2.4 ஒலிகளின் வரி வடிவம்

தமிழில் உள்ள ஒலிகளை எழுத்து என்ற சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இச்சொல் ஒலியைக் குறிக்கிறதா? அல்லது வரி வடிவத்தைக் குறிக்கிறதா? இன்று எழுத்து என்பது வரி வடிவத்தையே பெரும்பாலும் குறிக்கிறது. எழுதப்படுவது எழுத்து எனச் சிலர் கொள்கின்றனர். ஆனால் தொல்காப்பியர் எழுப்பப்படுவது எழுத்து எனப் பொருள் கொண்டுள்ளார். எழுப்புதல் = ஒலி எழுப்புதல், உச்சரித்தல். அளபெடை பற்றிய நூற்பாவில் எமூஉதல் என அவர் குறிப்பது ஒலியை எழுப்புதல எனும் பொருள் தருவதாகும். இவ்வாறு எழுத்து என்பதை ஒலிவடிவத்தைக் குறிக்க அவர் பயன்படுத்தியிருந்தாலும் சில இடங்களில் எழுத்து என வரிவடித்தையும் குறிக்கிறார். தொல்காப்பியர் தம் காலத்து வரிவடித்தில் சில இயல்புகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

2.4.1 மெய்யொலிகளின் வரி வடிவம்

மெய்யெழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்டன.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

(தொல். எழுத்து. 15)

தொல்காப்பியர் இவ்வாறு கூறவே, அவர் காலத்துக்கு முன்பு குகைக் கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகள் புள்ளி இல்லாமல் எழுதப்பட்டன என்பதை முன்னைய பாடத்தில் பார்த்தோம். அதுவே தொல்காப்பியர் காலத்துக்கு முந்திய நிலை எனலாம்.

2.4.2 எகர ஒகரக் குறில்களின் வரி வடிவம்

உயிரெழுத்துகளில் எகரம், ஒகரம் ஆகிய குறில்கள் இரண்டும் மெய்யெழுத்துகளைப் போலப் புள்ளி இட்டு எழுதப்பட்டன. புள்ளியில்லாத வடிவங்கள் ஏகார ஓகார நெடில்களுக்கு உரியவை.

எ், ஒ் (இவை எ, ஒ எனும் குறில்கள்)

எ, ஒ (இவை ஏ, ஓ எனும் நெடில்கள்)

18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எகர ஒகரங்களில் இருந்த புள்ளியை நீ்க்கி, சிறு வடிவ மாற்றங்கள் செய்து இப்போதுள்ள வடிவங்களை உருவாக்கினார்.

2.4.3 மகர மெய்யின் வரி வடிவம்

தொல்காப்பியர் காலத்தில் பகரத்துக்கும் மகரத்துக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. ப் என மேலே புள்ளியிட்டால் பகரம் ; உள்ளேயும் புள்ளியிட்டால் மகரம் என வேறுபடுத்தப்பட்டன.

2.4.4 உயிர்மெய் வரிவடிவம்

மெய்யெழுத்துகளோடு அகர உயிர் சேரும்போது மெய்யின் புள்ளி நீங்கப் பெறும். புள்ளி நீங்கிய மெய்யின் வடிவமே அகர உயிர் சேர்ந்த உயிர்மெய்யின் வடிவமாகும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். நாம் தற்பொழுது, க் என்ற மெய்யோடு அகர உயிரைச் சேர்த்து உயிர்மெய்யாக எழுதும்போது, புள்ளி நீக்கிக் என்று எழுதுகிறோம். இதைப் போலவே தொல்காப்பியர் காலத்திலும் இவ்வடிவம் எழுதப்பட்டது.

மெய்யெழுத்துகளோடு அகரம் நீங்கிய பிற பதினோர் உயிர்களும் சேரும்போது, அம்மெய்களின் வடிவம் வெவ்வேறு வகையாகத் திரித்து எழுதப்படும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். வெவ்வேறு வகை எவையென அவர் விரித்துக் கூறவில்லை. இன்றும் உயிர்மெய் வடிவங்களில் பல்வேறு வகை வேறுபாடுகளைக் காணலாம். (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ)

2.4.5 சார்பொலிகளின் வரிவடிவம்

குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் புள்ளியுடன் எழுதப்பட்டன. சார்பெழுத்துகளைப் பற்றிக் கூறும்போது தொல்காப்பியர்,

அவைதாம்,
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன

(தொல். எழுத்ததிகாரம், நூற்பா, 2)

என்று கூறுவதால், இவை மூன்றும் அவர் காலத்தில் புள்ளியிட்டு எழுதப்பட்டன என்பதை உணரலாம். இம் மூன்றனுள், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளி இட்டும் ஆய்தம் மூன்று புள்ளி இட்டும் தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டன என்று ஞா. தேவநேயப் பாவாணர் கூறுகிறார். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை, பின்னிணைப்பு - 1, ப. 281.)