5.6 பயண இலக்கியமும் கடித இலக்கியமும்
வாழும் இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு ஏதாவது காரணம் பற்றிச் செல்லுதல் பயணம் ஆகும்.
பயணம் சென்ற ஒருவர், தான் சென்ற இடத்தில் பார்த்தவை, கேட்ட செய்திகள்,
அனுபவங்கள், அதன் சிறப்பியல்பு, அங்கு வாழ்வோர் போன்றவற்றைச் சுவையாக
எழுதும்போது அது பயண இலக்கியமாக மலர்கிறது. தமிழ் இலக்கியத்தில்
இதனைத் தனித்துறையாக வளர்க்க உதவியவர்கள் ஏ.கே. செட்டியாரும், சோமலெயும்
ஆவார்கள்.
ஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக்
குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம் உரிய
வடிவுடன் பொருட் செறிவாலும் கற்பனை நயத்தாலும் சிறக்கும்
போது கடித இலக்கியமாக உருப்பெறுகிறது. கடித
இலக்கியத்தை முற்றிலும் உரைநடைக்கே உரியது எனக்
கூறமுடியாது. காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் கடித
இலக்கியத்தின் தோற்றுவாய் உள்ளது. செய்யுள் உலகிலோ
சீட்டுக்கவி என அது புகழ் பெற்றது.
5.6.1 பயண இலக்கியம்
தமிழில் வழங்கும் பயண
இலக்கியங்கள் இருநிலைகளில் அமைகின்றன. மதத்திற்கு முக்கியத்துவம்
அளித்து சமயச் செய்திகள் மட்டும் பேசப்படுவது ஒருநிலை. தொழில், சமூகநோக்கு,
கல்வி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றொரு நிலை.
பயண இலக்கியங்களில் சிட்டியும் ஜானகிராமனும் இணைந்து படைத்த நடந்தாய்
வாழி காவேரி என்பது ஒரு புதுமைப்படைப்பாகும். காவிரியின் முகத்துவாரத்தில்
இருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை பயணம் செய்து, அதனிரு கரைகளிலும்
உள்ள சிறப்பான இடங்கள், வாழும் மக்களின் இயல்புகள், வழங்கும் கதைகள்
போன்றவற்றைத் தந்துள்ளனர். வா.மு. சேதுராமன் எழுதிய மலைநாட்டு
மீதினிலே என்ற நூல் காவிய வடிவம் கொண்டு பழமையை நினைவூட்டுகிறது.
மு.வ. தன் இலங்கைப் பயணக் கட்டுரையைக் கடித வடிவில் அளித்துள்ளார்.
பயண அனுபவங்கள்,
நாவல், சிறுகதை படைப்புகளுக்கும் உதவியுள்ளதற்கு சாவியின் தெப்போ
76, வாஷிங்டனில் திருமணம், ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம்,
அகிலனின் தாஷ்கண்டில் ஒரு தங்கை என்பன எடுத்துக்காட்டுகள்.
பிலோ இருதயநாத் எழுதியுள்ள நூல், பயணம் ஒரு கலை, ஆனால்... என்பது
பயணம் மேற்கொள்வோர்க்குப் பயனுள்ள குறிப்புகள் தருவது. பிரயாண இலக்கியம்
என்ற நூலை ஒரு தொகுப்பாக வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது.
குறிப்பிடத்தகுந்த பயண நூல்களும் அவற்றின்
ஆசிரியர்களும்
1 |
உ .வே.சா |
- |
திருமலைராயன் பட்டணம் |
2 |
கல்கி |
- |
கோடிக்கரை, ஐந்து நாடுகளில் அறுபது நாள் |
3 |
பாரதியார் |
- |
பாபநாசம், எங்கள் காங்கிரஸ் யாத்திரை |
4 |
எனுகுல வீராசாமி ஐயர் |
- |
காசி யாத்திரை (1832) |
5 |
பரணீதரன் |
- |
ஆலய தரிசனம், கேரள விஜயம் |
6 |
ஏ.கே.செட்டியார் |
- |
உலகம் சுற்றும் தமிழன் |
7 |
சோமலெ |
- |
அமெரிக்காவைப் பார், என் பிரயாண நினைவுகள் |
8 |
மணியன் |
- |
இதயம் பேசுகிறது |
9 |
சு.ந. சொக்கலிங்கம் |
- |
ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும் |
10 |
நெ.து. சுந்தரவடிவேலு |
- |
நான் கண்ட சோவியத் ஒன்றியம் |
11 |
சாவி |
- |
நான் கண்ட நாலு நாடுகள் |
12 |
அரு. சோமசுந்தரம் |
- |
வட இந்தியப் பயணம் |
13 |
தி.க. சண்முகம் |
- |
கலை கண்ட மலேசியா |
14 |
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான |
- |
வேங்கடம் முதல் குமரி வரை
|
|
5.6.2 கடித இலக்கியம்
மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள்,
வெ.சாமிநாத சர்மாவின் அவள் பிரிவு என்பன புனைகதை
வடிவில் மலர்ந்தவை. ரா.பி.சேதுப்பிள்ளை இலக்கியக்
கடிதங்கள் தீட்டுவதில் வல்லவர். பாரதிதாசன் பல
கடிதங்களைக் கவிதையில் படைத்துள்ளார்.
உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் எனக் கடித
இலக்கியம் இரு வகைப்படும். தமிழில் மொழிபெயர்ப்புக்
கடிதமும் காணப்படுகிறது.
• உண்மைக் கடித வடிவில் அமைந்தவை
1) கருமுத்துத் தியாகராச செட்டியார் கடிதங்கள்
2) டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்
3) ரசிகமணி கடிதங்கள்
4) மறைமலையடிகளார் கடிதங்கள்
5) பாரதியின் கடிதங்கள்
மு.வ
• புனைவுக் கடிதம் வடிவில் அமைந்தவை
1) மு.வ. - அன்னைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு,
நண்பர்க்கு
2) அண்ணாதுரை - தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள் (ஒன்பது தொகுதி)
3) கவியோகியின் கடிதங்கள், தலைவர்களுக்கு,
முக்தி நெறி, வீரத் தமிழருக்கு, இல்லற நெறி -
கட்டுரைத் தன்மையன.
• மொழிபெயர்ப்புக் கடிதங்கள்
1) செஸ்டர்பீல்டின் கடிதங்கள் (1954)
2) டால்ஸ்டாய் கடிதங்கள் (1961)
3) பிளேட்டோவின் கடிதங்கள் (1965)
4) ஜவகர்லால் நேருவின் கடிதங்கள் (1941)
5) ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் (1949)
(அடைப்புக்குள் உள்ளவை நூல் வெளியான ஆண்டுகள்)
செய்திகள் கூறல், அறிவுறுத்தல்,
சீர்திருத்த நோக்கு போன்ற பல தன்மைகள் கடித இலக்கிய இயல்பாகும்.
அங்கதம், எள்ளல், சொற்பொழிவுத் தன்மை என்பன கூடச் சில சமயம் கடித
இயல்பாகின்றன.
|