3.7 இசுலாமிய இலக்கியமும் கிறித்தவ இலக்கியமும்

இசுலாமியச் சமயம் சார்ந்த நூல்கள் பல எழுதப்பட்டன. ஐரோப்பாவிலிருந்த சமயம் பரப்ப வந்த கிறித்தவர்களும் தமிழ் இலக்கியம் பல படைத்தனர்.

3.7.1 இசுலாமியத் தமிழிலக்கியம்

”தமிழகத்தில் 17, 18ஆம் நூற்றாண்டில் நவாபு ஆட்சி நிலவியது. அரசு மொழியாகப் பாரசீகமும் உருதும் அமைந்தன. குர்ஆன் போன்ற மத நூல்களைத் தெய்வ மொழியாகிய அரபியிலேயே படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, வேதத்தைப் படிப்பதற்கு அரபு மொழியையும் அரசியலை நடத்த உருது-பாரசீக மொழிகளையும் முஸ்லீம் மக்கள் பயின்றார்கள்” என்கிறார் மது.ச. விமலானந்தம். மதச் சார்பான நூல்களில் மிகுதியான அரபுச் சொற்கள் இதனால் கலந்தன. தமிழிலும் உருது, அரபிச் சொற்கள் கலந்தன. அரேபிய, பாரசீக மொழிகளைக் கற்ற இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் அம்மொழி இலக்கிய வகைகளைக் கற்றுத் தமிழில் அவ்வாறே படைத்தனர். இதனால் இசுலாமியத் தமிழிலக்கியம் புது வடிவம் பெற்றது.

• அரபி மொழியிலிருந்து பெற்ற வடிவங்கள்

படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர்.

பரணி இலக்கியம் போன்று இஸ்லாமியருக்கும் ஏனையோருக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடும் இலக்கிய வகை ’படைப்போர்’ ஆகும். ஐந்து படைப்போர், செய்தத்துப் படைப்போர், உசைன் படைப்போர் என்பன அவற்றுள் சில.

அல்லாவின் அருள் நாடி விண்ணப்பிப்பது ‘முன ஜாத்து’ ஆகும். செய்யது முகமது ஆலிம் இயற்றியது ’முனஜாத்து மாலை ஆகும்.

கதை கூறுதல் என்ற பொருளில் அமைந்த கிஸ்ஸா வகையில் மதார்சாகிபு புலவர் ’யூசுபுநபி கிஸ்ஸா’வையும், அப்துல்காதர் சாகிபு ’செய்த்தூன் கிஸ்ஸா’ வையும் பாடியுள்ளனர்.

மசலா என்பது கேள்விகள் அல்லது பிரச்சினை என்று பொருள்படும்.

மசலா இலக்கியத்தை, பரிமளப் புலவர் ஆயிரம் மசலா என்ற நூலாகவும் செய்து அப்துல் காதிறு லெப்பை வெள்ளாட்டி மசலா என்ற நூலையும் பாடியுள்ளனர். நூறு மசலாவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கதை, நூல், வரலாறு எனப் பொருள்படும் நாமா என்ற இலக்கியத்தை மிஃராஜ் நாமா என்ற நூலாக மதாறு சாகிபு புலவரும், நூறு நாமாவை செய்யதகம்மது மரைக்காயரும் பாடியுள்ளனர். நாமா என்பது பாரசீக இலக்கிய வகையாகும்.

• தமிழ் நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்

பாமரரும் படித்து இன்புறும் வகையில் இனிய எளிய சொற்களைக் கொண்டு, தமிழரிடையே காலம் காலமாக வழங்கி வருகின்ற நாட்டுப்புறப் பாடல் மரபையும் கொண்டு இசுலாமியப் புலவர்கள் இலக்கியம் இயற்றியுள்ளனர். ஏசல், சிந்து, கும்மி, தாலாட்டு, கீர்த்தனை, தெம்மாங்கு, ஊஞ்சல் பாட்டு, தோழிப் பெண்பாட்டு எனப் பலவகைகளில் அவர்கள் இலக்கியம் படைத்தனர்.

காதல் பற்றியும் சமயம் பற்றியும் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற சிறுபகுதி அமையும். அதைப் பின்பற்றிச் சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாய் நபிகள் நாயகம் பேரில் ஏசல் கண்ணிகள், முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய்-மகள் ஏசல் என்பன இயற்றப் பெற்றன.

காவடிச் சிந்து மெட்டமைப்பில் நவநீத ரத்னாலங்காரச் சிந்து, பூவடிச் சிந்து என்பன பாடப் பெற்றன.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி, செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி, திருக்காரண சிங்காரக் கும்மி என்பன கும்மி அமைப்பில் பாடப் பெற்றன.

அசலானிப் புலவர், ஞானத் தாலாட்டு, சுகானந்தத் தாலாட்டு, மணிமந்திரத் தாலாட்டு, மீறான் தாலாட்டு, பாலகர் தாலாட்டு என்பனவற்றை இயற்றியுள்ளார்.

சீறாக் கீர்த்தனை, ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை என்ற இரண்டு கீர்த்தனை நூல்களும் மென்னான ஆனந்தக் களிப்பு என்ற நூலும் இந்த நூற்றாண்டில் இயற்றப் பெற்றன.

• ஒழுக்க நூல்

மனிதர்களின் ஒழுக்கம், பின்பற்ற வேண்டியவை, செய்ய வேண்டிய கடமைகள், சான்றோரால் விலக்கப் பெற்றவை முதலியவற்றை விளக்கும் நூல்களே ஒழுக்க நூல்களாகும். அவ்வகையில ஆசாரக் கோவை என்ற நூலை அப்துல் மஜூதும் திருநெறி நீதம் என்ற நூலை பீர்முகம்மது சாகிபுவும் பாடியுள்ளனர்.

3.7.2 கிறித்தவத் தமிழ் இலக்கியம்

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி, நம் நாட்டில் தமது சமயத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியரும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். தமிழ் மொழியை முறையாகக் கற்ற அவர்களுள் ஏறத்தாழ 30 பேர் தமிழுக்கு இலக்கியத் தொண்டும் புரிந்துள்ளனர் என்கிறார் மது.ச. விமலானந்தம். அவர்களுள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் மூன்று பேராவர்.

• இரேனியஸ்

தமிழில் தேர்ந்த அறிஞர் என்று போப் ஐயரால் பாராட்டப் பெற்ற இரேனியஸ் ஜெர்மன் நாட்டவர். சமயப்பணி மூலம் இந்துக்கள் பலரைக் கிறித்தவராக்கினார். பாளையங்கோட்டையில் பெண்கள் கல்லூரி ஒன்றைக் கட்டினார். புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக, A Grammar of Tamil Language என்ற நூலை எழுதினார். ஞான போசன விளக்க வினாவிடை, வேதப்பொருள், பூமி சாத்திரம், இலக்கணநூற் சுருக்கம், மோட்ச மார்க்கம், வேத உதாரணத் திரட்டு, வேத சாத்திரச் சுருக்கம், பொது அறிவு நூலான பலவகைத் திருட்டாந்தம் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

• வீரமா முனிவர்

வீரமா முனிவர் என்று தமிழ்ச் சங்கத்தாரால் பாராட்டப் பெற்ற கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலியில் பிறந்தவர். தம் முப்பதாவது வயதில் சமயம் பரப்பத் தமிழகம் வந்தார். பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, இத்தாலி, பாரசீக, ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தமிழைச் சுப்பிரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் கற்றார். தெலுங்கு, வடமொழியையும் கற்றார். தமிழர் பலரைக் கிறித்தவராக்கியதால், சைவர் இவர் மீது பகைமை கொண்டனர். பல நூல்கள் எழுதி இவரைக் கண்டித்தனர். தமது 66ஆம் வயதில் அம்பலக்காட்டில் மறைந்தார்.


வீரமா முனிவர்

இவரியற்றிய செய்யுள் நூல்கள்:

(1)திருக்காவலூர்க் கலம்பகம்
(2)கித்தேரி அம்மாள் அம்மானை
(3)அடைக்கல மாலை
(4)அடைக்கல நாயகி வெண்கலிப்பா
(5)அன்னை அழுங்கல் அந்தாதி
(6)தேவாரம்
(7)வண்ணம்
(8)தேம்பாவணி என்ற காப்பியம்

உரைநடை நூல்கள்:

(1)வேதியர் ஒழுக்கம்
(2)வேத விளக்கம்
(3)பேதகம் அறுத்தல்
(4)லூத்தோர் இனத்தியல்பு
(5)கடவூர்நாட்டு திருச்சபைக்குத் திருமுகம்
(6)திருச்சபைக்குப் பொதுத் திருமுகம்
(7)திருச்சபைக் கணிதம்

பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை ததும்பும் நூலைப் படைத்ததன் மூலம் தமிழின் அங்கத இலக்கியத்தைத் (Satire) தோற்றுவித்த பெருமையைப் பெறுகிறார். பைந்தமிழுக்கு இவர் ஆற்றிய பணிகள் பின்வருமாறு:

தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. சொற்களிடையே இடம் விட்டு எழுதுதல், நிறுத்தல் குறி, முற்றுப்புள்ளி என்பவற்றை அறிமுகம் செய்தது.

‘லூத்தோர் இனத்தியல்பு’ என்ற நூலில் முதன்முதலாகப் பொருளடைவை இடம் பெறச் செய்தது.

குட்டித் தொல்காப்பியம் எனப் புகழப் பெறும் தொன்னூல் விளக்கமும், கொடுந்தமிழ் இலக்கணமும் இயற்றியது.

திருக்குறளின் முதலிரு பால்களை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தது.

விவிலிய போதனை, ஆராதனை இரண்டும் தமிழில் நடத்தியது.

பெயர், பொருள், தொகை, தொடை என்ற 4 பகுதியாகத் தமிழில் அமைந்த சதுர் அகராதி, தமிழ் - லத்தீன் அகராதி, போர்ச்சுகீசியம் - தமிழ்- லத்தீன் அகராதி இயற்றியது.

இதனாலேயே இவர் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுகிறார். தமிழில் அமைந்த நல்ல நீதிகளைத் தொகுத்து, தமிழ்ச் செய்யுள் தொகை என்ற தொகுப்பு நூலை வெளியிட்டது.

காப்பியம் இலக்கியம், இலக்கணம் போன்ற பதினைந்து துறைகளில் பைந்தமிழை இவர் சிறக்கச் செய்து உள்ளார் எனப் போற்றுகிறார் மது.ச.விமலானந்தம்.