3.2 வீர சைவ இலக்கியம்

துறைமங்கலம் சிவப்பிரகாசர் காலத்திலேயே வீர சைவ இலக்கியம் வளர்ந்திருந்தது. இந்த நூற்றாண்டில் சாந்தலிங்க அடிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், குமார தேவர் என்ற மூவரும் வீரசைவ இலக்கியத்தைத் தமிழில் வழங்கினர். பெரிய நிறுவனங்களான சைவ மடங்களைப் போன்றே வீர சைவமும் மடங்களை அமைத்துச் சமயத்தையும் இலக்கியத்தையும் பரப்பியது.

3.2.1 சாந்தலிங்க அடிகள்

இவர் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவியவர். சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையின் கணவர். அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது, வைராக்ய சதகம், வைராக்ய தீபம் என்ற வீரசைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

3.2.2 திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

சாந்தலிங்க அடிகளின் மாணவர். அவருடைய நூல்கட்கு உரை எழுதியவர். உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மேல் கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது என்பனவும் பாடியுள்ளார்.

3.2.3 குமாரதேவர்

மகாராஜா துறவு என்ற நூலை இயற்றிய இவர் கன்னட நாட்டு அரசர். சாந்தலிங்க அடிகளிடம் உபதேசம் பெற்றவர். சிவாத்துவிதக் கொள்கையை விளக்கியவர். அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் முதலிய பல நூல்களைப் படைத்துள்ளார். எனினும் மகாராசா துறவு என்ற நூலே பெரிதும் பயிலப்பட்டது; பாராட்டப்பட்டது.

அவரவர் வினையின் அவரவர் வருவார் அவரவர்
                         வினையள வுக்கே
அவரவர் போகம் என்றதே யாயின் ஆருக்கார்
                        துணையதா குவர்கள்
அவரவர் தேகம் உளபொழு துடனே ஆதர
                             வாரென நாடி
அவரவ ரடைதல் நெறி கன்மத் தடையும் ஆதர
                              வாதர வாமோ
                                (மகாராசா துறவு-29)

(வினை = நல்வினை, தீவினை; போகம் = இன்பம்; கன்மம் = வினை)

அவரவர் செய்த நல்வினை, தீவினைகளால் பிறப்பெடுப்பர். அதன்படி தான் இன்பம் அடைவர் எனில் யாருக்கு யார் துணை? உடம்பு உள்ள போதே ஆதரவு யார்? என நாடி அடைய வேண்டும். ஒருவர் செய்த வினையாற் சேரும் துணை துணையாகாது என்று குமாரதேவர் அறிவுறுத்துகிறார்.