4.1 தொல்காப்பியமும் தொடரியலும்

எழுத்தினது இலக்கணத்தைச் சொல்லின் துணைகொண்டே அறிய முடியும். அதே போலச் சொல்லினது இலக்கணத்தைத் தொடர் அல்லது வாக்கியத்தின் துணை கொண்டே அறிய முடியும். சான்றாக, படி என்ற பெயர்ச்சொல், ஏறுகின்ற படி (ஏணிப்படி, மாடிப்படி), அளக்கின்ற படி என்ற இருவேறு பொருளைத் தருவது. அது என்ன பொருளில் வருகிறது என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதனை அடுத்து வரும் வினைச் சொற்களின் உதவி தேவைப்படுகிறது.

படி ஏறினான் (ஏணிப்படி, மாடிப்படி)
படி அளந்தான் (அளக்கின்ற படி)

இவை ஒவ்வொன்றும் தொடராகும். இவ்வாறு படி என்ற ஒரு பெயர்ச்சொல்லின் இருவேறு பொருள்களைத் தொடர் நிலையில்தான் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே, தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் பெயர், வினை, இடை, உரி எனும் நால்வகைச் சொற்களின் இலக்கணத்தைச் சொல்வதற்கு முன்னரே, தொடரியல் பற்றிய இலக்கணங்களைக் கூறுகிறார். சொல்லதிகாரத்தின் முதல் நான்கு இயல்களாகிய கிளவியாக்கம். வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகியவை தொடரிலக்கணம் கூறுபவையே ஆகும்.

சொல்லதிகாரத்தின் முதலாவது இயலாக அமைந்துள்ளது, கிளவியாக்கம். கிளவி - சொல் ; ஆக்கம் - சொற்களால் ஆகிய தொடர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய தெய்வச்சிலையார், கிளவி ஆக்கம் = “சொல்லினது தொடர்ச்சி”, “சொற்கள் ஒன்றோடொன்று பொருள் மலோகும் நிலைமை” என விளக்கம் தருகிறார். (தொல். சொல். 1 தெய்வச்சிலையார் உரை)

இக்கால மொழிநூல் அறிஞர்களும் கிளவியாக்கம் என்னும் இயலைத் தொடரியல் பற்றிப் பேசும் இயலாகவே கருதுகின்றனர். டாக்டர் பி. எஸ். சுப்பிரமணிய சாத்திரியார் என்பவர் “கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கியத்தில் அமையும் எழுவாய் பயனிலை ஆகியவற்றின் இயைபைப் பற்றிப் பேசுகிறது” என்று கூறுகிறார். டாக்டர் ச. அகத்தியலிங்கம் “கிளவியாக்கம் என்னும் இவ்வியலின்கண் எழுவாய் - பயனிலை பெயரடை, பெயர் போன்றவற்றில் காணப்படும் இயைபு, வாக்கியங்களில் காணப்படும் பல்வேறு சொற்களின் முறைவைப்பு, இரு வாக்கியங்கள் இணையும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல செய்திகள் காணப்படுகின்றன” என எடுத்துக் காட்டுகிறார். (திராவிட மொழிகள் 1-ப-163)

ஒரு பெயர்ச்சொல்லோடு வெவ்வேறு வேற்றுமை உருபுகள் சேர்வதால் தொடரின் பொருள் வேறுபடுகின்றது.

(எ.டு)
கண்ணாடியைப் பார்த்தான்
கண்ணாடியால் பார்த்தான்
கண்ணாடியில் பார்த்தான்

இவ்வாக்கியங்களில், ஐ, ஆல், இல் முதலிய வேற்றுமை உருபுகள் தொடர்ப் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதை உணர்கிறீர்கள். ஆனால்,

பாலோடு தேன் கலந்தான்
பாலில் தேன் கலந்தான்

என்ற தொடர்களில் ஒடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், இல் என்ற ஏழாம் வேற்றுமை உருபும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. இவ்வாறு வெவ்வேறு வேற்றுமை உருபுகள் தொடர்ப் பொருளை வெவ்வேறாக மாற்றுகின்ற காரணத்தாலும், தொடரில் தம் பொருள் இழந்து ஒரே பொருளில் வரும் காரணத்தாலும் தொடரியலில் வேற்றுமை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புலப்படும். ஆகவே, கிளவியாக்கத்தை அடுத்து அமைந்துள்ள வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகியவற்றில் தொல்காப்பியர் வேற்றுமைகளைத் தொடரியல் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்.

மேலே கூறியவற்றால், தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரம் உருபனியலோடு தொடரியலைப் பற்றியும் கூறுகிறது என்னும் கருத்து தெளிவாகும். இனி, தொல்காப்பியர் எழுவாய் - பயனிலை இயைபு, சொற்களின் வரன்முறை, தொடரில் பொருள் மயக்கம், தொடர் வகைகள் முதலியன பற்றிக் கூறும் தொடரியல் கருத்துகளைக் காண்போம்.