5.4 இசைத் தமிழும் நாடகமும்
இசைத் தமிழ், ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை
செட்டியார், முத்தையா செட்டியார் போன்றோரால் மேம்பாடு
அடைந்தது. அதைப் போல சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்
சம்பந்த முதலியார், பாரதிதாசன் முதலியோரால் மேடை
நாடகங்களும் இலக்கிய நாடகங்களும் மிகுதியாக வளர்ந்தன.
5.4.1 இசைத் தமிழ்
மொழிக்கு முன்னே தோன்றியது இசை. இசையில் இருந்தே
மொழி எழுந்தது. எனவே மொழிக்குத் தாயாகத் திகழ்வது
இசையே என்பர். இறைவனையே, ‘ஏழிசையாய் இசைப்பயனாய்
இருப்பவனே’ என்றும், ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’
என்றும் போற்றுவர். வாழ்விலே இசையையும் இசையிலே
வாழ்வையையும் கண்டவர்கள் தமிழர்கள். இசைத் தமிழுக்கு
அடிப்படையான முதற்கருவியான குழல் துளைக்கருவி. குழலில்
இல்லாத வாய்ப்புக்களை எல்லாம் காட்ட அடுத்துத்
தோன்றியது யாழ். இது நரம்புக் கருவி. இவ்விரண்டிலும்
வேறுபட்டு ஐந்திணைக்கும் உரியதாகத் தோன்றியது முழவு. இது
தோல் கருவி. தமிழரின் இசையறிவு இம்மூன்று கருவிகளால்
புலனாகும்.
இருபதாம் நூற்றாண்டில் முப்பெரும் பெரியார்கள்
தமிழிசைக்குப் பெருந்தொண்டாற்றி உள்ளனர். தம்
படைப்புகளால் தமிழிசையை உயிர்ப்பித்தவர்கள் ஆபிரகாம்
பண்டிதரும் விபுலானந்தரும். பணியால் உயிர் ஊட்டியவர்
செட்டி நாட்டரசர். தமிழிசை இயக்கம் என்ற ஓர்
இயக்கத்தையே துவங்கித் தமிழிசைக்கு மறுவாழ்வு தந்தார்.
பாரதியார், பாரதிதாசனார், கவிமணி என்ற மூன்று கவிஞர்கள்
எளிய, இனிய இசைப் பாக்களைப் பாடித் தந்தனர். இலக்குமண
பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதியார், தூரன், சரவண
பவானந்தர், சுத்த சத்துவானந்தர், பாபநாசம் சிவன் ஆகியோர்
இசைத்தமிழுக்குக் குறிப்பிடத்தக்கத் தொண்டாற்றி உள்ளனர்.
• ஆபிரகாம் பண்டிதர்
கருணாமிர்த சாகரம் என்ற இரு பகுதிகள் கொண்ட
நூலைத் தந்ததன் மூலம் தமிழிசைக்கு உயிர் ஊட்டியவர்
ஆபிரகாம் பண்டிதர். 1346 பக்கங்கள் கொண்ட முதல்பகுதி
கருணானந்தர் பொற்கடகம் எனப்படுகிறது. இரண்டாம் பகுதி
ராகங்கள், பண்கள் என்பவற்றை விளக்குகிறது. ஆபிரகாம்
பண்டிதரின் மகனான வரகுண பாண்டியனார், ‘பண்டைக்
காலத்தில் வழங்கிய செங்கோட்டி யாழே, தற்காலத்தில்
வீணையாக வழங்குகிறது’ என்பதைப் பாணர் கைவழி என்ற
நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார். பண்டிதரின் மருமகனான
தனபாண்டியன் என்பவர் புதிய ராகங்கள் என்ற இசை நூலை
அளித்துள்ளார்.
சிறந்த மருத்துவரான ஆபிரகாம்
பண்டிதர் தமிழில் 103 பண்களும், 11,000க்கும் மேற்பட்ட ராகங்களும்
இருந்ததை உணர்த்தினார். தாமே புதியதொரு யாழ் செய்து, அதில் தமிழ்ப்
பண்களை இசைத்துக் காட்டினார். எட்டு இசை மாநாடுகள் நடத்தி உள்ளார்.
• அண்ணாமலை செட்டியார்

தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர்.
இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள்
மட்டுமே இடம் பெறவேண்டும் என வலியுறுத்துவதே தமிழிசை
இயக்கம்.
தமிழிசைச் சங்கம் செயல்பட
அக்காலத்தில் பொருள் வழங்கியவர்.
இதனால் 1943இல் இசைக் கல்லூரி
எழுந்தது. ஆண்டுதோறும் தமிழிசை மாநாடு
நடத்தப்படுகிறது.
பண்ணாராய்ச்சி நடைபெறுகிறது. இராஜா சர். அண்ணாமலை செட்டியார்
தோற்றுவித்ததே அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
• முத்தையா செட்டியார்
அண்ணாமலை செட்டியாரின் புதல்வரே
முத்தையா செட்டியார். செட்டி நாட்டரசர்
என்று போற்றப் பெற்றவர். மதுரையில் தமிழ்
இசை மன்றம் இவர் முயற்சியால் கட்டி
முடிக்கப் பெற்று இயங்கி வருகிறது.
தமிழிசைக் காவலர் என்று பாராட்டும்
பெற்றவர்.

தமிழிசை இயக்கத்தின் எண்ணத்தை நிறைவேற்றத்
தமிழ்ப்
பாடல்கள் தேவைப்பட்டன. தேவாரம், திருவாசகம், திவ்வியப்
பிரபந்தப் பாடல்கள் இதற்கு உதவின. புதியன தேவை என்ற
போது பல அறிஞர்கள் தமிழ்ப் பாடல்களை இயற்றினர்.
அவை இசை நிகழ்ச்சிகளில் பாடப் பெற்றன.
5.4.2 நாடகம்
இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவாய்
அமைந்தது தமிழ். பண்டைத் தமிழ் நூல்களில் நாடகம் கூத்து
எனக் குறிக்கப் பெற்றது. 18ஆம் நூற்றாண்டில் வடநாட்டில்
இருந்து வந்த மராத்தி, பார்சி நாடகக் கம்பெனிகளால் தமிழில்
நாடகக் கலையானது மலர்ச்சி பெற்றது. முதன் முதலில்
மேடையில் சமூக நாடகங்கள் நடிக்கப் பெற்றன. பாட்டு,
புராணக்கதை, சாதி, விடுதலை என்ற பல்வேறு அம்சங்களால்
சிறப்புப் பெற்ற நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டில்
தோன்றின. என்றாலும் நாடக நடிகர்கள் மக்கள் மத்தியில்
இழிவாகவே மதிக்கப் பெற்றனர். அக்குறையைப் போக்கி, தமிழ்
நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
• சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் நாடக மேதை, தமிழ்
நாடக உலகின் தந்தை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்றெல்லாம் போற்றப்
பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 1918இல் தத்துவ மீனலோசனி
வித்துவ பாலசபா என்ற அமைப்பைத் தோற்றுவித்து நாடகக் கலையைக்
கற்றுக் கொடுத்தார். அபிமன்யு சுந்தரி, கோவலன், சிறுத்தொண்டர்
முதலான 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியவர். நீதி போதனைகளைத்
தம் நாடகத்தில் பெரும்பான்மையாய் அமைப்பார். ஒரே இரவில் நான்கு மணிநேரம்
நடைபெறக் கூடிய நாடகத்தை எழுதித் தந்தவர். தமிழ் மேடை நாடகங்கள்
நசியாமல் காத்ததில் பெரும்பங்கு வகித்தவர் சுவாமிகள்.
• உடுமலை முத்துசாமிக் கவிராயர்
தஞ்சை ஜகன்மோகன நாடகக்குழு ஆசிரியரான
உடுமலை முத்துசாமிக் கவிராயர் விபீஷண சரணாகதி, போஜ
ராஜன், பீஷ்மர் சபதம், ஞானசவுந்தரி, தயாநிதி,
மகாலோபி, கண்ணாயிரம், இலங்காதகனம் என்ற
நாடகங்களை எழுதினார்.
• பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல்
சம்பந்த முதலியார்
ஆங்கில அரசால் ராவ்
பகதூர் பட்டம்
பெற்ற பம்மல் சம்பந்த முதலியார் சுகுண
விலாச சபை என்ற அமெச்சூர் நாடக
மன்றம் நிறுவி நடிப்புக் கலையை
வளர்த்தார். தொடக்கத்தில் பிறமொழி
நாடகங்களைத் தழுவியே நாடகம் படைத்தார்.
மொத்தம் 94 நாடகங்களைப்
படைத்துள்ளார். அவற்றுள் புகழ் பெற்றவை
சபாபதி, மனோகரா, இரு நண்பர்கள்
முதலியன. சங்கரதாஸ் சுவாமிகட்கு
அடுத்தபடியாக நாடகக் கலைக்கு உயர்வும்
மதிப்பும் தேடித் தந்தவர் இவரே.
கூத்தாடிகளைக் கலைஞர்கள்
என்று மக்கள் மதித்தது இவர்
செய்த புதுமைப் புரட்சிகளால் தான். நாடக மேடை
நினைவுகள் (6 பகுதிகள்) நான் கண்ட நாடகக்
கலைஞர்கள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது
எப்படி?, நாடகத் தமிழ், நடிப்புக் கலை என்ற நூல்களும்
எழுதியுள்ளார். தமிழில் அமைந்த முதல் உரைநடை நாடகமான
லீலாவதி சுலோசனாவைப் படைத்தும், நாடகத்தில் துன்பியல்
முடிவுகளை அமைத்தும் சாதனை படைத்தவர்.
• மோசூர் கந்தசாமி முதலியார்
வாழ்நாள் முழுவதும் நாடகப்
பயிற்றுநராகவே விளங்கி மறைந்த ‘தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை’
என்று போற்றப் பெறும் மோசூர் கந்தசாமி முதலியார் சந்திரமோகனா, பக்த
துளசிதாஸ், மாயாமச்சேந்திரா போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இவர் மகனே திரைப்பட நடிகர் எம்.கே.ராதா.
• தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
1922இல் பால மனோகர
நாடக சபாவை அமைத்தவர் தெ.பொ.கிருஷ்ண சாமிப் பாவலர். அரிச்சந்திரன்,
கோவலன், வள்ளித் திருமணம், தேசிங்கு ராஜன், ராஜா பர்த்ருஹரி போன்ற
நாடகங்களால் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர். இங்கிலாந்து சென்று
தமிழ் நாடகம் நடத்தி ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பாராட்டும் பெற்றார்.
பிற்காலத்தில் நாட்டு விடுதலையுணர்வு உணர்த்தும் நாடகங்கள் நடத்தினார்.
• பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர் என்று
போற்றப் பெறும் பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன், சௌமியன்,
குலத்தில் குரங்கு, படித்த பெண்கள் கழைக் கூத்தியின் காதல், சேரதாண்டவம்,
பிசிராந்தையார் என்ற 7 பெரு நாடகங்களும் பொறுமை கடலினும்
பெரிது, இன்பக்கடல், நல்ல தீர்ப்பு என நான்கு சிறுநாடகங்களும்
வீரத்தாய், சத்திமுத்தப்புலவர், ஒன்பது சுவை, நல்லமுத்துக் கதை
என நான்கு கவிதை நாடகங்களும் அமைதி என்ற மௌன (mime) நாடகத்தையும்
படைத்துள்ளார்.
• அரு.இராமநாதன்
அரு. இராமநாதன் இராஜராஜசோழன், வானவில்,
சக்ரவர்த்தி அசோகன் என்ற 3 புகழ் பெற்ற நாடகங்களை
எழுதினார்.
• டி.கே.எஸ்.சகோதரர்கள்
டி.கே.எஸ். சகோதரர்கள் நால்வரும் பால சண்முகாநந்த
சபா என்ற அமைப்பைத் தோற்றுவித்து நாடகக் கலைக்குத்
தொண்டாற்றியவர்கள். நாடகப் போட்டி, நாடக வளர்ச்சிக்கென
மாநாடு, தமிழிசைப் பிரசாரம், தனியார்க்கு நிதி திரட்டித்
தந்தது, நூல் வடிவில் நாடகங்களை வெளியிட்டது எனப்
புதுமை பல செய்த சபா 56 நாடகங்களை அரங்கேற்றியது. சபா
மூடப்படும் 3ஆண்டுகட்குமுன்பே அறிவிப்பு செய்து மூடுவிழா
நிகழ்த்தியது. இந்நாடகக்கலை சுதந்திரப் போராட்டக் காலத்தில்
மேலும் வீறு பெற்றது. மக்களைத் தூண்டும் மகத்தான சக்தியாக
மாறியது.
|