3.1 சைவ இலக்கியம்

இலக்கியம், இலக்கணம், தத்துவம், தர்க்கம், மறுப்பு, கண்டனம், பேருரை எனப் பன்முகப் படைப்புகளைச் சைவ இலக்கியம் இந்நூற்றாண்டில் கண்டது. மடங்களின் ஆதரவும் செல்வர்களின் ஆதரவும் இவ்வகை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தன.

3.1.1 சிவஞான முனிவர்

திருவாவடுதுறை மடத்தினால் புரக்கப் பெற்ற சிவஞான முனிவர் இளமையிலேயே துறவு பூண்டவர். பன்மொழிப் புலவர்; பல்கலைச் செல்வர்; சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்தவர். வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்த இவர் தாமே பாடிய பனுவல்கள் பின்வருமாறு:

(1)அகிலாண்டேசுவரி பதிகம்
(2)இளசைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(3)கச்சி ஆனந்தருத்ரேசர் பதிகம்
(4)கலைசைச் செழுங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
(5)கலைசைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(6)குளத்தூர்ப் பதிற்றுப் பத்தாந்தாதி
(7)சோமேசர் முதுமொழி வெண்பா
(8)திருத்தொண்டர் திருநாமக் கோவை
(9)திருமுல்லைவாயில் அந்தாதி
(10)திரு ஏகம்பர் ஆனந்தக் களிப்பு
(11)பஞ்சாக்கர தேசிகர் மாலை
(12)காஞ்சிப் புராணம்
(13)அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்

முதலியன. வடமொழியும் தமிழ்மொழியும் நிகர் என்ற கொள்கையர். சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம், சிவசமவாதவுரை மறுப்பு என்பவை இவரியற்றிய பிற நூல்கள். முக்களாலிங்கர் என்பது சிவஞான முனிவரின் இயற்பெயராகும்.

3.1.2 கச்சியப்ப முனிவர்

’கவிராட்சதர்’ என்று போற்றப் பெறும் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவரின் மாணவர். இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம் என்ற மூன்றிலும வல்லவர். திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணப் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பதிற்றுப் பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர அந்தாதி முதலிய நூல்களை இயற்றினார். இவருடைய நண்பரான கடவுண் மாமுனிவர் திருவாதவூர்ப் புராணம் பாடினார்.

3.1.3 அம்பலவாண தேசிகர்

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவர். அதிசய மாலை, உபதேச வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, தசகாரியம் முதலிய பத்து சைவ சாத்திர நூல்களை இயற்றிப் புகழ் பெற்றவர். அனுபோக வெண்பா, பாஷண்ட நிராகரணம், பூப்பிள்ளை யட்டவணை என்ற நூல்களையும் பாடியுள்ளார். சிவஞான முனிவரைப் போன்றே சமய, சாத்திர ஒழுங்கைக் காப்பதிலும் சமய மரபுகளை மீறுவோர்களைக் கண்டிப்பதிலும் சிறந்தவர்.