|  
  5.0 
 பாட முன்னுரை  
 தமிழ்மொழி வரலாற்றில் 
 தொல்காப்பியர் காலத்தை 
 அடுத்து இடம் பெறுவது சங்க காலம். 
 பாண்டிய மன்னர்களால் 
 நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கத்தில் புலவர்கள் இருந்து தமிழ் 
 ஆராய்ந்த காலம் என்பதால் இது சங்ககாலம் 
  எனப்பட்டது. 
 இது கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளைக் குறிக்கும் 
 என 
 அறிஞர்கள் கருதுகின்றனர். சங்ககாலத் தமிழின் வரலாற்றை 
 அறிவதற்குச் சங்க இலக்கியம் என்று 
 கூறப்படும் 
 எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தலைசிறந்த சான்றுகளாகத் 
 
 திகழ்கின்றன.  
            ஒரு மொழியில் காலந்தோறும் 
              படிப்படியாகவே மாற்றங்கள் 
              நிகழ்வது இயற்கை. தொல்காப்பியர் காலத்திற்கு 
              இருநூறு ஆண்டுகள் பிற்பட்டதே சங்ககாலம். எனினும் 
              சங்ககாலத்தில் வழங்கிய தமிழ், தொல்காப்பியர் காலத் 
              தமிழிலிருந்து பெரும்பாலும் வேறுபடவில்லை. “தொல்காப்பியர் 
              காலத்தமிழில் காணப்படும் இலக்கணப் போக்குகள் பல 
              சங்ககாலத் தமிழில் நிலைபெறுகின்றன. குறிப்பிடத்தக்க சில 
              மாற்றங்களைத் தவிரச் சங்ககாலத் தமிழ் முழுக்க முழுக்கத் 
              தொல்காப்பியர் காலத் தமிழே ஆகும்” என்று  
              டாக்டர் 
              தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் குறிப்பிடுவது 
              இங்கே 
              கருதத்தக்கது.  
 இப்பாடத்தில் 
 தொல்காப்பியர் காலத் தமிழ்மொழியின் 
 ஒலியனியல், உருபனியல் ஆகியவை குறித்த இலக்கணங்கள் 
 
 சங்ககாலத் தமிழில் எந்த 
 அளவு நிலைபெற்றுக் 
 காணப்படுகின்றன என்பது பற்றியும், 
 எந்த அளவு 
 வழக்கொழிந்து போயின அல்லது செல்வாக்கு இழந்து போயின 
 என்பது பற்றியும் காணலாம். மேலும் தொல்காப்பியர் காலத் 
 
 தமிழிலிருந்து சங்ககாலத் தமிழ் பெற்றுள்ள மாற்றங்களும் 
 
 வளர்ச்சிகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.   
  |