2.3 சிற்றிலக்கியப் புலவர்கள்

பெரும்புலவர்கள் இயற்றிப் புகழ்பெற்ற சிற்றிலக்கிய வகைகளையே தாமும் பாடிப் படைப்பதைச் சில புலவர்கள் இந்தக் காலகட்டத்தில் பெருமையாகக் கருதினார்; சில புதுவகைச் சிற்றிலக்கியங்களையும் படைக்கத் தவறவில்லை; அவர்களுள் முக்கியமானவர்கள் படிக்காசுப் புலவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலியோர் ஆவர்.

2.3.1 படிக்காசுப் புலவர்

சந்தப் பாடல்கள், வசைப் பாடல்கள் பாடுவதில் வல்ல இவர் தருமையாதீனக் குரு முதல்வருக்கு அணுக்கமானார். புள்ளிருக்கு வேளுர் கட்டளைத் தம்பிரானாக உயர்ந்தார். வள்ளல் சீதக்காதியால் பாராட்டப் பெற்றவர். இவரைப் பற்றிப் பல பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. மாவண்டூர் கறுப்ப முதலியார் வேண்டுகோளை நிறைவேற்றத் தொண்டை மண்டல சதகம் பாடினார். இந்நூல் உவமை, உருவகம், பழமொழி என்பன நிறைந்த பெட்டகம். நாட்டு வரலாற்றை மட்டும் விரித்துக் கூறுவது அல்ல சதக இலக்கியம். வேறெந்தப் பொருளையும் கொண்டு இயற்றப்படலாம் என்ற மாற்றத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் இவரே! வேலூர்க் கலம்பகம் இவர் இயற்றிய மற்றொரு நூல். இவரது பெருமையைச் சொக்கநாதர் எனும் புலவர் பாடியுள்ள முறையைப் பாருங்கள்:

மட்டாருந் தென்களந்தைப் படிக்காசான்
    உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்
    பரிமளிக்கும் பரிந்துஅவ் ஏட்டைத்
தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும்
   வாய்மணக்கும் துய்ய சேற்றில்
நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
    பாட்டில் உறு நளினம் தானே.

2.3.2 அந்தகக் கவி வீரராகவ முதலியார்

 
திருக்கழுக்குன்றம் கோயில்

சைவ வேளாளரான இவர் பிறவிக் குருடர்; யாழ்ப்பயிற்சி உடையவர். விரைந்து பாடவும் வியக்குமாறு பாடவும் வல்லவர் என மது. ச. விமலானந்தம் குறிப்பிடுகின்றார். காஞ்சியை அடுத்த பூதூரில் பிறந்தாலும் சோழநாடு முழுவதும் சுற்றித் திரிந்தவர். ஈழநாட்டுக்குச் சென்று மன்னனிடம் யானையும் நாடும் பெற்றுத் திரும்பினார். திருக்கழுக்குன்ற புராணம், திருக்கழுக்குன்றத்து உலா, திருக்கழுக்குன்றத்து மாலை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், பரராச சிங்க வண்ணம், கீழ்வேளுர் உலா, கயத்தாற்று அரசன் உலா, சந்திரவாணன் கோவை, பஞ்சரத்தினம் எனப் பதினோரு நூல்களை இயற்றியுள்ளார்.

2.3.3 சுப்பிரதீபக் கவிராயரும் இரத்தின கவிராயரும்

மேலும், சிற்றிலக்கியம் படைத்தவர்களுள் சிறப்புடையவர்களாகச் சுப்பிரதீபக் கவிராயரும் திருமேனி இரத்தின கவிராயரும் கருதப்படுகின்றனர்.

• சுப்பிரதீபக் கவிராயர்

வீரமாமுனிவர்க்குத் தமிழ் கற்பித்தவர். அவர் காரணமாகக் கிறித்தவரானார். சொக்கநாத நாயக்க மன்னரின் அரண்மனை அதிகாரியாக இருந்த கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட கூளப்ப நாயக்கன் காதல், கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது என்ற இரண்டு நூல்கள் பாடி உள்ளார். இரண்டுமே பொருட்சுவையும் வளமான நடையும் உள்ளவை.

• திருமேனி இரத்தின கவிராயர்

இவர் இயற்றிய புலவராற்றுப்படை 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.