1.4 மெய்யெழுத்து மாற்றங்கள்
பல்லவர் காலத்தில் மெய்யெழுத்துகள் பல மாற்றங்களுக்கு
உள்ளாயின. குறிப்பாக மொழி முதல் யகரம் கெடுதல்,
மெய்யொலி இடையண்ணமாதல், இதழ்ச்சாயல் பெறுதல்,
தடையொலிகள் ஒலிப்பு உடைய ஒலிகளாக மாறுதல்,
மெய்யொலி ஒருங்கிணைதல், மெய்ம்மயக்கங்கள் மெய் உகர
முடிவைப் பெறுதல் போன்ற பல மாற்றங்களை அடைந்தன.
1.4.1 மெய்யெழுத்துகள்
மெய்யெழுத்துகளில் நகரமும், ஙகரமும் தவிரப் பிற
எழுத்துகள் ஒலியன்களாகக் கருதப்படுகின்றன. னகரத்திற்கு
நகரமும், மகரத்திற்கு ஙகரமும் மாற்றொலியன்களாகப் பல்லவர்
காலத்தில் பயன்படுத்தப்பட்டன. மொழியின் இடையிலும்,
இறுதியிலும் வருவனவற்றை னகரம் என்றும் மொழி முதல்
வரும்போது நகரம் என்றும் வேறுபடுத்தியிருப்பர். பல்லவர்
கால மெய்யெழுத்துகளைப் பின்வரும் சான்றுகள் மூலம்
அறியலாம்.
மெய்யெழுத்துகள் |
சான்று |
க் |
கூடு |
ச் |
சூடு |
ட் |
படி |
த் |
பதி |
ப் |
பாடு |
ம் |
மாடு, மனம் |
ஞ் |
ஞாலம் |
ந் |
நாலு |
ண் |
மணம், தண் |
ன் |
தன் |
ல் |
கலம் |
ள் |
களம், ஒளி |
ழ் |
பழம், ஒழி |
வ் |
வலம் |
ர் |
அரிய |
ற் |
அறிய |
• மாற்றங்கள் (Change of Consonants)
மெய்யெழுத்துகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப்
பார்ப்போம்.
• மொழி முதல் யகரம் கெடுதல்
யகரம் கெடுதல் சங்க காலத் தமிழிலும்,
சங்கம் மருவிய
காலத் தமிழிலும் தொடங்கி விட்டாலும் மிகுதியாகக்
காணப்படுவது பல்லவர் காலத் தமிழிலேயே ஆகும்.
சான்று:
யாராலும் |
- |
ஆராலும் |
யானை |
- |
ஆனை |
யாக்கை |
- |
ஆக்கை |
• யகரமும், றகரமும்
தொல்காப்பியர் காலத்தில் நாவளை ஒலியாக இல்லாதிருந்த
யகரமும் றகரமும் வடமொழிச் செல்வாக்கால் பல்லவர்
காலத்தில் நாவளை ஒலியாகின்றன. நுனியண்ண ஒலியான
றகரத்தின் உச்சரிப்பு மாறிற்று. இரட்டை றகரம் பல்லின
ஒலியாகிய தகரமாகி, இரட்டைத் தகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
முற்று |
> |
முத்து |
|
|
பற்றேதும் |
> |
பத்தேதும் |
|
|
ஆற்றுக்கால் |
> |
ஆத்துக்கால் |
|
|
சேற்று நிலம் |
> |
சேத்துநிலம் |
|
|
கொற்றவன்குடி |
> |
கொத்தவன்குடி |
> |
கொத்தகுடி |
கி.பி.எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே
இம்மாற்றங்களைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத்
தமிழில் ற் ற் > த் த் மாற்றம் அமைந்திருப்பதைக்
காணமுடிகிறது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றம்
தற்காலத்தில் நிலைத்து விட்டதை உணர முடிகிறது.
• மெய்யொலிகள் இடையண்ணச் சாயல் பெறுதல்
சில மெய்யொலிகள் இடையண்ண ஒலிகளின் தாக்குதலுக்கு
உள்ளாகி அண்ணச் சாயலுடன் ஒலிக்கப்படுகின்றன.
அ) ஞகரமாதல்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அப்பர் தேவாரத்தில்
பல
இடங்களில் பல்லொலி இடையண்ண ஒலியாக மாறும்
போக்கினைக் காணலாம்.
சான்று:
கைந்நின்ற |
> |
கைஞ்ஞின்ற |
(அப்பர் தேவாரம்,
கோயில், 5-5) |
மெய்ந்நின்ற |
> |
மெய்ஞ்ஞின்ற |
செய்ந்நின்ற |
> |
செய்ஞ்ஞின்ற |
மைந்நின்ற |
> |
மைஞ்ஞின்ற |
மேற்கூறிய சான்றுகளில் இடையண்ண அல்லது முன்னுயிர்
எழுத்தாகிய இகரம் மாற்றத்திற்குக் காரணமாகிறது. எனினும்
வேறு பல இடங்களிலும் காரணம் கூற முடியாத மாற்றம்
காணப்படுகிறது.
நெகிழ்த்து |
> |
ஞெகிழ்த்து |
முந்நாழி |
> |
முஞ்ஞாழி |
நகர் |
> |
ஞகர் |
கிளைமொழி வழக்குகளிலும், மலையாளத்திலும் தொடர்ந்து
பயன்படுத்தப் பெற்ற ஞகர மெய்யே இம்மாற்றத்திற்குக்
காரணமாக இருக்கலாம்.
ஆ) சகரமாதல்
தகரம் இரட்டித்து வரும்போது அதன்
முன்னர்
இடையண்ண ஒலி அல்லது முன்னுயிர் வருமாயின் அண்ணச்
சாயல் பெற்று, சகரமாகிறது.
சான்று:
வித்தை |
> |
விச்சை |
- |
திருவாசகம் 6.21 |
பித்தேற்றி |
> |
பிச்சேற்றி |
- |
திருவாசகம் 8.5 |
பித்தன் |
> |
பிச்சன் |
- |
திருவாசகம் 6.9 |
• தடையொலிகள் ஒலிப்புடையொலியாதல்
(Plosives become Voiced)
பல்லவர் காலத்தில் வெடிப்பொலிகள் ஒலிப்புடை
ஒலிகளாக உச்சரிக்கப் பட்டதற்குச் சான்றுகள் உண்டு. ஆனால்
இது எல்லாக் கிளைமொழிகளிலும் ஒரே மாதிரியாகக்
காணப்படவில்லை.
தமிழ்
இடப் பெயர்களோ, சிறப்புப் பெயர்களோ கல்வெட்டுகளில் வடமொழியில் வெட்டப்பட்டுள்ளன.
சில இடங்களில் வடமொழி ஒலிப்புடை ஒலிகள் கூட ஒலிப்பிலா ஒலிகளாக வடமொழியில்
எழுதப்பட்டுள்ளன. இவையே வேறிடங்களில் ஒலிப்புடை ஒலியாக எழுதப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுச் சான்றுகளை இரு தலைப்புகளின் கீழ்க் கொண்டு வரலாம்.
அ) உயிர்களுக்கு இடையில் வரும் வெடிப்பொலிகள்.
சான்று
பரக
(g) ன்.
ஆ) இன மூக்கொலியை அடுத்து வரும் வெடிப்பொலிகள்.
சான்று
நிலைதாங்கி
(g)
மூன்றாம் நந்திவர்மனுடைய
ஆவணங்களில்,
நிலைதாங்கி
(g)
விளங்கா (g) டு
நந்தா (d) விளக்கு
இன மூக்கொலிகளுக்குப் பிறகு வரும் வெடிப்பொலிகள்
ஒலிப்புடைய ஒலிகளாக மாறியது முதல் கட்டம்.
அடுத்த கட்டமாக உயிரிடைத் தடையொலிகள் ஒலிப்பு
ஒலிகளாக மாறின.
• ஒருங்கிணைவு (merger of sounds)
ஏறக்குறையச் சிறிது வேறுபாட்டை உடைய இருவேறு
ஒலிகள் பல்லவர் காலத்தில் ஒரே ஒலியாக மாறின.
அ) நகர னகர மெய்களின் ஒருங்கிணைவு
நுனிநா பல் மூக்கொலியான நகரமும், நுனிநா
நுனியண்ண
மூக்கொலியான னகரமும் ஒன்றாதல் பல்லவர் காலத்தில்
காணப்பட்ட ஒரு பெரிய மாறுதலாகும். தொல்காப்பியர்
காலத்திலேயே இம்மாற்றத்திற்கான அடிப்படை அமைந்துள்ளது.
எனினும் இம்மாற்றம் பல்லவர் காலத்தில்தான் மிகுதியாகக்
காணப்பட்டது. நகரத்திற்குப் பதிலாக னகரம் பத்து விழுக்காடு
எழுதப்பட்டுள்ளது. ஆனால் னகரத்திற்குப் பதிலாக ஞகரம்
இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.
இம்மாற்றம் சொல்லின் இடை, இறுதி, முதல் இரட்டித்து
வருமிடம் என்ற வரிசையில் ஏற்பட்டது எனலாம். னகரம்
நகரத்தின் இடத்தைப் பிடித்தது. இக்காலக் கட்டத்தில்தான்
நகரம் மொழிக்கு இறுதியில் வருவது மறைந்தது. தொகையாக
வரும் சொற்களில் தவிர நகரம் சொல் இடையில்
இடம்பெறுவதும் இல்லை. எனவே, சொல்லுக்கு முதலில் நகரமும்
பிறவிடங்களில் னகரமும் எழுதும் மரபு பல்லவர் காலத்தில்
தான் தொடங்கியிருக்கலாம் என்று கூற இயலும்.
சான்று
நல்லானை - அப்பர் தேவாரம் 6,
திருக்கீழ்வேளூர் - 50.5)
நம்பன் - அப்பர் தேவாரம் 6,
திருமுண்டீச்சுரம் - 7.3)
ஆ) ளகர ழகர மெய்களின் ஒருங்கிணைவு
சில கிளைமொழிகளில் குறிப்பாகத் தென் மாவட்டக்
கிளை
மொழிகளில் ளகர மெய்யும் ழகர மெய்யும் ஒன்றாதல் மற்றொரு
எழுத்து மாற்றமாகும். இங்கு இரு மாற்றங்கள் கவனிக்கத்
தக்கன.
வட மாவட்டக் கிளைமொழிகளில் ளகர மெய்
ழகர
மெய்யுடன் ஒன்றாகிறது. ஏழாம் நூற்றாண்டிலேயே ஆள்
என்பது ஆழ் என நாடாழ்ச்சி என்ற சொல்லில்
எழுதப்பட்டது. ஆள் (ஆளுதல்) என்ற வேர் தொடர்ந்து
ஆழ் என்னும் மாற்று வடிவத்தைப் பெற்றுள்ளது. வைணவச்
சான்றோர்களின் பெயரான ஆழ்வார் என்பது முதலில்
ஆள்வார் என்றே இருந்திருக்க வேண்டும். அரசர்கள்
ஆள்வார் என்றே அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுக்
கூறுகின்றது.
தென் மாவட்டங்களில் வலுவாக நிலை பெற்றுவிட்ட
மாற்றமாகிய ழகரமும் ளகரமும் ளகரமாக ஒன்றாதல்
மிகவும்
முக்கியமானது. இந்த ஒன்றாதலின் சுவடுகள் எட்டாம்
நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன.
சான்று:
கிழமை |
> |
கிளமை |
கிழக்கு |
> |
கிளக்கு |
புகழ் |
> |
புகள் |
• பிற மாற்றங்கள்
ஒரு மெய் மற்றொரு மெய்யாதல் பல்லவர் காலத்தில்
இருந்து வந்துள்ளது.
அ) பகரம் வகரமாதல்
உயிரிடையே பகரம் வகரமாகிறது. நிபந்தம்
> நிவந்தம்.
சில இடங்களில் பகரம் மகரமாக மாறிய மாற்றம் பல்லவர்
காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
சான்று:
நிபந்தம்
> நிமந்தம்
ஆ) மகரம் வகரமாதல்
சில இடங்களில் சொல் முதல் மகரம்
வகரமாக
ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
மிருக
> விருக
இ) இறுதி மெய் உகர முடிவு பெறல்
பண்டைக்
காலத்தில் வெடிப்பொலிகள் மட்டுமே மொழிக்கு இறுதியில் வருவதில்லை.
அவை உகர முடிவையே கொண்டன. ஆனால், இடைக்காலத்தில் வெடிப்பொலி அல்லாத
மெய்களும் சில உயிர்களும் கூட உகர முடிவைப் பெறத் தொடங்கின. |