1.1 நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் என்றால் என்ன? இச்சொல்லுக்கான பொருளை முதலில் புரிந்து கொண்டால் தான் நாட்டுப்புற இலக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான விளக்கத்தை இரண்டு நிலைகளில் அறிந்து கொள்ளலாம்.

1.1.1 விளக்கம்

நாட்டுப்புறவியல் என்பதைப் பற்றிப் பல கருத்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 • அகராதிப் பொருள்
 • ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளை (meaning) வழங்குவது அகராதி (Dictionary). இதன்மூலம் சொல்லின் பொருளை நன்கு அறிந்து கொள்ள முடியும். நாட்டுப்புறவியல் என்பது குறித்து அகராதி தரும் கருத்தாவது: 'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது' என்பதாகும்.

 • அறிஞர்கள் கருத்து
 • அறிஞர்கள் 'நாட்டுப்புறவியல்' என்ற சொல்லுக்குப் பதில் நாட்டார் வழக்காறு என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வறிஞர் நா.வானமாமலை அவர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் 'நாட்டார் வழக்காறு' என்பதாகும். இவர் வழியைப் பின்பற்றி அறிஞர் தே. லூர்து என்பாரும் நாட்டுப்புறவியல் என்பதற்கு 'நாட்டார் வழக்காறு' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.

  மேனாட்டு அறிஞர்கள் 'Folk lore' என்ற சொல்லை 'நாட்டுப்புறவியல்' என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர் ஆலன் டண்டி என்பார் 'Folk' என்னும் மக்கள்; காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார். இவரது கருத்தைக் கீழ்க்காணும் ஆங்கிலப் பகுப்பு விளக்குகி்றது.

  Savage or Primitive
  Folk or Peasant
  Civilized Elite
  Pre-Non-Literate 1) Illiterate
  2) Rural
  3) Lower Stratum
  1) Literate
  2) Urban
  3) Upper Stratum

  எனவே 'Folk' எனப்படுவோர் மேனாட்டார் கருத்து விளக்கத்தின்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் என்பது பெறப்படுகிறது. அடுத்து 'lore' என்ற சொல்லை, 'படைப்பு' எனக் கொள்ளலாம். அது வழங்கப்படும் சூழல், பாடம் (Text), அமைப்பு இவற்றைக் கொண்டு முடிவு செய்யப்படலாம் என்றும் எடுத்துரைக்கின்றனர்.

  இவ்வாறு நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப் படையல் என்பன Folk lore என்ற ஆங்கிலப் பெயருக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 'Folk lore' என்ற சொல்லின் அமைப்பிலிருந்து இந்நாட்டுப்புறவியல் தொடர்பான பல்வேறு கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு, இதைப் பற்றிய ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன.

  1.1.2 நாட்டுப்புற மக்கள்

  நாட்டுப்புறவியல் இலக்கியத்தைப் படைப்பவர் நாட்டுப்புற மக்கள் ஆவர். எனவே இம்மக்கள் யாவர்? அவர்களது படைப்புகள் எத்தகு சூழலில், எத்தகு அமைப்பில் உருவாகின்றன என்பனவற்றை இப்பகுதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 • படைப்பாளன்
 • ஒரு நாட்டுப்புறப் பாடலைப் படைத்தவர் இவர்தான் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனத்தின் அனுபவ வெளிப்பாடாகக் கிராமத்துச் சூழலில் உருவாவது ஆகும். இப்பாடலின் தன்மைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

 • படைப்பின் தன்மைகள்
 • நாட்டுப்புற பாடல்களுக்கு எனச் சில தனித்தன்மை வாய்ந்த பண்புகள் காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்,

  • வாய்மொழியாகப் பரவும் தன்மையது (It is oral)
  • மரபு வழிப்பட்டது (It is traditional)
  • குறிப்பிட்டு இவர் தான் படைப்பாளர் என்று இல்லாதது (It is usually anonymous)
  • பல்வேறு வடிவங்களாகத் திரிபடையும் பண்பினது. (It exists in different versions)
  • ஒருவித வாய்பாட்டுக்குள் அடங்குவது (It tends to become formalized)

  ஆகிய தனித்தன்மைகள் கொண்டது.

  1.1.3 பாடல்களின் பதிவுகள்

  கிராமத்து மக்களில் குரல் இனிமையும், பாடல்களைப் பாடும் பழக்கமும் உடையவர்களே நாட்டுப்புறப் பாடல்களைத் தங்களது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். மரபு வழி என்பதால், முன்னோர் பாடியதைப் பின்பற்றி அக்குடும்பத்திலோ உறவிலோ, உள்ளவர் யாரேனும் பாடல்களைப் பாடிப் பாடி மனனம் செய்து கொள்வர் அப்பாடல்கள் மறைவதில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓலைச் சுவடியும், அச்சுக் கலையும் இல்லாத காலத்தில் காற்றில் கலந்த கவிதைகளாக இப்பாடல்கள் விளங்கின. இப்பாடல்களில், பெரும்பாலும் மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் எதுகை, மோனை, ஒரே சொல்லே திரும்பத் திரும்ப வருதல், ஒரு தொடரில் வந்த இறுதிச் சொல் அடுத்த வரியில் முதலில் வருதல் என்னும் அந்தாதி அமைப்பில் வருதல் ஆகிய கூறுகளே இருக்கும். மேலும் ஒருவர் பாடியதைப் போன்றே அடுத்தவர் பாடினாலும், ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைத் திறனுக்கும் நயத்திற்கும் ஏற்பப் பாடல்களைப் பாடிப் பரப்புதல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  இவ்வாறு நாட்டுப்புற மக்களே நாட்டுப்புற இலக்கியத்தின் படைப்பாளர்கள் என்று கூற வேண்டும். இப்பாடல்கள் கூட்டு முயற்சியில் உருவானவை. மேலும் மரபு வழியாகப் பரவும் பாரம்பரியச் சிறப்பினை, போக்கினைக் கொண்டவை. இப்பாடல்களை இன்னார் தான் பாடவேண்டும். இப்படித்தான் பாடவேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது எல்லாம் கிடையாது.