3.8 பல்துறை நூல்கள்

மொழிபெயர்ப்பு நூல்களும் சிற்றிலக்கியங்களும் பல்கிப் பெருகிய இந்த நூற்றாண்டில் அரிய செய்திகளை உடைய பல்துறை நூல்களும் தோன்றின.

3.8.1 தாயுமானவர் பாடல்கள்


தாயுமானவர்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1706-1744) திகழ்ந்த பெரியார் தாயுமான சுவாமிகள். திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே கேடிலியப்பப் பிள்ளையின் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார். திரிசிரபுரத்தில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்கராகத் தந்தை பணி புரிய, வட மொழி, தென்மொழி இரண்டுங் கற்ற இவர் மௌன குரு என்பாரிடம் அறிவுரை பெற்றார். தந்தையார் இறந்தவுடன் அரசு வேலையிலமர்ந்தார்; நாயக்கர் இறந்த பின் அரசி மீனாட்சி தன்பாற் காட்டிய முறையற்ற அன்பு காரணமாக ஒரு நாளிரவு ஊரை விட்டோடினார். இராமநாதபுரத்தில் தன் தமையனோடு இருந்தார். அவர் கட்டாயப்படுத்தியதால் மட்டுவார்குழலி என்ற பெண்ணை மணந்தார். கனகசபாபதி எனும் ஆண்குழந்தை ஈன்ற மனைவி மறையவே யோகஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார். சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டவர். ‘உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர்’ என பேராசிரியர் மு.வரதராசனார் இவரைப் பாராட்டுகிறார். இவரது பாடல்கள் தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுகின்றன.

ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். கண்ணி என்றழைக்கப்படும் இரண்டடிப் பாடல் வகையை இவர் கையாள்கிறார். இவரது பாடல்கள் அனைத்தும் தாயுமானவர் பாடல்கள் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. “சும்மா இருக்க அருளாய்” என்று இறைவனிடம் வேண்டுபவர்,

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
                         (பராபரக்கண்ணி - 221)

என்று பாடுகிறார்.

தான் செய்யும் இறைவழிபாட்டை,

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                         (பராபரக்கண்ணி -151)

என்று கூறுகிறார். ஆனந்தக் களிப்பு, பைங்கிளிக் கண்ணி, ஆகாரபுவனம் என்பன கண்ணி வடிவில் அமைந்தவை. மொத்தம் 1452 பாக்களை 56 பிரிவுகளில் இவர் பாடியுள்ளார்.

பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்
            பொய்யெனவே
மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே
       காண்பேனா - காண்
                (காண்பேனா கண்ணி - 6)

என்று ஏங்கிய இவர் 1659-இல் இராமநாதபுரத்தில் உள்ள முகவையில் நித்திய சமாதியடைந்தார்.

3.8.2 பிற படைப்புகள்

அச்சான தமிழ் நூல்களின் வகைதொகைப் பட்டியல் என்ற நூலை ஆங்கிலத்தில் ஜான்மர்டாக் (1865) எழுதி வெளியிட்டார்.

அரபுத் தமிழ் அகராதி குலாம் காதிறு நாவலரால் வெளியிடப் பெற்றது.

அரும்பொருள் விளக்க நிகண்டு, உசித சூடாமணி நிகண்டு, பொதிகை நிகண்டு, பொருட்டொகை நிகண்டு, ஒளவை நிகண்டு என்பன இந்நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றுள்ளன.

பிரபந்த மரபியல் என்னும் பாட்டியல் நூல் இக்காலப் பகுதியில் தோன்றியது. பிரபந்தங்கள் தொண்ணூற்று எனக் கூறும் முதல் பாட்டியல் நூல் இதுவே ஆகும். ஆயினும் இதில் 72 இலக்கிய வகைகளுக்கு மட்டுமே இலக்கணம் உள்ளது. இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.