1.5 ஆய்தம்
இலக்கண
நூல்களில் ஆய்தம் அசைக்கு உறுப்பாகும் எழுத்து என்று சங்க காலத்திற்குப்
பிந்தைய காலத்தில் கூறப்பட்டது. அதாவது அசைக்கு உறுப்பாகும் ஆய்தம்
என்றால், அதனை அளபெடை எனலாம்.
ஒலிப்புடை எழுத்துதான் அளபெடுக்கும். அஃது என்ற
சொல்லோடு மெய்ம்முதல் சொல் தொடருமானால் ஆய்தம்
மறையும் எனத் தொல்காப்பியத்திலேயே கூறுப்பட்டுள்ளது.
உயிர் முதல் சொல்லால் தொடரும் போது மாற்றம் பெறாது.
பிற்காலத்தில் ஆய்தம் தனி ஒலி என்றும் அது
தடையொலியிலிருந்து வேறுபட்டது என்றும் கருதினர்.
திருக்குறள் காலத்தில் ஆய்தம் தனி ஒலியாகக் கருதப்பட்டது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்தில் ஆய்தம்
ஒலிக்கூறாக இணைந்துள்ளது. பெருங்கதையில் ஆய்தம் தனி
ஒலியாக யகர மெய்யுடன் எதுகையில் வருகிறது.
சான்று:
“கய்ந் நவிலாளனை எஃகுள்ளடக்கி
எஃகொழி களிற்றின் வெய்துயிர்த் துயங்கி”
நம்மாழ்வாருடைய திருவாய்மொழியிலும் ஆய்தம்
யகரத்துக்கு எதுகையாக வருதலைக் காணலாம். இக்காலத்தே
தோன்றிய அவிநயமும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்கிறது.
“ஆய்தமும் யவ்வும் அவ்வோடு வரினே
ஐயென் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும் ”
என்ற அவிநய நூற்பா ஆய்தம் யகரத்தை ஒத்தது என்று
கூறுகின்றது.
பல்லவர் கால வேள்விக்குடிச் செப்பேட்டில்
ஈது ~ இஃது ~ இது என்ற வடிவங்கள் ஒரே
பொருளில் காணப்படுகின்றன. இதனாலும் ஆய்தம் யகர
ஒலி பெற்றமை விளங்கும்.
அதனுடைய
சரியான உச்சரிப்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. அஃதை >
அகுதை என்று குறிப்பிட்டிருப்பது ஆய்தத்தின்
உச்சரிப்பைக் காட்டுவதாக இருக்கலாம்.
எஃஃகிலங்கிய
கையர் என்பது ஆய்தம் அசை மெய்யாக அளபெடுத்து
வருவதற்குச் சான்றாகும். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரத்தில்
ஆய்தம் வருகிறது.
சான்று:
அழகு > அழஃகு
இந்த ஆய்தம் ஒலிப்புடையதாகும்.
இவ்வாறாக, பண்டைத் தமிழிலிருந்து பல்லவர் காலத் தமிழ்
சில வகைகளில் வேறுபட்டிருப்பதைக் கண்டோம். சங்கத்
தமிழின் பல கூறுகள் தொடர்ந்தும் சில கூறுகள் மறைந்தும்
வரக் காண்கிறோம். சங்க மருவிய காலத் தமிழின் சில புதிய
கூறுகளின் எண்ணிக்கை பல்லவர் காலத்தில் அதிகரித்தும் சில
புதிய கூறுகளைப் பெற்றும் பல்லவர் காலத் தமிழ் வளர்ந்தது
எனலாம்.
|