4.2 சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்

கல்வியிற் சிறந்த பெரியோர் பலர் தமது புலமையை வெளிக்காட்ட இந்த நூற்றாண்டில் பல சிற்றிலக்கியங்களைப் படைத்தனர். அவற்றை இனிக் காண்போம்.

4.2.1 அழகிய சொக்கநாதப்பிள்ளை

சிலேடை பாடுவதில் வல்ல அழகிய சொக்கநாதப்பிள்ளை திருநெல்வேலியைச் சார்ந்த தச்ச நல்லூரில் பிறந்தவர். தம்மை ஆதரித்து வந்த முத்துச்சாமிப் பிள்ளை என்பவர் மீது ஒரு காதல் பிரபந்தம் பாடியுள்ளார். 1885ல் மறைந்த இவர், அனவரதநாதர் பதிகம், காந்தியம்மை பதிகம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழ்க் கலித்துறையந்தாதி, சங்கரநயினார் கோயில் அந்தாதி, சிங்காரப் பதம், நெல்லை நாயகமாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதையந்தாதி என்ற நூல்களைப் படைத்துள்ளார்.

கல்லா லடியுறலாற் கண்மூன் றிருப்பதனால்
எல்லோரும் பூசைக் கெடுத்திடலால் - வல்லோடு
கொள்ளுகையாற் கங்கா குலமுத்துச் சாமிமன்னா
கள்ளிதழி யானிகர்தேங் காய்

என்ற பாடலில் சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் சிலேடை கூறுகிறார். கல்லால் அடிபடல், முக்கண் இருத்தல், பூசைக்குரியதாதல், வன்மையான ஓட்டைப் பெற்றிருத்தல் ஆகிய காரணங்களால் சிவனும் தேங்காயும் ஒன்று என்கிறார் பிள்ளை.

4.2.2 இராமச்சந்திரக் கவிராயர்

தொண்டை மண்டலத்தில் இராசு நல்லூர் என்னும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்தவர். எல்லிஸ் துரையால் புகழ்ந்து பாடப் பெற்றவர். சதபங்கி, நவபங்கி எனப்படும் சித்திரக் கவிகள் பாடுவதில் வல்லவர். இவர் சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் சண்டை நாடகம், இரணியவாசகப்பா முதலிய நாடகச் சார்பான நூல்களை இயற்றி உள்ளார். துன்பங்கள் பலவும் ஒருங்கு சேர்ந்து ஒருவனை வருத்தும் இயல்பை ஒரு தனிப்பாடலில் பின்வருமாறு குறித்துள்ளார்:

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
     அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
     தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
     குருக்களோ தட்சணைகள் கொடுவென்றாரே

பசு ஈனுதல், மழை பொழிந்ததால் வீடு இடிந்து விழுதல், மனைவி உடல் நலமின்மை, அடிமை இறப்பு, கடன்காரர் மறிப்பு, விருந்து வரல், பாம்பு தீண்டல், அரசன் வரி கேட்டல், குருக்கள் தட்சணை கேட்டல் எனத் துன்பங்கள் அடுத்தடுத்து வந்தால் ஒருவன் என்ன செய்வான்? பாவம்!

4.2.3 மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

பழனியில் கம்மியர் குலத்தில் பிறந்தவர். மூன்று வயதிலேயே அம்மை நோயால் தன் கண்பார்வையை இழந்தவர். நூல்களைப் பிறர் படிக்கக் கேட்டு உணர்ந்தார். முத்துராமலிங்க சேதுபதியிடம் கவிச்சிங்க நாவலர் என்ற பட்டம் பெற்றவர். அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார். சிலேடை பாடுவதில் வல்லவர். ஏகசந்தக் கிரஹி, (ஒரு தடவை கேட்டாலே மனப்பாடம் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர்) வள்ளல்களும் ஜமீன்தார்களும் புரக்க வாழ்ந்தவர். நிரோட்டகம் பாடுவதிலும் வல்ல இவர், தேவாங்கு புராணம், பழநித் திருவாயிரம் என்ற நூல்களும் சில சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். அவை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்று வெளியாகி உள்ளன.

4.2.4 மேலும் சில படைப்பாளர்கள்

மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு பிற படைப்பாளர்களும், தம் படைப்புகளால் சிற்றிலக்கியத்தை வளப்படுத்தினார்கள்.

• தொழுவூர் வேலாயுத முதலியார்

வள்ளலாரின் வரலாற்றை எழுதி அருட்பாவை வெளியிட்டவர். உபய கலாநிதிப் பெரும்புலவர் என்ற பட்டம் பெற்றவர். திருத்தணிகை இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலம்பகம், நெஞ்சாற்றுப்படை என 24 நூல்களைப் பாடியுள்ளார். பெரியபுராணம், மார்க்கண்டேய புராணம் என்பவற்றை உரைநடையில் எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார்.

• பூண்டி அரங்கநாத முதலியார்

கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தாலும் தமிழும் ஆங்கிலமும் வல்லவர். ஏக சந்தக் கிரஹி. இவரது கச்சிக் கலம்பகம் புகழ் பெற்றது. பல தனிப்பாடல்கள் பாடி உள்ளார்.

• சரவணப் பெருமாள் கவிராயர்

முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவரான இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். நகைச்சுவை நயம் விளங்கக் கற்பனையோடு தனிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். பணம்விடுதூது, அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுக விலாசம் என்பவற்றைப் பாடியுள்ளார். அட்டாவதானம் செய்தவர், “வசைமொழிகளைத் தொகுத்து உரைப்பதில் வல்ல இவர் தமது செருக்கு தோன்றப் பாடுவதிலும் வல்லவர்” என்று இவரைக் கா.சு. பிள்ளை குறிப்பிடுகிறார்.

• இராமானுசக் கவிராயர்

பார்த்தசாரதி மாலை, திருவேங்கட அநுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய சிறு காப்பியங்களை இவர் இயற்றியுள்ளார். சில வள்ளல்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆத்ம போதப்பிரகாசிகை என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரால் எழுதப்பட்ட இலக்கணச் சுருக்கம் ஒன்று உண்டு. திருக்குறள், நறுந்தொகை, நன்னூல், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நூல்களுக்குக் காண்டிகையுரை வகுத்து உள்ளார். இவருடைய மாணவரான வேதகிரி முதலியார் மநுநீதி சதகம், நீதிசிந்தாமணி என்ற நீதி நூல்களை எழுதி உள்ளார்.

• வீரராகவ முதலியார்

பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்த இவர், திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை, திருவேங்கட முடையான் பஞ்சரத்தினம், வரதராசர் பஞ்சரத்தினம், பெருந்தேவித்தாயார் பஞ்சரத்தினம் முதலிய நூல்களை இயற்றினார்.

• பிச்சை இபுராகீம் புலவர்

இலக்கணக் கோடரி என்று புகழ் பெற்ற பிச்சை இபுராகீம் புலவர் ஆதமலை திருப்புகழ், சீதக்காதி பதிகம், நாகூர் பிள்ளைத்தமிழ், நாயகத் திருப்புகழ், மொகிதீன் ஆண்டவர் மாலை என 14 நூல்களை இயற்றியுள்ளார்.

• புரசை சபாபதி முதலியார்

சந்தப்பாக்களும் வண்ணமும் பாடுவதில் வல்லவர். திருப்போரூர்ப் புராணம், திருப்போரூர்க் குறவஞ்சி, திருப்போரூர்க் கலம்பகம், வெண்பா மாலை, நான்மணிமாலை போன்ற 33 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

4.2.5 பல்துறை நூல்கள்

ஆறுமுக நாவலரின் தந்தையான கந்தப்பிள்ளை என்பவர் இராமவிலாசம், சந்திர காசம் என்ற இசைநாடகங்களை இயற்றினார். தஞ்சை அனந்தபாரதி அய்யங்கார் என்பவர், உத்தர ராமாயண கீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானை மேலழகர் நொண்டிச் சிந்து என்ற இசை நாடக நூல்களை இயற்றி உள்ளார். புரசைவாக்கம் பரசுராம கவிராயர் என்பவர் சிறுத்தொண்டர் விலாசம் என்ற நூலை இயற்றினார். இக்கால கட்டத்தில் தான் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் இன்னிசைக் காவடிச் சிந்துகளைப் பாடினார்.

சந்திரசேகர கவிராச பண்டிதர் என்பவர் முதன்முதலில் தனிப்பாடல்களை எல்லாம் தொகுத்துத் தனிப்பாடல் திரட்டு என்று வெளியிட்டார். இதுவே முதல் தனிப்பாடல் திரட்டு.

பூண்டி அரங்கநாத முதலியார் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தார்.

அமிர்தம் பிள்ளை என்பவர் வெண்பாவில் அமைந்த பெண்மை நெறி விளக்கம் என்ற நூலைப் பாடினார்.

சேலம் ராமசாமி முதலியார் சென்னையில் இருந்து Law Journal என்ற ஏட்டினை நடத்தினார். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசம் என்ற நூலை இயற்றினார்.

மேகதூதம், பகவத்கீதை, இதோபதேசம், சாந்தோக்கிய உபநிடதம் என்பவை யாழ்ப்பாண நாகநாத பண்டிதரால் மொழிபெயர்க்கப்பட்டன. எட்டயபுரம் மீனாட்சி சுந்தரம் கவிராயரால் குவலயா நந்தமும் கணபதிபிள்ளை என்பவரால் பில்கணீயம் என்ற வடமொழிக் காப்பியமும் மொழிபெயர்க்கப்பட்டன.

1876இல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தாதுவருடக் கொடிய பஞ்சம் நாட்டுப்புறப் பாடல் வடிவில் பிரமனூர் மிராசுக் கணக்கு வில்லியப்பப் பிள்ளை என்பவரால் பாடப் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் முயற்சிகளில் முன்னோடிகளாக இந்நூற்றாண்டில் தோன்றிய விநோதரச மஞ்சரி, திராவிடப் பிரகாசிகை என்பவற்றைக் கூறலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆராய்ச்சி நூலை முதன் முதலில் எழுதியவர் சுந்தரம் பிள்ளை என மு.வ. கூறுகிறார்.