த நாதா
    கருவையில் இருக்கும் தேவே!


(பைந்துணர் = பசுமையான பூங்கொத்து; தேவே = இறைவனே!; பரகதி = மேலான நிலை ; கருவை = கரிவலம் வந்த நல்லூர்)

என்ற பாடல் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதியில் இடம் பெறுவதாகும்.

• அதிவீரராம பாண்டியர்

ஹர்ஷர் இயற்றிய வடமொழி நைஷதத்தைக் கற்றோர் போற்றும் நைடதம் என்ற பெயரில் தமிழில் படைத்த பெருமை உடையவர். சிறுவர்க்கான நீதி நூலான வெற்றி வேற்கையும் இவரியற்றியது. நறுந்தொகை என்றும் இந்நூல் அழைக்கப் பெறும். இவர் கூர்ம புராணம், காசிக் காண்டம், இலிங்க புராணம், மாக புராணம் என்ற நூல்களையும் இயற்றினார்.

1.6.2 மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்பாளர்கள்

பதினாறாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் செல்வாக்குப் பெற்றிருந்த வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் வெளிவந்தன. அவற்றை மறைஞான சம்மந்தர், அநதாரியப்ப புலவர், செவ்வை சூடுவார் போன்றோர் வெளியிட்டனர்.

• மறைஞான சம்பந்தர்

சிதம்பரத்தில் இருந்த கண்கட்டி மடத்தில் வாழ்ந்தவர். வடமொழியில் இருந்து சிவதருமோத்திரம் என்ற நூலை மொழிபெயர்த்து உள்ளார். அகத்தியர் சிவதருமங்கள் குறித்துக் கேட்க, முருகன் கூறிய உத்தரங்களை (பதில்களை) உரைப்பதால் இப்பெயர் பெற்றது. ஆகமம் எல்லாம் வரம்பு கண்டு தமிழ் செய்தவர் இவர் ஒருவரே. கமலாலய புராணம் என்ற இணையற்ற தலபுராணத்தைப் பாடிய இவர், அருணகிரி புராணம், சைவ சமய நெறி, பதிபசுபாசப் பனுவல், முதலிய சைவ சாத்திர நூல்களையும் எழுதியுள்ளார்.


திருவண்ணாமலைக் கோயில்

• அநதாரியப்ப புலவர்

மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கரின் அமைச்சர் திருவித்தனால் ஆதரிக்கப் பெற்ற இப்புலவர் வடமொழி சுந்தர பாண்டியத்தை அடியொற்றித் தமிழில் சுந்தர பாண்டியம் என்ற நூலைச் செய்தார். தடாதகைப் பிராட்டியின் (மதுரை மீனாட்சியம்மை) தோற்றம், திக்குவிசயம், திருமணம் என்பவற்றை மூவாயிரம் விருத்தப் பாக்களில் இந்நூலில் கூறுகிறார்.

• செவ்வைச் சூடுவார்

வேம்பத்தூர் அந்தணப் புலவரான இவர் வடமொழி வியாசர் செய்த பாகவதத்தைத் தமிழில் தந்துள்ளார். இதிகாச பாகவதம் என்றும் விண்டு பாகவதம் என்றும் இந்நூல் வழங்கப் பெறும். தமிழில் தோன்றிய முதல் பாகவத நூல் இதுவே. (விண்டு - விஷ்ணு)

1.6.3 இலக்கண நூற் படைப்பாளர்

இந்நூற்றாண்டில் சில இலக்கண நூல்களும் படைக்கப்பட்டன. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கன.

• திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

ஆழ்வார் திருநகரியில் பிறந்த இவர், திருக்குருகை மான்மியம் பாடியதால் இப்பெயர் பெற்றார். நம்மாழ்வார் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர். மாறன் அகப்பொருள், மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் எனத் தான் இயற்றிய 3 இலக்கண நூல்களுக்குமே ‘மாறன்’ என்ற நம்மாழ்வார் பெயரையே வைத்துள்ளார். 3030 பாக்களில் இவரியற்றிய திருக்குருகை மான்மியம் சித்திரக் கவிகள், நிரோட்டகம், யமகம் போன்ற பா வகைகள் நிரம்பியது.

1.6.4 சாத்திர நூற் படைப்பாளர்கள்

இக்காலக்கட்டத்தில் பல சாத்திர நூல்களையும் தத்துவ நூல்களையும் படைத்தனர்.

• கமலை ஞானப்பிரகாசர்

சிதம்பர நாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தம் 30ஆவது வயதில் மெய்ஞ்ஞானம் பெற்று ஞானப்பிரகாசர் ஆனார். அற்புதம் பல நிகழ்த்தியவர். திருஆனைக்கா புராணம், திருமடிப் புராணம் இயற்றியுள்ளார். இவர் அனுட்டான அகவல், புட்பவிதி, சிவபூசை அகவல், சிவானந்த போகம் முதலிய சைவ சமயச் சாத்திர நூல்களும் படைத்தார். தருமையாதீனம் எனப்படும் தருமபுர ஆதினத்தைத் தோற்றுவித்த குருஞான சம்பந்தர், நிரம்ப அழகிய தேசிகர் என்பவர்கள் இவரது மாணவர்கள்.


திருஆனைக்கா

• இரேவண சித்தர்

தொண்டை நாட்டுப் புலியூரில் பிறந்தவர். இவர் திருப்பட்டீச்சுரம், திருவலஞ்சுழி, திருமேற்றளி என்ற இடங்கட்குத் தலபுராணமும் சிவஞான தீபம் என்ற சைவ சாத்திர நூலும் அகராதி நிகண்டும் படைத்துள்ளார்.

1.6.5 பல்துறை நூல்கள்

பதினாறாம் நூற்றாண்டில் இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள், நீதி நூல்கள் என்பனவும் சிறுபான்மை தோன்றியுள்ளன. புராணத் திருமலை நாதரின் மகனான பரஞ்சோதியார் சிதம்பரப் பாட்டியல் என்ற நூலை எழுதி உள்ளார். மண்டல புருடர் சூடாமணி நிகண்டு இயற்றினார். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 3 இலக்கண நூல்கள் இயற்றினார். இரேவண சித்தர் அகராதி நிகண்டு இயற்றினார்.

உலகநாத பண்டிதர் உலக நீதி என்ற நூலை இயற்றினார். வேண்டாம், வேண்டாம் என்று எதிர்மறை நல்வினைகளான உலகப் பொது நீதிகளைக் கைக்கொள்ள ஏவுகிறது உலக நீதி.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.

என்பன உலக நாதர் கூறும் நீதிகளில் சில.