5.3 குழந்தை இலக்கியமும் பதிப்புகளும்
இக்காலக் கட்டத்தில் குழந்தைப் பாடல்கள் பெருமளவில்
வெளி வந்தன. உ.வே.சாமிநாதய்யர் போன்றோர்
அரும்பணியால், பல அரிய நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன.
5.3.1 குழந்தை இலக்கியம்
குழந்தை இலக்கியம் என்றாலே குழந்தைகள் மட்டும்
படிப்பதற்கு என்று எண்ணிவிடக் கூடாது. குழந்தைகள் பற்றி
எழுவதே குழந்தை இலக்கியம் ஆகாது. குழந்தைகள்
படிப்பதற்கு ஏற்றன படைப்பதே குழந்தை இலக்கியமாகும்.
இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று; பொறுமை,
பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை.
இந்தக் குழந்தை இலக்கியமும் கூடப் பெரியோர் இலக்கியம்
போல, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம்,
துணுக்குகள் என்பவற்றைக் கொண்டது. குழந்தை இலக்கியம்
தனக்கெனச் சிறப்பாகக் கொண்டுள்ளவையாகப் படக்கதை,
புதிர்கள் என்பவற்றைக் கூறலாம்.
1901இல் குழந்தைப் பாடல்கள் பாடினார் கவிமணி. 1915ல்
பாப்பா பாட்டு பாடினார் பாரதி. இவர்கள் குழந்தை இலக்கியம்
என்ற நோக்கோடு பாடவில்லை எனினும் குழந்தை
இலக்கியத்தைத் தொடங்கி வைத்தார்கள். இதற்குப் பின்
கா.நமச்சிவாய முதலியாரும் மணி திருநாவுக்கரசு முதலியாரும்
மயிலை.முத்துகுமார சுவாமியும் குழந்தைகளுக்காகக் கதைகளும்
பாடல்களும் எழுதிப் பாடப் புத்தகங்களில் சேர்த்தார்கள்.
அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிப் பலர் இன்று வரையில்
தொண்டு செய்து வருகிறார்கள்.
• அழ.வள்ளியப்பா
13ஆவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர்,
ஏறக்குறைய 60 நூல்கள் படைத்துள்ளார். குழந்தை எழுத்தாளர்
சங்கம் நிறுவியது இவரது பெருஞ்சாதனை. இவரது முதல் நூல்
மலரும் உள்ளம். பாட்டிலே காந்தி, பாப்பாவுக்குப் பாட்டு,
பெரியோர் வாழ்விலே, நல்ல நண்பர்கள் (கதை),
சின்னஞ்சிறு வயதில், பிள்ளைப்பருவத்திலே என்பன
அவரியற்றிய சில நூல்கள்.
வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதி கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதிக் காலித் தட்டு
(அழ.வள்ளியப்பா, மலரும் உள்ளம், ப.28)
• மயிலை சிவமுத்து
குழந்தை இலக்கிய முன்னோடி என்று போற்றப்படுபவர்.
முத்துப் பாடல்கள், தங்க நாணயம், நல்ல எறும்பு, நல்ல
குழந்தை, முத்துக் கதைகள், சிவஞானம், நாராயணன் முதலிய
25 நூல்கள் படைத்துச் சிறுவர் இலக்கியத்தைச் சிறக்கச்
செய்தார். நித்தில வாசகம் என முதல் ஐந்து வகுப்புகளுக்கான
பாடநூல் படைத்தார். குழந்தைகளுக்கான இதழ்
ஒன்றையும்
நடத்தி வந்தார்.
• தூரன்
சிறுவர் இலக்கியத் துறையில் பல சாதனை புரிந்தவர்.
சூரப்புலி, மாயக்கள்ளன், ஆனையும் பூனையும், பறக்கும்
மனிதன், ஓலைக்கிளி, தம்பியின் திறமை, நாட்டிய ராணி,
மஞ்சள் முட்டை, கொல்லிமலைக் குள்ளன், கடக்கிப்பட்டி
முடக்கிப்பட்டி எனப் பல நூல்கள் படைத்துள்ளார்.
இவர்களைத்
தொடர்ந்து தம்பி சீனிவாசன்,
நெ.சி.தெய்வசிகாமணி, பூவண்ணன் முதலியவர்களும்
இத்துறையில் பங்கேற்று உள்ளனர். குழந்தைகளின் நன்மை
கருதிப் பாடப் பெறும் அழகிய பாடல்களைச் சில சமயம்
குழந்தை இலக்கியத்தில் சேர்க்க இயலவில்லை. உதாரணமாக
அவ்வையாரைப் பின்பற்றிப் பாரதியார் எழுதிய புதிய
ஆத்திச்சூடியைக் கூறலாம். வியப்பான, எளிய உணர்ச்சிகளை
இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில்
பாடினாலே குழந்தை இலக்கியம் சிறக்கும்.
5.3.2 பதிப்புகள்
தம் பதிப்புப் பணிகளால், மறைந்தும் அழிந்தும் போகக்
கூடிய நிலையிலிருந்த பல நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்
இலக்கியங்களுக்குப் பாதுகாப்பு அளித்தவர் உ.வே.சாமிநாதையர்
அவர்கள்.
• உ.வே. சாமிநாதையர்
இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறையில் மிக முக்கிய
இடம் வகிப்பவர் உ.வே.சாமிநாதையர். தமிழ்த் தாத்தா என்று
போற்றப் பெறுபவர். சேலம் இராமசாமி முதலியார் என்பவரே
இவரைப் பதிப்புப் பணியில் ஊக்குவித்தவர். 1906இல்
மஹாமஹோபாத்தியாய என்ற பட்டத்தை ஆங்கில அரசு
இவருக்கு வழங்கியது

இவர் 1878இல் முதன்முதலில் பதிப்பித்த நூல்
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்பது. தம்முடைய 60
ஆண்டுக்காலப் பணியில் 87 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
அவையாவன:
(1) | பத்துப்பாட்டு |
| (2) | எட்டுத்தொகையில் 5 |
| (3) | காப்பியங்கள் 5 |
| (4) | புராணங்கள் 15 |
| (5) | பரணி 2 |
| (6) | அந்தாதி 3 |
| (7) | உலா 10 |
| (8) | தூது 6 |
| (9) | குறவஞ்சி 2 |
| (10) | பிற பிரபந்தங்கள் 9 |
| (11) |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
தியாகராஜ செட்டியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
குமரகுரபரர் ஆகியோரின்
பிரபந்தத் திரட்டு 4 |
| (12) | இலக்கணம் 3
|
இவருடைய பதிப்பு முன்னுரைகளைப் படித்தாலே புலமை
பெற்று விடலாம். இறுதியில் தரும் சொல்லடைவு, பொருளடைவு
என்பன ஆராய்ச்சியாளர்களின் மூலங்கள் எனலாம். தவிர
பல்வகை நூல்கள் 21 எழுதியுள்ளார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1 |
‘தமிழ் உரைநடை வரலாறு’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
|
விடை |
2 |
தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று போற்றப்படுவர் யார்?
|
விடை |
3 |
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் எனப்படுபவர் யார்?
|
விடை |
4 |
தெ.பொ.மீ அவர்கள் இந்திய அரசால் பெற்ற விருது எது?
|
விடை |
5 |
சங்க இலக்கியத் திறனாய்வு என்றவுடன் நும் நினைவிற்கு வரும் இருவர் பெயரைக் குறிப்பிடுக.
|
விடை |
6 |
இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தர் யார்?
|
விடை |
|
|