|  
          மக்கள் 
        தொடர்புச் சாதனங்களாகக் குறிப்பிடப்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி 
        போன்றவை நாட்டுப்புறவியலுக்கு மிகவும் பயனுள்ளவையாக விளங்குகின்றன. வானொலியும், 
        தொலைக்காட்சியும் கற்றவர்களிடம் மட்டுமல்லாது கல்லாத பாமரர்களிடமும் பெரும் 
        செல்வாக்கைப் பெற்றுள்ளன. இம் மக்கள் தொடர்புச் சாதனங்கள் நாட்டுப்புறவியலுக்குப் 
        பயனுள்ளவையாக அமைகின்றன என்பதற்குப் பல சான்றுகள் இருப்பினும் இங்கு நாம் 
        ஒரு சான்றினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பேரா.அ.மு.பரமசிவானந்தம் தமது 
        வாய்மொழி இலக்கியம் என்ற நூலை எழுதுவதற்கு வானொலியின் ஊக்கமே 
        காரணம் என்று கூறுகின்றார். எனவே வானொலியின் வழி நாம் இதன் பயனை உணர்ந்து 
        கொள்ள முடிகின்றது. மேலும், திரு.செ.அன்னகாமு திருச்சி வானொலி நிலையத்தில் 
        தம்முடைய  ஏட்டில் எழுதாக் கவிதைகள் ஒலிபரப்பப்பட்டு ஒலிப்பதிவும் 
        செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதன் மூலம் வானொலி நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுக்கும் 
        பயனுள்ளதாக விளங்குவதை அறிய முடிகின்றது.  
        
        இன்றளவில் குறிப்பாக மதுரை, திருச்சி, தூத்துக்குடி
        போன்ற வானொலி நிலையங்கள் நாள்தோறும் சில குறிப்பிட்ட
        நேரங்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்து
        வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும்பாலும்
        தமிழர் திருநாள் போன்ற விழா நாள்களில் நாட்டுப்புற
        நிகழ்ச்சிகளையும் நாட்டுப்புறம் தொடர்பான
        விளம்பரங்களையுமே ஒளிபரப்பி வருகின்றன. 
        
           |